நம்பிக்கை!
தெலுங்கு மற்றும் இந்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் மிருணாள் தாக்கூர். அவருக்கு அங்கு படத்துக்கு படம் மார்க்கெட் ஏறிக்கொண்டே போகிறது. இதனால் அவரை எப்படியாவது தமிழுக்கு அழைத்து வரவேண்டும் என இங்கிருக்கும் ஹீரோக்கள் மற்றும் இயக்குநர் கள் முயற்சி செய்தனர். சூர்யா -சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான "கங்குவா', சிவகார்த்திகேயன் -ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகவுள்ள "மதராஸி', தேசிங் பெரியசாமி -சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள இன்னும் பெயரிடாத படம் ஆகிய படங்களில் மிருணாள் தாக்கூரை நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்தும், எதுவும் சுமுகமாக முடியவில்லை. இருப்பினும் அவரை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்துகொண்டே வருகிறது. இப்போது அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறது சிவ கார்த்திகேயன் -வெங்கட் பிரபு கூட்டணி. இருவரும் சத்யஜோதி தயாரிப்பில் ஒரு படம் பண்ண வுள்ள நிலை யில்... மிருணாள் தாக்கூரை நாயகி யாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.
மீட்கும் முயற்சி!
சிம்புவை வைத்து ஒரு படம், புது முகங்களை வைத்து ஒரு காதல் படம் என இரண்டில் எதாவது ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந் தார் இயக்குநர் மணிரத்னம். ஆனால் தக் லைஃப் தோல்வியால் இரண்டுமே தற்காலிகமாக கைவிடப்பட்டது. இப்போது விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம். படத்தை இயக்குவது மட்டுமல்லாது அவரே ‘"மெட்ராஸ் டாக்கீஸ்'’ பேனரில் தயாரிக்கவுள்ளார். நாயகியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த், இசை வழக்கம் போல் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். நவம்பர் முதல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டிருக்கிறார். இப்படம் மூலம் சரிந்த இமேஜை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறாராம்.
பெரிய சம்பளம்!
வில்லன் ரோலில் நடிக்க அதிக ஆர்வம் காடுகிறாராம் நடிகர் ஆர்யா. ஏற்கனவே மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘"தி கிரேட் ஃபாதர்'’, தமிழில் விஷால் நடித்த ‘"எனிமி'’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த ஆர்யா, தற்போது பா.ரஞ்சித் இயக்கும் ‘"வேட்டுவம்'’ படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துவருகிறார். இதன்மூலம் தனக்கு ஒரு பிரேக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மறுபடியும் வில்லன் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். சிவகார்த்திகேயன் நடிப்பில் "குட் நைட்' பட டைரக்டர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க ஓ.கே. சொல்லியுள்ள ஆர்யாவுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். படத்தில் ஏற்கனவே மோகன்லால், சிவகார்த்திகேயனின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தது. கிட்டத்தட்ட அது உறுதியாகிவிட்டதாக தகவல். நாயகியாக ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். படத்திற்கு இசை சாய் அபயங்கர்.
மாறிய வாய்ப்பு!
இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது மகன் அர்ஜித்தும் நாயகனாக களமிறங்கவுள்ளார். இவர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவந்தார். விரைவில் இயக்குநராக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆனால் அர்ஜித்துக்கு ஹீரோவை விட இயக்குநராகும் எண்ணம்தான் அதிகமாம். இருப்பினும் நடிப்பதற்கு ஓ.கே. சொல்லியுள்ளார். இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குநராக இருந்த சிவா இயக்குகிறார். பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
-கவிதாசன் ஜெ.