விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் "சர்கார்', அஜீத்-சிவா கூட்டணியின் "விஸ்வாசம்', சூர்யா-செல்வராகவன் கூட்டணியின் "என்.ஜி.கே.' என முக்கியமானவங்கள்ல அதி முக்கியமானவங்களோட மூணு படங்களும் தீபாவளிக்கு வேட்டாகவும், விருந்தாகவும் வரவிருந்தன.
இந்த மூணு படங்களும் தொடங்கும்போதே... "தீபாவளி ரிலீஸ்' எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால்... சினிமா உலகம் அடித்த ஸ்டிரைக் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு முடிவடையாததால், "நாங்க பொங்கலுக்கு வர்றோம்' என போட்டியிலிருந்து விலகிக்கொண்டது அஜீத்தின் "விஸ்வாசம்'.
விஜய் படத்துக்கும், சூர்யா படத்துக்கும் இடையேதான் தீபாவளி போட்டி என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்... ""என்.ஜி.கே. படம் தீபாவளிக்கு வராது... ஸாரி...'' எனச் சொல்லிவிட்டார் செல்வராகவன்.
""இந்தப் படத்துல நல்ல விஷயம் சொல்லப்போறோம். அதனால் கொஞ்சம் தாமதமாகுது. "தீபாவளிக்கும், பொங்கலுக்கும் வர்றதுக்கு அது பட்டாசும், பொங்கச்சோறும் கிடையாது. அது சினிமாப் படம். எப்ப வரணுமோ... அப்பத்தான் வரும்'னு டைரக்டர் பாலா அண்ணன் ஒருமுறை சொன்னாரு. அதுதான் ஞாபகத்துக்கு வருது. எதிர்பாராம தள்ளிப்போறதை ரசிகர்கள் பொறுத்துக்கணும்'' என சூர்யாவும் சொல்லியுள்ளார்.
இப்படி... எதிர்பார்த்தது... எதிர்பாராதவிதமா அமைய...
எதிர்பாராத விஷயம் ஒண்ணு அறிவிக்கப்பட்டிருக்கு.
நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்த தனுஷ்-கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியின் "எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சில நாட்களுக்கு முன் முடிந்துவிட்டன. இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார் கௌதம்.
ஆக... விஜய்யின் "சர்கா'ரும், தனுஷின் "தோட்டா'வும் தீபாவளி கோதாவில் இறங்குகிறது.
இதில் சென்ட்டிமெண்ட்டான ஒரு விஷயத்தையும் சொல்கிறார்கள் சினிமா வட்டாரங்களில்.
2007 தீபாவளிக்கு விஜய்யின் "அழகிய தமிழ் மகன்' படமும், தனுஷின் "பொல்லாதவன்' படமும் வெளியானது.
வெற்றியில் முந்தியது தனுஷ் படம்.
2009 பொங்கலுக்கு விஜய்யின் "வில்லு' படமும், தனுஷின் "படிக்காதவன்' படமும் வெளியானது.
வெற்றியில் முந்தியது தனுஷ் படம்.
2011 பொங்கலுக்கு விஜய்யின் "காவலன்' படமும், தனுஷின் "ஆடுகளம்' படமும் வெளியானது.
வெற்றியில் முந்தியது தனுஷ் படம்.
அதற்காக இந்த தீபாவளிக்கும் இந்த சென்ட்டிமெண்ட் ஒர்க்-அவுட் ஆகும் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால்... விஜய் தனது "விஜய் மக்கள் இயக்கம்'’உறுப்பினர் சேர்க்கையை அரசியல் கட்சிகளுக்கு இணையாக வேகப்படுத்தியிருக்கிறார்.
""விஜய் ரசிகர்களை வெறும் ரசிகர்களாகவே வைத்திருக்காமல்... அவர்களுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத்தருவோம்'' என ஏற்கனவே தெரிவித்திருக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., "விஜய்யை முதலமைச்சராக்கிப் பார்க்க அவரின் ரசிகர்கள் ஆசைப்படுவதில் தவறு இல்லையே...' என்றும் சமீபத்தில் சொல்லியிருக்கிறார்.
விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அரசியலுக்கு சூசகமாக "சர்கார்' படத்தில் மெஸேஜும் வைத்திருக்கிறார். சமகால அரசியலை ஒரு கை பார்த்திருக்கிறார்.
சமீபத்தில் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து ஹிட்டடித்த "பரத் அனே நேனு' படத்தில் முதலமைச்சராவதுபோல் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.
அதுபோல.. "சர்கார்' படத்தில் விஜய் முதல்வராவது போல காட்சி இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.
"துப்பாக்கி', "கத்தி' என ஏற்கனவே ஹிட்டடித்த விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் "சர்கார்', ஸ்ட்ராங்காக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே "இளைய சூப்பர்ஸ்டார்' என தனுஷை அவரின் ரசிகர்கள் சொல்லிவருகிறார்கள். தனது ரசிகர்மன்றத்தை பலப்படுத்தும் விதமாக தனது நண்பரும், "திருடா திருடி' படத்தின் டைரக்டருமான சுப்ரமணிய சிவாவை அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தின் தலைவராக்கியிருக்கிறார் தனுஷ்.
ரஜினியின் அரசியலுக்கு வலு சேர்க்க... தனது மன்றத்தையும் அதில் ஈடுபடுத்தவிருக்கிறாராம் தனுஷ். இதற்காக அடுத்த மாதம் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் தனுஷ். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இம்மாதம் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியின் "வடசென்னை' படம் வெளியாகிறது. இப்படி தனுஷ் ரசிகர்களும் உற்சாக மூடில் இருக்கும் நிலையில்... தனுஷ்- கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியின் "எனை நோக்கி பாயும் தோட்டா'வும் ரொம்ப ஸ்டைலிஷாக உருவாகியிருக்கிறது.
-ஆர்.டி.எ(க்)ஸ்