"மீ டூ' சர்ச்சை புகார்களைச் சொல்லிவரும் சின்மயி, பாடகியாக இருப்பதுடன்... சமந்தா, நயன்தாரா, த்ரிஷா உட்பட பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தும் வருகிறார். அதிலும் சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப் படங்களிலும் குரல் கொடுத்துவருகிறார்.
வைரமுத்து மீது "மீ டூ' புகார் சொன்ன சின்மயி, ஒரு பெண் ராதாரவி மீது "மீ டு' சம்பந்தமாக டுவிட்டரில் பதிவிட்டதையும் தனது டுவிட்டர் கணக்கில் ரீ-ட்வீட் செய்திருந்தார்.
""சின்மயியை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள்'' என ராதாரவி சொல்லியிருந்த நிலையில்...
""என்னை தென்னிந்திய திரைப்பட பின்னணிக் கலைஞர்கள் சங்கத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இனி நான் திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுக்க முடியாது. நான் இரண்டு வருடமாக சங்க உறுப்பினருக்கான சந்தா தொகையை கட்டாததால், சங்கத்திலிருந்து நீக்கியிருப்பதாக காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டச்சொல்லி எனக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பவில்லை. ஆனால்... இரண்டு வருடங்களாக நான் பல படங்களில் பின்னணி பேசியதற்கான சம்பளத்தில் சங்கம் தனக்குரிய சர்வீஸ் சார்ஜை பிடித்தம் செய்துகொண்டதே. நான் இப்போது இசை நிகழ்ச்சி சம்பந்தமாக அமெரிக்காவில் இருக்கிற நேரத்தில் என்னை நீக்கியிருக்கிறார்கள். இனி நான் டப்பிங் கலைஞராக பணி செய்ய முடியாது. "96' என்கிற நல்ல படத்திற்கு டப்பிங் செய்ததோடு என் டப்பிங் பணி நின்றுவிடப் போகிறது. ஐந்து லட்ச ரூபாய் சந்தாவாக கட்டச் சொல்கிறார்கள். சங்கம் குறித்து ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால்... "இப்போதைக்கு சந்தா கட்டத் தேவையில்லை' என தனக்கு சொல்லப்பட்டதால், நான் சந்தாவை செலுத்தவில்லை'' எனச் சொன்னதுடன்...
""14 வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது "மீ டு'வில் சொல்வது ஏன் என என்னைத் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தார்கள். இப்போது சொன்னதற்கே நான் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறேன். அப்போதே சொல்லியிருந்தால்...?'' என கேள்வியும் எழுப்பியுள்ளார் சின்மயி.
"ஒவ்வொரு உறுப்பினரும் ஆண்டு சந்தாவை ஜனவரி மாத இறுதிக்குள் செலுத்திவிட வேண்டும்...' என உறுப்பினர் அடையாள அட்டையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. "சந்தா கட்ட நினைவூட்டல் கடிதம் எழுதுவது சங்க வழக்கமில்லை' என சங்க நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
" "மீ டூ' புகார் சொன்னதால்தான் சங்கத்திலிருந்து சின்மயி நீக்கப்பட்டாரா?' என தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ராதாரவியிடம் கேட்டோம்.
""அந்தம்மாவ சங்கத்திலருந்து நாங்க நீக்கல. கடந்த மார்ச் மாதம் டப்பிங் யூனியனுக்கு தேர்தல் நடந்தபோது... "உறுப்பினர்களோட ஓட்டுரிமை தகுதி சரிபார்க்கப்பட்டது. அப்போது சந்தா கட்டாததால்... சின்மயியை தகுதியிழப்பு செய்தார்' தேர்தல் அதிகாரியான நீதிபதி வாசுகி அவர்கள். சின்மயி ஒரு பேட்டியில... "டப்பிங் யூனியனில் பதினைந்துக்கும் மேற்பட்ட புகார்கள் விசாரிக்கப்படாமல் இருக்கு'னு சொன்னார். இதற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் அவர் பதில் தரல. கடந்த 17-ந் தேதி யூனியன் பொதுக்குழு கூட்டத்தில்... யூனியன்மேல தொடர்ந்து அவதூறு செய்யும் "சின்மயிக்கு கண்டனம்' மட்டும்தான் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே தகுதியிழந்த சின்மயி... இப்போ பரபரப்புக்காக "தன்னை நீக்கிட்டதா' சொல்றார்'' என விளக்கம் சொல்கிறார் ராதாரவி.
____________________________
டும்... டும்... டும்... கல்யாணம் ஆயிருச்சு!
பாலிவுட் காதல் ஜோடியான ரன்வீர் கபூரும், தீபிகா படுகோனேவும் இத்தாலி நாட்டில் திருமணம் செய்துகொண்டு... புதுமணத் தம்பதிகளாக இந்தியா திரும்பியிருக்கிறார்கள்.
ரன்வீர் பிரபல ஆணுறை நிறுவனத்தின் விளம்பர மாடலாக இருக்கிறார். அதனால்... இவர்களின் திருமணத்தை வாழ்த்தி அந்த காண்டம் நிறுவனம் செக்ஸியான கங்கிராஜுலேஷன் சொல்லி வாழ்த்தியுள்ளது.
கல்யாணத்தில் மோதிர வளையம் அணிவதையும், காண்டத்தின் வளையத்தையும் ஒப்பிட்டு "டபுள் மீனிங் டச்'சில் வாழ்த்தியது கிளுகிளுப்பான பரபரப்பை ஏற்படுத்தியது.
கல்யாணம் ஆகப்போகுது!
நடிகை பிரியங்கா சோப்ரா-அமெரிக்க பாடகர் நிக் திருமணம் விரைவில் ராஜஸ்தான் ஜோத்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. திருமண நகைக்காக மட்டும் 15 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்காம். மொத்தச் செலவு ஐம்பது கோடி ரூபாயாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அனுஷ்கா சர்மா-விராட் கோலி ஜோடியும், தீபிகா-ரன்வீர் ஜோடியும் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் அமெரிக்க மாப்பிள்ளையை மணக்கும் பிரியங்கா, தன் திருமணத்தை இந்தியாவில் நடத்துவது ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.
கல்யாணம் ஆகல!
இலியானா, தன் ஆஸ்திரேலிய காதலரை ரகசியமாக மணம் முடித்ததாகவும், இலியானா இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் கிளம்ப... ""இன்னும் கல்யாணமும் ஆகல... நான் கர்ப்பமும் இல்ல'' என மறுத்திருக்கிறார் இலி.
கல்யாணம் ஆகணும்!
நயன்தாரா, தன் பிறந்தநாளை காதலர் டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். "லேடி சூப்பர்ஸ்டார்' என்கிற எழுத்துகளுடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். "கல்யாணம் பண்ணிக்கணும்' என நயனின் ரசிகர்கள் வலைப்பக்கங்கள் மூலம் விக்னேஷுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
-ஆர்.டி.எ(க்)ஸ்