கொள்கை மாற்றம்!

tt1

நடிகை நயன்தாரா தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பதை ஒரு கொள்கையாக பின்பற்றிவருகிறார். ஆனால் இடையில் அவர் தயாரித்து நடித்த ‘"கனெக்ட்'’ படத்திற்கு மட்டும் ஒரு பேட்டி கொடுத் திருந்தார். அடுத்ததாக, சமீபத்தில் சிரஞ்சீவியுடன் நடித்த தெலுங்கு பட புரமோஷனில் கலந்துகொள்ள சம்மதித்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாக அது விமர்சனத்திற்கு உள்ளானது. தமிழ் படங்களில் கலந்து கொள்ளாமல் தெலுங்கு படங்களில் கலந்து கொள்வதா என்ற பேச்சுகள் எழுந்தது. இது தொடர்பாக திரை வட்டாரங்களில் விசாரித்தால், நயன்தாரா இனிமேல் தனது கொள்கையை பின்பற்றப் போவதில்லையாம்.

Advertisment

வருங்காலங்களில் தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் பணிகளில் கலந்துகொள்ள முடிவெடுத் துள்ளார் என்றும், இதன் முதல் நகர்வுதான்  சிரஞ்சீவி படம் என்றும், இது தமிழ் படங்களுக்கும் தொடரும் என கூறுகிறார்கள். அவர் கைவசம் "மூக்குத்தி அம்மன் 2', "மண்ணாங்கட்டி', "ராக்காயி', "ஹாய்' உள்ளிட்ட தமிழ் படங்களை வைத்துள்ளார். மற்ற மொழிகளில் கன்னட படமான டாக்சிக், மலையாள படங்களான பேட்ரியாட் மற்றும் டியர் ஸ்டூடண்ட்ஸ், அதோடு தெலுங்கு படமான பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

ரஜினியை இயக்கும் சிபி!

ரஜினியின் 173ஆவது படத்தை "டான்' பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார்.  ரஜினிக்கு அவர் சொன்ன கதையைக் கேட்டு, ரஜினியும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக் கின்றனர். இசை அனிருத். குடும்பப் பாங்கான கதையமைப்பில், அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் படத்தை வெளியிட  திட்டமிட்டுள்ளார்களாம்.  கமலின் தயாரிப்பு நிறுவனம் இத்தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  


ரெட் சிக்னல்!

லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘"பென்ஸ்'’ படம் "எல்.சி.யு'வில் வருகிறது. இப்படத்தின் கதைக்களம் விக்ரம் படத்திற்கு பின்பும் "லியோ' படத்திற்கு முன்பும் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே எல்.சி.யு.வில் இருந்த ஹீரோக்கள் தவிர ஏகப்பட்ட ஹீரோக்களை உள்ளே கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் சூர்யாவை இதில் கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சூர்யா அதற்கு ரெட் சிக்னல் கொடுத்துவிட்டதால் அதுபோன்ற ஒரு கேரக்டரை புதிதாக உருவாக்கி, அதில் சூர்யாவுக்கு இணையாக வேறொரு பிரபல ஹீரோவை நடிக்க வைக்கவுள்ளனர். மொத்தம் 7 கதாபாத்திரங்களில் பிரபல ஹீரோக்கள் நடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அவை அனைத்தும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரவுள்ளது. ஏற்கனவே லியோ படத்தில் வந்த மடோனா செபாஸ்டியன் இதில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

நம்பிக்கை!

"சாம்பியன்', "எனிமி', "எம்.ஜி.ஆர். மகன்' என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் பெரிய வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கும் நடிகை மிருணாளினி ரவி, தற்போது ஒரு வெப் தொடரில் நடித்துள்ளார். ‘"ப்ரீ லவ்'’ என்ற தலைப்பில் உருவாகும் இத்தொடரில் டி.ஜே. அருணாச்சலத்துக்கு ஜோடியாக வருகிறார். காதல் பின்னணியில் இந்த தொடர் உருவாகிறது. அப்பாஸ் அகமது என்பவர் இத்தொடரை இயக்க எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. அடுத்தமாதம் சோனி லிவ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. இத்தொடரை மலைபோல் நம்பியிருக்கும் மிருணாளினி ரவி, இதற்குப் பின் தனது வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தொடர் வாய்ப்பு வந்து மீண்டும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் எனவும் தனது நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார்.

-கவிதாசன் ஜெ.