வருணாசிரமம் கோலோச்சிய இந்தியாவில், அரசியலமைப்பு சட்டம் வரையறுத்த பிறகு, சனாதனத்திற்கு சம்மட்டி அடியாய் இறங்கியது ஒடுக்கப்பட்டவர் மட்டுமே போட்டியிட முடியும் என்ற தனித்தொகுதி முறை. ஆனாலும் அது, ஆதிக்கம் செலுத்து கிறவர்களுக்கு வேறு வழியே இன்றி தவிர்க்க முடியாத சூழலில் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்ததே தவிர மதிக்கும்படியாக வைத்திருக்கவில்லை.
ஊராட்சி மன்றத் தலைவராகவோ, சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினராகவோ ரிசர்வ் தொகுதியிலிருந்து அந்த தொகுதியின் மக்களால் வாக் களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் சார்ந்திருந்த கட்சியினராலும், அவற் றின் பொறுப்பாளர்களாலும், அவமரியாதையாக கையாளப்படுவதை ஊடகங்கள் வாயிலாக பார்த்திருக்கிறோம்; இப்படியான ஒரு பிரச் சனையை மையக்கருவாக வைத்து உருவாகியிருக் கிறது ‘மாமன்னன். வயதில் மூத்தவரான அரசியலிலும் நீண்ட அனுபவம் உள்ளவரான மாமன்னன் (வடிவேலு) ரிசர்வ் தொகுதியில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். ஆனாலும் அந்த கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கும் வயதில் சிறியவரான, அரசியல் அனுபவமும் குறைந்தவரான ரத்தினவேலு(பகத்பாசில்) முன்னே உட்காரக் கூட முடியாத நிலையில் இருக்கிறார். அதை தட்டிக் கேட்டு தந்தையின் சுயமரியாதையை காப்பாற்ற முனைகிறார் மாமன்னனின் மகன் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்) ஈவிரக்கமில்லா வில்லத்தனமும், அனைவரையும் கட்டுப்படுத்தும் ஆதிக்க மனப் பான்மையுள்ளவராகவும் நடிப்பில் பிரமாதப்படுத்தி யிருக்கிறார் பகத் பாசில்.
அதிகாரம் இருந்தும், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பதவி இருந்தும், சுயமரியாதை யில்லாமல் நடந்து கொள்கிறவராக இருக்கும் மாமன்னனுக்கு, அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவரான அதிவீரன் வந்து சொல்லிக் கொடுத்து சுயமரியாதையை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், மீண்டும் தேர்தலில் நிற்க வைத்து அதிகாரம், பணம், படை என எல்லா பலங்களையும் உடைத்து இறுதியாய், மதிக்காதவர்களை எல்லாம் இன்னும் உச்சபட்சமாய் எழுந்து நின்று நிற்க வைத்து வணக்கம் செலுத்த வைக்கிறார். சட்டமன்றத்தில் சபாநாயகராக பதவியைப் பெற வைத்து வெல்கிறது சமூகநீதி. வடிவேலுவும் உதயநிதியும் அளந்து பேசுவதோடு, அழுத்தமாகப் பேசி பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்கள். ஆதிக்கவர்க்கத்தின் முன் கூனிக்குறுகி நிற்கும் தந்தைக்கு நீதிகிடைக்க எரிமலையாக வெடிப்பதும், திட்டமிட்டு எதிரிகளை எதிர்கொள்வதும் மிகச்சிறப்பு.
