"ஒரு படம் ஓடுறதுக்கு ஹீரோவும், அவரோட ரசிகர்கள் கூட்டமும் மட்டும் காரணமில்ல. ஹீரோயினும்தான் காரணம். ஹீரோயின்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கு. என்ன ஒண்ணு... ஹீரோயின்களோட ரசிகர்கள் அதைப் பெருசா வெளிக்காட்டிக்க மாட்டாங்க. அதனால, ஹீரோக்களுக்கு இணையா ஹீரோயின்களுக்கும் சம்பளம் தரணும்'' என முதன்முதலில் வெளிப்படையாக உரிமைக்குரல் எழுப்பியவர் சமந்தா.
ஆனா... இப்படியெல்லாம் பேசாம, செயலில் காட்டியிருக்கார் நயன்தாரா.
"மாயா', ‘"அறம்', ‘ஆகிய நயனின் படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் வெளியான நயனின் "கோலாமாவு கோகிலா' பல முக்கிய ஹீரோக்களின் படங்களின் வசூலைவிட முன்னிலையில் இருந்திருக்கிறது.
லேட்டஸ்ட்டாக வெளியாகியிருக்கும் "இமைக்கா நொடிகள்' படத்திற்கு பல தியேட்டர்களில் நயனின் கட்-அவுட், பேனர்களை அலங்கரித்து, பட்டாசு வெடித்து அமர்க்களமாக கொண்டாடியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை... அதிலும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேடிப்பிடித்து நடிப்பதால், இந்த மவுசு நயனுக்கு. இது கவர்ச்சிக்கு அப்பாற்பட்ட மவுசாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம்... ஆகிய மும்மொழிகளிலும் நயனின் கால்ஷீட்டுக்காக பெரிய பெரிய ஹீரோக்கள் காத்திருக்கிறார்கள்.
நயனை துரத்திப்பிடித்து, சிரஞ்சீவியின் "சைரா' படத்திற்கு கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள்.
தமிழில், கமலின் படத்திற்காக நயனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி நயனுக்கு மவுசு ஏற... ஏற... நயனிடம் பதவிசு கூடிக்கொண்டே இருக்கிறது.
நான்கு கோடி சம்பளத்தை எட்டியிருந்தபோது... "இமைக்கா நொடிகள்' பட ரிலீஸ் ஃபைனான்ஸ் சிக்கலில் சிக்கி... சில காட்சிகள் திரையிடமுடியாத நிலை வந்தபோது... தனது சம்பளத்தில் மிகப்பெரும் தொகையை விட்டுக்கொடுத்திருக்கிறார் நயன்.
பாலியல் புகார் சொல்லி, பிரபலங்களை திக்குமுக்காட வைத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி... சினிமாவில் நடிக்காமலே தனக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
"புளுகுணி' என விமர்சிப்பவர்களைவிட... அடுத்து யாரைச் சொல்லுவார் ஸ்ரீரெட்டி என எதிர்பார்ப்பவர்கள்தான் அதிகம்.
இதனால் ஸ்ரீரெட்டிக்கு மவுசு ஏற... ஏற... ரவுசும் ஏறிக்கொண்டிருக்கிறது.
"ரெட்டி டைரி' படத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் கவனமா இருந்ததால்... சில வாரங்கள் ஸைலண்ட்டாக இருந்த ஸ்ரீரெட்டி, மறுபடி... ஆரம்பித்துவிட்டார் வேலையை.
கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி அதிரடியாக சொல்லியிருக்கிறார்.
""சச்சின், ஹைதராபாத் வந்தால், நடிகை சார்மி போய் பார்ப்பார்'' என ஓபன் கிசுகிசு சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமா... தெலுங்கின் சீனியர் டைரக்டரும், சூப்பர்ஹிட் டைரக்டருமான ஸ்ரீராகவேந்திர ராவ் குறித்து... "ஹீரோயின்களின் அழகை முழுக்க பயன்படுத்தத் தெரிந்தவர்' என சூசகமாகச் சொல்லியுள்ளார் ஸ்ரீரெட்டி.
திருமணத்திற்கு முன்பு மட்டுமல்ல... திருமணத்திற்குப் பின்பும் சமந்தாவின் சினிமா மார்க்கெட் மவுசாக இருக்கிறது.
ஏழைக்குழந்தைகளின் இருதய சிகிச்சை மற்றும் பிற உதவிகளுக்காக "பிரதியூஷா அறக்கட்டளை'யை நடத்திவரும் சமந்தா, இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை கிடைக்கச் செய்து காப்பாற்றியிருக்கிறார். அறக்கட்டளைக்கு தேவையான பணத்திற்காகத்தான் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.
அவரின் நல்ல மனசுக்கு ஏற்ப, அவருக்கு மவுசு ஏற... ஏற... அவரிடம் எளிமையும் அதிகரித்தபடி இருக்கிறது.
சமீபத்தில் சென்னை-ராயப்பேட்டை, ஜாம்பஜார் மார்க்கெட்டில் ஒருநாள் காய்கறி கடை போட்டார். அறக்கட்டளை நிதிக்காக சமந்தாவே காய்கறி வியாபாரம் செய்ய... பணத்தை அள்ளிக்கொடுத்து மக்கள் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
-ஆர்.டி.எ(க்)ஸ்