இணையும் ஜோடி!
பாலிவுட்டில் 2023ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் "கில்'. ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இந்த படம் இப்போது கோலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு இயக்குநர் ரமேஷ்வர்மா இயக்குகிறார். நாயகனாக துருவ்விக்ரம் நடிக்க வில்லனாக "உறியடி' விஜயகுமார் நடிக்கிறார். ஹீரோயின் தேடலில் இளம் நடிகைகள் கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கேதிகா சர்மா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனுபமா பரமேஸ்வரன் தற்போது முன்னிலையில் இருக்கிறாராம். ஏற்கனவே "பைசன்' படத்தில் துருவ்விக்ரமும் அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளதால் மீண்டும் இணைந்தால் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்குமென படக்குழு நினைக்கிறது. இதனால் துருவ் விக்ரம் -அனுபமா காம்போ மீண்டும் அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி 50
இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய ஆளுமையாக திகழும் ரஜினியின் 50ஆவது ஆண்டு திரைப்பயணத்தையொட்டி திரைப்பிரபலங்கள் தொடங்கி அரசியல்கட்சித் தலைவர்கள் வரை ஏராளமானோர் வாழ்த்து மழை பொழிந்தனர். அந்த வகையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “"கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்திற்கு ஐம்பதாவது ஆண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடியிருப்பார். திரையுலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து, ரஜினிக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்கவேண்டும்''’என கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சங்கங்கள் விரைவில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இந்தாண்டு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் மாதம் விழாவை நடத்த திட்டமிட வாய்ப்புள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில், கலைஞரின் சினிமா பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழ்த் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து "கலைஞர் 100’ பாராட்டு விழா' ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தியின் ப்ளான்!
சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ், சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை. கடந்த மாதம் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியாகியிருந்த "உப்பு கப்புரம்பு'’ படம் பெரியளவு வெளிச்சத்திற்கு வரவில்லை. காரணம், இப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியானதே. இந்த சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக தனது இமேஜ் சரிந்துவருவதை உணர்ந்த அவர், இனிமேல் அதை விட்டுவிடக்கூடாது என முடிவெடுத்து, அடுத்து வெளியாகவுள்ள ‘"ரிவால்வர் ரீட்டா'’ படத்தை பெரிய அளவில் புரமோட் செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகளில் இறங்கியிருக்கிறார். இப்படத்தில் லீட் ரோலில் அவர் நடித்துள்ளளார். வரும் 27ஆம் தேதி படம் வெளியாகிறது.
போலீஸ் நயன்!
நயன்தாரா, குறுகிய இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் நடித்துள்ள படம் ‘"டியர் ஸ்டூடண்ட்ஸ்'. இப்படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் இறுக்கமான முகத்துடன் மிடுக்கான தோற்றத்தில் அவர் தோன்றியிருப்பதால், இப்படம் தனக்கு ஒரு புது இமேஜைக் கொடுக்கும் என நம்புகிறாராம் நயன்தாரா. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் இந்தாண்டு ஒரு படம் கூட தனது நடிப்பில் இன்னும் திரையரங்குகளில் வெளி யாகாததால், இந்த படம் அந்த குறையை போக்கும் என எதிர்பார்க்கிறார். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள தாக மலையாளத் திரை வட்டாரம் தெரிவிக்கின்றது.
-கவிதாசன் ஜெ.