இன்னும் இன்னும் கிராமங்களில் பின்பற்றப் படும் தீண்டாமை கொடுமைகளில் பட்டியலின சமையல்காரர் சமைத்தால் சாப்பிட மறுப்பது, பட்டிய லின பஞ்சாயத்து தலைவரை தரையில் உட்கார வைப்பது, ரிசர்வ் தொகுதியானால் தேர்தல் புறக்கணிப்பு செய்வது போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அதைப்போலவே படத்திலும் ஆதிக்கசாதி யினரின் கிணற்றில் குளித்த காரணத்திற்காக கல்லாலேயே அடித்துக் கொல்லப்படும் நான்கு சிறுவர்களில் ஒருவன் மட்டும் தப்பித்து வருகிறவனாக இருக்கிறான் அதிவீரன். நியாயம் கேட்கப்போன இடத்தில் கொலைகாரர்களை காப்பாற்ற ஊரே ஒன்று திரண்டு நிற்பதால் அரசியலாகவும் சமரசம் செய்து
கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்கிறார் மாமன்னன். இதுவும் சமகாலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியலில் களமாடுகிறவர்களுக்கு ஏற்படுகிற சிக்கலை, நிர்ப்பந்தத்தை, அரசியல் கட்டாயத்தினை, எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையினை நமக்கு காட்டுகிறது.
சட்டக் கல்லூரியில் முதல் தலைமுறை மாணவராக நுழைகிற ஒடுக்கப்பட்ட இளைஞன் படும் கஷ்டத்தை பரியேறும் பெருமாளிலும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதிக்க மனப்பான்மை மிக்க காவல்துறை அதிகாரிக்குமான பிரச்சனையை பேசிய "கர்ணன்' ஆகிய படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜின் மூன்றாவது படம் மாமன்னன். இதிலும் தீவிரமான அரசியல் அதிகாரத்தின் வலிமை பற்றியும் அதன் தேவை பற்றியும் பேசி உள்ளார்.
அனல் தெறிக்கும் வசனங்கள் மூலம் நுண்ணிய சாதிய மனநோயின் உணர்வுகளை தோலுரித்தெடுக்கிறார். பன்றிக்கு இறக்கை முளைப்பது, ஆதிக்கசாதி மனப்பான்மை உள்ளவர் வேட்டை நாய் வளர்ப்பவராக இருப்பது, அடி வாங்குகிறவரின் பின்னணியில் கவிதை வாசிப்பது எனப் பல குறியீடுகளை படம் முழுவதும் பரவ விட்டிருக்கிறார்.
இது போன்ற சமூகநீதி, அரசியல் அதிகாரப் பகிர்வு, அதில் சுயமரியாதை ஆகியவற்றை மையப்படுத்தி பேசப்படுகிற படங்களில் கூட பெண் கதாபாத்திரத்திற்கென்று அதிக முக்கியத்துவம் தராமல் போவது நடக்கத்தான் செய்கிறது. படத்தில் லீலாவை (கீர்த்தி சுரேஷ்) போராளியாகக் காட்ட முனைந்திருக்கிறார்கள். ஆனால் வீட்டினை அடித்து நொறுக்க ஆட்கள் வரும் போது கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருக்க சொல்லும்போது பதில் பேசாமல் போகிறவராக இருக்கிறார். மாமன்னனின் மனைவி கட்டி லின் அடியில் பதட்டத்தோடு பயந்துபோய் ஒளிந்து கொள்கிறவராக இருக்கிறார் போன்று காட்சி அமைத்திருப்பது இன்னும் ஆணாதிக்க படைப்பு மனப்பான்மை நெருடலாகவே இருக்கிறது.
ஒடுக்கப்படுகிறவர்களின் அரசியல் அதிகாரம் குறித்து பேசுகிற படம் என்பதோடு மட்டுமல்லாமல் காலத் திற்கும் முணுமுணுக்கிற பாடல்களையும், படம் முழுவதும் ரசிகர்களை ஒன்றிப்போக வைப்பதற்கான பின்னணி இசையை தந்திருக்கிறார் ஏ.ஆர். ரகுமான். முழுநேர அரசியலில் ஈடுபட்டு விட்டதாலும், அமைச்ச ராகி விட்டதாலும் இதுவே தனது கடைசிப்படம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின். இறுதியாய் சமூகநீதி அரசியல் பேசும் படத்தில் நடித்து முடித்திருப்பது பெரும் பாராட்டுக் குரியது.
-தாஸ்