வீடு அல்லது வீட்டு மனை வாங்குவதாக இருந்தால், முதலில் ஒரு "டோக்கன் அட்வான்ஸ்' கொடுத்து, தாங்கள் வாங்குவதை உறுதிசெய்வார்கள். அதன்பின்னரே முழுத்தொகையும் கொடுப்பார்கள். இதே உத்தியை இப்போது தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்கும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் இந்த உத்தியைப் பயன்படுத்தித்தான் ஒரு சுயேட்சையாக பெரிய வெற்றியைப்பெற்று சாதனை படைத்தார். அந்த தேர்தலில் அவரால் திட்டமிட்டபடி முழுமையாகப் பணப்பட்டுவாடா செய்ய முடியாததால், டோக்கன் சிஸ்டத்தைச் செயல்படுத்தினார். அதன்படி, வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டு டோக்கன் போல வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்தபின்னர், அந்த நோட்டிலுள்ள சீரியல் எண்ணைக் கூறினால்,10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதை நம்பி வெறும் 20 ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டு குக்கருக்கு வாக்களித்தார்கள். தேர்தலில் மிகப்பெரிய வெற்றியடைந்த தினகரன், உறுதியளித்தபடி 20 ரூபாய் டோக்கனுக்குப் பணம் வழங்காமல் ஏமாற்றிவிட்டார்.
இப்போது நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், பரவலாகத் தமிழகம் முழுவதுமே பணப்பட்டுவாடா நடந்துள்ளது

இப்போது நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், பரவலாகத் தமிழகம் முழுவதுமே பணப்பட்டுவாடா நடந்துள்ளது. பணப்பட்டுவாடா செய்தபின்னும்கூட தங்களுக்கு வாக்களிக்காமல் போவார்களோ என்ற சந்தேகத்தில், டோக்கன் கொடுக்கும் உத்தியையும் அரசியல் கட்சிகள் கையிலெடுத்துள்ளன. தமிழகம் முழுக்க முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில், பட்டுச்சேலை, தங்க மூக்குத்தி, தங்கக்காசு தருவதாகக்கூறி, அ.தி.மு.க. சார்பில் டோக்கன் அச்சடித்து தேர்தலுக்கு முந்தைய நாளே விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு வர, உடனடியாக, இத்தகைய டோக்கன்கள் செல்லாது என்று அறிவித்தது.
இந்த அறிவிப்பால் டோக்கன் வாங்குவது குறித்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் எழுந்தது. ஏற்கனவே ஆர்.கே.நகரில் தினகரன் டோக்கன் கொடுத்து ஏமாற்றியதும், வாக்காளர்களின் மனதில் வந்துபோனது. இதுவரை வந்துள்ள கருத்துக்கணிப்புகளில் அ.தி.மு.க. தோற்குமென்றே வந்துள்ளதால், இவர்கள் தரும் டோக்கனுக்கு பணம் கொடுப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, வாடிப்பட்டியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் டோக்கன்கள் வழங்கியபோது அதனை வாங்க மறுத்திருக்கிறார்கள். இன்னும் சிலர், டோக்கன்களை வாங்கி கிழித்தெறிந்திருக்கிறார்கள். சோழவந்தானிலும் இதேபோல டோக்கன்களை வாங்க மறுத்த சம்பவம் நடந்துள்ளது. நாமக்கல்லில் டோக்கனுக்குத் தங்கக்காசு வழங்கப்படும் என்று அறிவித்து, டோக்கன்களை வழங்குவதற்காக புல்லட்டில் வந்த அ.தி.மு.க. பிரமுகரை பொதுமக்கள் சுற்றிவளைத்ததில் அவர் புல்லட்டைப் போட்டுவிட்டு ஓடிவிட்டார். அவரைக் கைதுசெய்வதற்காகப் போலீசார் தேடிவருகிறார்கள்.
அ.இ.அ.தி.மு.க.வினர் குறிப்பிட்ட தொகுதிகளில் இரட்டை இலை சின்னம் பொறித்த விசிட்டிங் கார்டு கொடுத்து வாக்களிப்பு முடிந்தபிறகு "ரேஷன் கார்டு அல்லது ஆதார்கார்டு உடன் இந்த விசிஙடிங்கார்டடை எடுத்து வாருங்கள். ஒரு கார்டுக்கு ஐநூறு ருபாய் தருகிறேன்' என்று கூறி ஒரு தொகுதிக்கு ஐம்பதாயிரம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. கார்டு வழங்கப்பட்ட தொகுதி வேட்பாளர்களிடம் வாட்ஸ்அப் காலில் முதலமைச்சரும் பேசியிருக்கிறார்.
