பிரேக் நம்பிக்கை!
"விடுதலை'’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றவர் பவானிஸ்ரீ. இந்த படம் வெற்றி படமாக அமைந்தும் பெரிதாக அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை அவருக்கு. அதற்கு இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக சொல்லப்படும் தகவல்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் ஹீரோயின் ரோலை விட கதைக்கு முக்கிய பங்கு அளிக்கும் ரோலையே விரும்பும் அவர், இப்போது பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். ஹீரோயினாக ‘"யாத்திசை'’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துவருகிறார். இப்படங்களை தொடர்ந்து தற்போது சூர்யாவின் படத்தில் இணைந்துள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் தனக்கு ஒரு பிரேக் கொடுக்கும் என நம்புகிறார். இப்படத்தின் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
மீண்டும் தொடக்கம்!
"தக் லைஃப்' படத்தை தொடர்ந்து சிம்பு, ‘பார்க்கிங்’ பட டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். சிம்புவின் 49வது படமான இப்படத்தை டான் பிக்சர்ஸ் பேனரில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவிருந்தார். நாயகியாக கயாடு லோஹரும், காமெடி ரோலில் மீண்டும் சந்தானமும் நடிக்கவிருந்தனர். பூஜையும் பிரம்மாண்ட மாக போடப்பட்ட நிலையில்... தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு விவகாரத் தில் அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கியதால் படப்பிடிப்பு தடைபட்டது. அதனால் சிம்பு உடனே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போய்விட்டார். இந்த சூழலில் "பார்க்கிங்' படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்க, அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் சிம்பு பட பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் ராம்குமார் பாலகிருஷ்ணன். "கதையில் எந்த ஒரு சமரசமும் இருக்கக்கூடாது என சிம்பு, சொல்லிவிட்டதால் தற்போது கதையை மெருகேற்றி வருகிறார். வெற்றிமாறன் படத்துக்குப் பிறகு இந்தப்படம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய சம்பளம்!
பீக்கில் இருக்கும் அனிருத், தொடர்ந்து டாப் ஹீரோக்கள் படங் களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் ரஜினிக்கு "கூலி', விஜய்க்கு "ஜன நாயகன்', சிவகார்த்திகேயனுக்கு "மதராஸி' என பிஸியாக இருக்கும் அவர், தற்போது அஜித்துடன் மீண்டும் இணைகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் மீண்டும் நடிக்கவுள்ள படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதற்காக பெரிய சம்பளமும் பேசப்பட்டுள்ளதாம். ஆக்ஷனை மையப்படுத்தி எடுக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் வழக்கம்போல் அனிருத்தின் துள்ளலான இசை இதிலும் இடம்பெறும் எனத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அஜித்தின் "வேதாளம்', "விவேகம்', "விடாமுயற்சி' படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஆர்வம்!
தமிழைத் தவிர்த்து மற்ற மொழிகளில் அதிக கவனம் செலுத்திவரும் ஸ்ருதிஹாசன், "கூலி' படம் மூலம் குறுகிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘"லாபம்'’ படத்திற்குப் பிறகு, தற்போது "கூலி' படத்தில் சத்யராஜின் மகளாக நடித்திருக்கிறார். ரஜினியுடன் முதல் முதலாக நடித்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லும் ஸ்ருதி, தன்னை மீண்டும் தமிழில் நடிக்க வைத்ததற்காக லோகேஷ் கனகராஜுக்கு நன்றி சொல்கிறார். இப் படத்தில் வலுவான கதா பாத்திரத்தில் நடித்திருப் பதாகவும் படம் வெளியான பிறகு தனது நடிப்பு பேசப்படும் என்றும் நம்பும் அவர், இனிமேல் தமிழிலே தொடர்ந்து கேப் விடாமல் நடிக்கவும் முடிவெடுத் துள்ளதாக கூறப்படு கிறது.
-கவிதாசன் ஜெ.