அரசியல்வாதி தனுஷ்!
"வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "கேப்டன் மில்லர்'’படத்தில் நடித்துவருகிறார். இதனிடையே தனுஷ், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியிருந்தார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் கடந்த வருடமே வெளியான நிலையில், இப்படம் கைவிடப்பட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் "இப்படம் கைவிடப்படவில்லை என்றும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும், அரசியல் பின்னணியை வைத்து இப்படம் உருவாகவிருக்கிறது எனவும் தெரிவித்தனர்.
இதனிடையே மாலத்தீவுக்கு விசிட்டடித்து ஃபோட்டோ ஷூட் நடத்திய ராஷ்மிகா, அந்த "ஹாட்'டான படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு, தனது ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்.
கிரிக்கெட்டர் சிவகார்த்திகேயன்!
கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் பாலிவுட்டில் வந்திருக்கிறது. குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பயோபிக் "எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி' என்ற பெயரில் வெளியாகி இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக் தமிழில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, ஐ.பி.எல். விளையாட்டில் கிடைத்த வெளிச்சத்தின் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்த நடராஜன், கிடைத்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தார். இருப்பினும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவருக்கு ஏற்பட்ட காயம் அதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
இந்திய அணிக்காக நடராஜன் சில போட்டிகளே விளையாடியிருந்தாலும், தமிழகம் அவரைக் கொண்டாடியது. இதனைத் தொடர்ந்து நடராஜனின் பயோபிக் எடுக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அதற்கு நடராஜன் மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், நடராஜன் தற்போது பயோபிக் எடுக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் தோனி!
சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி, விவசாயம், விளம்பரம் நடிப்பது, படம் தயாரிப்பது என அடுத்த கட்டத்தை நோக்கியும் பயணித்துவருகிறார்.
அந்தவகையில் "தோனி என்டர்டெய்ன்மெண்ட்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் அவர், கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு "ப்ளேஸ் டு க்ளோரி' (இப்ஹக்ஷ்ங் ற்ர் ஏப்ர்ழ்ஹ்) என்ற ஆவணப்படத்தையும், "தி ஹிடன் இந்து' (பட்ங் ஐண்க்க்ங்ய் ஐண்ய்க்ன்) என்ற புராணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரில்லர் படத்தையும் தயாரித்துவருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படம் தயாரிக்கவுள்ளாராம். தோனிக்கு வடஇந்தியாவை விட ஏராளமான ரசிகர்கள் தென்னிந்தியாவில் இருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளாராம். ஏற்கனவே தோனி, நயன்தாராவை வைத்து ஒரு படமும், விஜய்யை வைத்து ஒரு படமும் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தோனி தரப்பு நயன்தாரா படத்திற்கு மட்டுமே மறுப்பு தெரிவித்திருந்தது.
மனம் தளரா முருகதாஸ்!
"ரமணா', "கஜினி', "கத்தி', "துப்பாக்கி' என பல ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநர் அந்தஸ்தில் இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் இயக்கத் தில் கடைசியாக வெளியான "தர்பார்' படம் போதிய வரவேற்பைப் பெறாததால், விஜய்யுடனான அடுத்த பட வாய்ப்பு கைநழுவிப் போனதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில்... இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யாவை வைத்து கஜினி இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். கடந்த 2005-ஆம் ஆண்டு இவர் களது கூட்டணியில் வெளியான "கஜினி' படம் பெரும் வரவேற்பைப் பெற்றநிலையில், இதன் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில்தான்... கஜினி இரண்டாம் பாகத்திற்கான பணியை ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கியுள்ளாராம். மேலும் இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நடிகர்கள், தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அனைத்தும் சுமுகமாக முடியும் பட்சத்தில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-அருண்பிரகாஷ்