அடுத்தடுத்து விலகல்!
2021ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் "சென்னை ஸ்டோரி' என ஒரு சர்வதேச படம் உருவாவதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் டிமேரி என் முராரி எழுத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான "‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்'’ என்ற ரொமாண்டிக் காதல் நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு தொடங்கவிருந்த சூழலில் சமந்தா படத்திலிருந்து விலகினார். இதையடுத்து ஸ்ருதிஹாசன் கமிட்டானார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். ஆனால், திடீரென ஸ்ருதிஹாசனும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகைகள் விலகுவது ரசிகர்கள் மத்தியில் கேள்வியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தள்ளிப்போன தோசா!
ரஜினியின் "வேட்டையன்' படத்தை இயக்கிவரும் "ஜெய்பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல், இந்த மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கவுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு நானியுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக தெலுங்கு வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. சமீபத்தில் நானியைச் சந்தித்து ஒரு கதை கூற, நானிக்கும் கதை பிடித்துப்போக முழுக்கதையை தயார் செய்ய ஞானவேலுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே ஜெய்பீம் படத்தைத் தொடர்ந்து இந்தியில் ‘"தோசா கிங்'’ என்ற தலைப்பில் மறைந்த சரவணபவன் ராஜகோபால் -ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு ஒரு படம் இயக்க கமிட்டானார் த.செ ஞானவேல். ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கு முன்னால், வேட்டையன் பட வாய்ப்பு வந்ததால் அதைத் தொடங்கிவிட்டார். இப்படத்தை முடித்துவிட்டு, தோசா கிங் படம் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நானி படத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தோசா கிங் படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
உயரும் சம்பளம்!
இந்தியில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார் பிரியாமணி. "ஜவான்', "ஆர்ட்டிகிள் 370' படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து அண்மையில் வெளியான ‘"மைதான்'’ படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது. கைவசம் "கைமாரா' என்ற கன்னட படமும் அவரிடம் உள்ளது. மேலும் "கொட்டேஷன் கேங்க்' என்ற பான் இந்தியா படத்திலும் நடித்துள்ளார். இதில் இதுவரை அவர் நடித்திராத சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். தொடர்ந்து தனது படங்கள் ஹிட்டடித்து வருவதாலும், அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளதாலும் குஷியில் இருக்கும் பிரியாமணி, தனது சம்பளத்தையும் உயர்த்தலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.
குதிரைப் பயிற்சி!
"கங்குவா' படத்தை முடித்துவிட்டு சுதாகொங்கரா படத்தில் நடிக்க கமிட்டானார் சூர்யா. அதையடுத்து வெற்றிமாறனின் "வாடிவாசல்' படத்திற்கு போவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த நிலையில் சுதாகொங்கரா படம் சற்று தாமதமாக ஆரம்பிக்கவுள்ளதால், உடனே கார்த்திக் சுப்புராஜ் படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்திற்காக குதிரையேற்றப் பயிற்சியில் சூர்யா ஈடுபட்டுவருகிறாராம். இதனிடையே "இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் ஓ.கே. சொல்லியுள்ளாராம்.
-கவிதாசன் ஜெ.