அ.தி.மு.க. ஒருமுறை கூட வெற்றி பெற முடியாத தொகுதி திருவாரூர் என்பதை இப்போது நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலும் நிரூபித்துள்ளது. அதிலும் 2016 தேர்தலில் 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் கலைஞர். அந்த வாக்குகளுக்கு நெருக்கமாக 64,571 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க.வின் பூண்டி கலைவாணன் வெற்றி பெற்றிருப்பதை ஆச்சர்யமாகப் பார்க்கிறது அரசியல் களம்.

ddகலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே அவரைப் பற்றிய நெகடிவ் இமேஜ்கள் பரவின. உ.பி.க்களே லேசாக கவலைப்பட்டனர். ""திருவாரூரில் நாங்க அடிக்கிற அடியில தி.மு.க. என்ன ஆகப் போகுது பாருங்க'' என டி.டி.வி.தினகரனும் அதிரடி கிளப்பினார். ""தி.மு.க.வை டெபாசிட் இழக்க வச்சு, சரித்திரத்தையே மாற்றுவோம்'' என வீராப்பு பேசினார் அமைச்சர் காமராஜ். ஆனால் எல்லாமே புஸ்வாணமாகி 1,17,616 வாக்குகள் வாங்கி வெற்றி வாகை சூடியிருக்கிறார் தி.மு.க. வேட்பாளரான பூண்டி கலைவாணன். அ.தி.மு.க. ஜீவானந்தம் 53,045 வாக்குகள் வாங்கினார் என்றால் அ.ம.மு.க.வின் எஸ்.காமராஜ் வாங்கியது 18,714 வாக்குகள் மட்டுமே.

"எப்படி நடந்தது இந்த அதிசயம்' என திருவாரூர் நகர அ.தி.மு.க. புள்ளி ஒருவரிடம் விசாரித்தோம். ""எல்லாமே மாஸ்டர் பிளானிங்தான். கலைஞரின் தொகுதியில் ஜெயிக்கலைன்னா மா.செ. பதவிக்கு நெருக்கடின்னு அவருக்குத் தெரியும். அதோடு அ.தி.மு.க., அ.ம.மு.க. இரண்டிலும் உள்ள சமூகப் பிரமுகர்கள் "டச்'சும் இருந்தது.

அ.தி.மு.க.வில் கலியபெருமாள் தான் வேட்பாளர் எனச்சொல்லி பிள்ளைமார் சமூகத்தைdd ஒருங்கிணைத்து 30 பேர் கொண்ட டீமை ரெடி பண்ணினார் அமைச்சர் காமராஜ். ஆனால் திடீரென நாகப்பட்டினத்திலிருந்து ஜீவானந்தத்தை வேட்பாளராக களம் இறக்கினார். தனது நன்னிலத்தில் தனக்கு தொல்லை இல்லாமல் இரண்டு முறை ஜெயித்ததை அமைச்சர் காமராஜ் மறக்க மாட்டார். அதனால் அவருக்கு கலைவாணன் மீது கரிசனம். அதனால்தான் கடைசிக்கட்ட பட்டுவாடாவை எங்க கட்சியின் பொறுப்பாளர்கள் நிறுத்திவிட்டு, வந்தவரை லாபம் என இருந்துவிட்டார்கள். அமைச்சரும் கலைவாணனும் நினைத்தது போலவே நடந்திருக்கிறது'' என்றார்.

Advertisment

திருவாரூர் நகர தி.மு.க.வைச் சேர்ந்த ரஜினி ஜின்னாவோ, “""இது அயராத உழைப்பின் வெற்றி. பிரச்சாரத்தை தளபதி தொடங்கி வைத்ததுமே வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு ஏறி இறங்கி பிரச்சாரம் செய்தார் கலைவாணன். ஒவ்வொரு நாளும் கலைஞர் குடும்பத்திலிருந்து ஒருவரை அழைத்து வந்து ஓட்டுக் கேட்டார். எங்களையும் நன்றாக வேலை வாங்கினார். இதுதான் வெற்றிக்கு காரணம்'' என்கிறார்.

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் பேசும் போது, ""மத்திய-மாநில அரசுகள் மீதான எதிர்ப்பலையை உருவாக்கி வைத்திருந்தோம். இந்தத் தேர்தலில் அது நன்றாகவே வேலை செய்துள்ளது'' என்கிறார்.

-க.செல்வகுமார்

Advertisment