க்ரித்தி ராசி!
தெலுங்கில் மளமளவென வளர்ந்த இளம் நடிகையான க்ரித்தி ஷெட்டி தமிழிலும் அடுத்தடுத்து கமிட்டானார். ரவி மோகனின் "ஜீனி', கார்த்தியின் "வா வாத்தியார்'’ மற்றும் பிரதீப் ரங்கநாதனின் "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'’(எல்.ஐ.கே) ஆகிய படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் இந்த அனைத்து படங்களும் 2023ஆம் ஆண்டு தொடங் கப்பட்டது. இப்போது வரை ஒரு படமுமே ரிலீஸாகவில்லை. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தார் க்ரித்தி ஷெட்டி. இப் போது ஆறுத லாக ‘எல்.ஐ. கே’ படம் மட் டும் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு வேலைகள் நடந்து வந்தது. இப்போது அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட் டுள்ளது. அதே தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படமும் போட்டியாக இணைந்ததால், ஒரே நேரத்தில் பிரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்பு கம்மி என ‘எல்.ஐ.கே’ தள்ளி போவதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்திய தகவல் படி ‘எல்.ஐ.கே.’ படம் தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதியாகியுள்ள நிலையில் தற்போது கொஞ்சம் மகிழ்ச்சியில் இருக்கிறார்
க்ரித்தி ஷெட்டி. மூன்று படம் நடித்தும் ஒரு படம் வெளியாகவே இப் படி குழப்பம் ஆகிறதே என யோசிக்கும் க்ரித்தி ஷெட்டி, நமக்கு தமிழில் ராசியில்லையோ எனவும் கவலைப்படுகிறாராம்.
இணைந்த கைகள்!
சுந்தர் சி.யும் விஷாலும் ‘"மதகஜராஜா'’ பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணவிருந்தனர். ஆனால் விஷால் அப்படத்திற்கு சம்பளம் அதிகம் கேட்டதால் படம் டிராப் ஆனது. அதனால் சுந்தர் சி நயன்தாராவை வைத்து ‘"மூக்குத்தி அம்மன் 2'’ படத்தை இயக்க போய்விட்டார். அடுத்ததாக கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகியிருந்தார். விஷாலும் ‘"மகுடம்'’ என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்க கமிட்டாகி தற்போது நடித்து வருகிறார். இருவரும் தனித்தனியே போய்விட்ட நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். சுந்தர் சி, கார்த்தியை வைத்து இயக்கவிருந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது. இதனால் விஷாலை வைத்து இயக்க அவர் முடிவெடுக்க... விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பளம் குறித்து இன்னும் முடிவாகவில்லை, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இருவரும் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில் படப்பிடிப்பு நவம்பரிலிருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை ரிலீஸுக்கு குறிவைத்துள்ளனர். இப்படத்திற்கு மதகஜராஜா இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியையே இருவரும் இசையமைப்பாளராக கமிட்செய்துள்ளது கூடுதல் தகவல்.
புது நிறுவனம்!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் "கருப்பு' படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அதே சமயம் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார். ஏற்கனவே 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தாலும் தற்போது ‘ழகரம்’ என்ற பெயரில் புது நிறுவனம் தொடங்கும் அவர், அதில் முதல் படமாக மலையாள இயக்குநர் ஜீத்து மாதவனுடன் அவர் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளார். இதுமட்டுமல்லாது பா.ரஞ்சித்துடன் ஒரு படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.
ரகசிய இயக்குநர்!
அனிருத் தற்போது தனது கரியரின் பீக்கில் இருக்கும் நிலையில் டாப் நடிகர்களின் பெரும்பாலான படத்திற்கும் இசையமைத்து வருகிறார். தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் எனத் தொடங்கி பல்வேறு நடிகர்களுக்கு இசையமைத்துவிட்டார். ஆனால் விக்ரமுடன் இதுவரை இணையவில்லை. விக்ரம் நடித்த "டேவிட்'’ படத்தில் மட்டும் "கனவே கனவே'’ பாடலை இசையமைத்துப் பாடியிருந்தார். இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் புதுப் படத்திற்கு தற்போது அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்கு விக்ரம் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில், ஒரு அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்கவுள்ளார். அவரை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. அப்படத்தில்தான் அனிருத்தை இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
-கவிதாசன் ஜெ.