டைரக்டர் தனுஷ் பிஸி!

தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக வலம்வந்தாலும் தனது இயக்குநர் கனவை "ப.பாண்டி' மூலம் நிறைவேற்றியிருந்தார் தனுஷ். இனிமேல் இயக்குவதிலும் நடிப்புக்குச் சமமாக கவனம் செலுத்த முடிவெடுத்துள் ளார். "ராயன்' படத்தைத் தொடர்ந்து ‘"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி முடித்துள்ள அவர், அதன் ரிலீஸுக்கு முன்பே, தனது அடுத்த படத்தை இயக்கத் தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார். மேலும் நித்யாமேனன், ராஜ்கிரண், சத்யராஜ் என பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இவர்களோடு டோலிவுட் நடிகை ஷாலினி பாண்டேவும் இணைந்து நடிக்கிறார். ஆகாஷ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தேனியில் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வருகிறது.

tt

வில்லனா? ஹீரோவா?

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்துவந்த சூர்யா, தற்போது மும்பையில் வீடு வாங்கி, தனது குழந்தைகளையும் அங்கேயே படிக்க வைத்து வருகிறார். அதனால் அடிக்கடி மும்பை பறந்துவரும் அவர், பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில் பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரத கர்ணன் குறித்த கதையில் கர்ணனாக நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால் இந்தப் படம் தற்போது கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தச்சூழலில் தற்போது "தூம் 4'’ படத்தில் அவர் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. ஆனால் சூர்யா, இதுவரை எந்த பதிலும் ‘"தூம் 4'’ படக்குழுவிற்கு கொடுக்கவில்லை. வில்லனாக நடிக்கலாமா என்றும் அதேசமயம் வில்லனாக தமிழில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றதால் அந்த சென்டிமெண்ட் பாலிவுட்டில் தொடருமா என்றும் பல்வேறு கணக்குகள் போட்டுவருகிறார். அவருக்கு சீனியர் நடிகர் கமலே ‘"கல்கி 2898 ஏ.டி.'’ படத்தில் வில்லனாக நடித்ததை சூர்யாவின் நெருங்கிய வட்டாரத்தினர் நினைவூட்டுகிறார்கள்.

எதிர்பார்ப்பில் விஜய் 69!

இந்திய அள வில் அதிக வரி கட்டிய நடிகர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளவராகவும், இன்னமும் நடித்தால் வசூலை வாரிக்குவிக்கிற ஹீரோவாகவும் இருந்த போதிலும் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார் விஜய். தீவிர அரசியலுக்குமுன் அ.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படம் விஜய்யின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இதனால் படத்தின் ஒவ்வொரு மூவும் பார்த்துப் பார்த்து எடுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளியை குறிவைத்து படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்ட மிட்டுள்ளனர். இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக பூஜாஹெக்டே கமிட் டாகியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் "பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். இவரைத் தவிர்த்து "விஜய் 69' படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபிதியோல் ஒப்பந்தம் செய் யப்பட்டுள்ளார். இவர் சூர்யாவின் "கங்குவா' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இதனிடையே படத்திற்கு அனிருத் இசை, சத்யன்சூரியன் ஒளிப்பதிவு, பிரதீப் இ.ராகவ் எடிட்டிங் என முக்கிய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ள இந்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

சசிகுமார் நம்பிக்கை!

"கத்துக்குட்டி' திரைப்படம் மூலம் சமூக பிரச்சனைகளை கையில் எடுத்த இயக்குநர் இரா.சரவணன். இவரது இயக் கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் "நந்தன்'. இப்படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர். ‘இரா’ என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தேர்தல் அரசியலில் எளிய மக்கள் போட்டியிட்டால், என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும் என்பதை அழுத்தமான காட்சிகள் மற்றும் வசனங்களுடன் இந்தப் படத்தில் சொல்லியிருப்பதாக டிரைலர் வாயிலாக தெரிய வருகிறது. மேலும் இரா. சரவணன் -சசிகுமார் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான ‘"உடன் பிறப்பே'’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்ததால் இப்படமும் இருவருக்கும் ஒரு முக்கிய படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

-கவிதாசன் ஜெ.