திருவண்ணாமலை தொகுதியில் டோக்கன் வழங்குவதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. இத்தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பார் கோடுடன்கூடிய ஹைடெக் டோக்கனை உருவாக்கியிருக்கிறார். அதனை வாக்காளர்களிடம் வினியோகிக்கும்படி அ.தி.மு.க.வினரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வினரோ எதுக்கு வம்பு என்று ஒதுங்கிக்கொள்ள, இவரே தனது ஆதரவாளர்கள் மூலமாக, 4 பேர் உள்ள வீட்டுக்கு ஒரு டோக்கன் என்ற கணக்கில் விநியோகித்துள்ளார். அந்த டோக்கனை அங்குள்ள ஒரு பிரபல மூன்றெழுத்து நகைக்கடையில் கொடுத்தால், 4 கிராம் தங்கச்சங்கிலி வழங்குவார்களென்று கூறியிருக்கிறார். ஒரு கிராமா, ரெண்டு கிராமா, நாலு கிராமாச்சே! டோக்கனை வாங்கியவர்களால் ஒரு நிமிடமாவது பொறுக்கமுடியுமா என்ன? தேர்தலன்றே அந்த குறிப்பிட்ட நகைக்கடைக்கு பொதுமக்கள் கூட்டமாக டோக்கனோடு குவிந்து கடை மேலாளரிடம், "தங்கச்செயின் எங்கே?' எனக் கேட்க, மேலாளரோ அதிர்ச்சியடைந்து... "அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது' என்று அவர்களை விரட்டியிருக்கிறார். இதுகுறித்து பா.ஜ.க. வேட்பாளரின் நெருங்கிய வட்டத்தில் விசாரித்தால், "தேர்தல் ரிசல்ட் வந்தபின்னர், மே 3-ஆம் தேதிதான் இந்த டோக்கனுக்கு பொருளாகவோ, பணமாகவோ வாங்க முடியும்' என்று "கண்டிஷன்ஸ் அப்ளை' மேட்டரைத் தெரிவிக்கிறார். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு 4 கிராம் தங்கமென்றால் ஒருவருக்கு ஒரு கிராம் தங்கம் என்ற கணக்கில், ஒரு ஓட்டுக்கே 4,500 ரூபாய் கணக்கு வருகிறது. அந்த பா.ஜ.க.காரர் பெரும்பணக்கார வேட்பாளராக இருப்பார் போல!
இதே பணப்பட்டுவாடா+ டோக்கன் விவகாரத்தில் தமிழகத்தின் வி.ஐ.பி. தொகுதிகளில் ஒன்றான கோவை தெற்கு தொகுதியிலும் பரபரப்பு தொற்றியது. பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் டோக்கன்களை விநியோகித்தபோது, காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியினர் அவர்களைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தது. அதன்பின்னும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் சாலை மறியலில் ஈடுபட, அவரோடு நாம் தமிழர் வேட்பாளரும் இணைந்துகொண்டார். சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். பா.ஜ.க. மீது கமல்ஹாசனும் அதே பணப்பட்டுவாடா புகாரை தேர்தல் கமிஷனிடம் தெரிவித்தார். மேலும், டோக்கன்கள் வினியோகிக்கப்படுவதாகவும், டோக்கனைக் கொடுத்து பொருட்களைப் பெற்றுச் செல்லும்படி கூறியதாக கமல் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் சில தொகுதிகளில் "100, 500 என எதுவா இருந்தாலும் பணமா கொடுங்க, இந்த டோக்கன் வேலையெல்லாம் வேண்டாம்' என ஆளும்தரப்பினரை திருப்பியனுப்பிய மக்கள், டோக்கனையும் கிழித்துப் போட்டுவிட்டார்கள்.
இப்போதெல்லாம், தேர்தலில் பணப்பட்டுவாடாவை பொதுமக்களே வெளிப்படையாக எதிர்பார்க்கும் நிலையில், வேட்பாளர்களும் பணத்துக்கு டோக்கன் வழங்கும் முறைக்கு அப்டேட் டாகியிருக்கிறார்கள். என்று தணியுமோ இந்த டோக்கன் தாகம்!
-து.ராஜா, கரிசல்குளத்தான்