ரீ-மேக் ராசி!
அனுஷ்கா நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் "அருந்ததி'. இப்படத்தின் இந்தி ரீமேக் தள்ளிப்போய் கொண்டேயிருக்கிறது. அனுஷ்கா கேரக்டரில் நடிக்க கரீனா கபூர், தீபிகா படுகோன் போன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமாக முடியாததால் படம் நகராமல் இருந்தது. தற்போது மீண்டும் அந்த முயற்சிகள் ஆரம்பித்து ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்த முயற்சியில் இயக்குநர் மோகன்ராஜா களமிறங்கியுள்ளார். படம் வெளியாகி பல ஆண்டுகளைக் கடந்துள்ளதால் சில மாற்றங்களை அவர் செய்துள்ளார். ஏற்கனவே இவர் பல ரீமேக் படங்களை எடுத்துள்ளதால் அந்த ராசி இதிலும் ஒர்க்அவுட் ஆகும் என படக்குழுவினர் நம்புகிறார்கள். இப்படம் மூலம் மோகன் ராஜா பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது கூடுதல் தகவல்.
குழப்ப விக்ரம்!
விக்ரம் அடுத்து எந்தப் படத்தில் நடிப்பார் என்பதில் தொடர் குழப்பம் நீடித்துவருகிறது. முதலில் ‘"மண்டேலா'’ பட டைரக்டர் மடோன் அஷ்வின் கமிட்டானார். பின்பு கதை முழுமையடையாததால் படப்பிடிப்பு டேக் ஆஃப் ஆகவில்லை. அதனால் அடுத்த படத்திற்கு ‘"96'’ பிரேம் குமார், உள்ளே வந்தார். இந்த படமும் கதையில் சிக்கல் நீடித்து வருவதால் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இதனிடையே "பார்க்கிங்' பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு இடவன்... இருவரும் கதை சொல்லி ஒகே வாங்கி வைத்துள்ளனர். இவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளவர் "ராட்சசன்' பட இயக்குநர் ராம்குமார். இவரும் விக்ரமிடம் கதை ஒன்றைக் கூறி ஓகே வாங்கி வைத்துள்ளார். இந்த இயக்குநர்கள் பட்டியலில் எந்த படத்தை விக்ரம் முதலில் தொடங்குவார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தை சுற்றி வருகிறது.
முற்றுப் புள்ளி!
"பிச்சைக்காரன்' பட வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனியும் இயக்குநர் சசியும் ஒரு புதிய படத்தில் இணைகின்றனர். படத் தலைப்பு ‘"நூறு சாமி'. படத்தில் ‘லப்பர் பந்து’ ஸ்வாஸ்விகா மற்றும் ‘ஜெய் பீம்’ லிஜோ மோல் ஜோஸ் ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளார்கள். அடுத்த மாதத்தில் பெரிய பட்ஜெட்டில் படத்தை தொடங் கத் திட்டமிட்டுள்ளார்கள். படத் தலைப்பு ‘பிச்சைக்காரன்’ பட ஹிட் பாடலான "நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா'’என்ற பாடலின் வார்த்தைகளை வைத்து அமைத்துள்ளதால் பிச்சைக்காரன் படக் கதையை மையப்படுத்தி உருவாகிறதோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் அதற்கும் படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்து, இப்படம் வேறுபட்ட கதையில் உருவாகிறதென பதிலளித்துள்ளனர்.
அப்செட் அமீர்!
லோகேஷ் கனகராஜ், பாலிவுட்டில் அமீர்கானை வைத்து சூப்பர் ஹீரோ ஆக்ஷன் ஜானரில் எடுக்கவிருந்த படம் கைவிடப்படுவ தாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி யிருக்கிறது. "கூலி' படத்தில் அமீர் கானின் கேமியோ போதிய வரவேற்பை பெறாததுதான் இதற்கு காரணம் எனச் சொல்கின்ற னர். திரையரங்கைத் தாண்டி சமீபத்தில் படம் ஓ.டி.டி.-யிலும் வெளியான நிலையில் இதுவும் ரசிகர்களிடம் விமர்சனங்களை சந்திக்க, இது அமீர்கான் காதுவரை சென்றுள்ளது. அதனால் "கூலி' படத்தில் ரஜினிக்காக கதை கேட்காமல் நடித்த அமீர்கான், தற்போது லோகேஷ் கனகராஜிடம் தன் படத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். ஆனால் லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் படத்தில் நடிக்கும் முயற்சியிலும், "கைதி 2' பட ஸ்கிரிப்ட்டிலும் பிஸியாக இருப்பதாகச் சொல்லியுள்ளார். இதனால் அப்செட்டான அமீர்கான், சீக்கிரம் கதையை ரெடி பண்ணுமாறு கறார் காட்டியுள்ளாராம்.
-கவிதாசன் ஜெ.