டாலர் சிட்டி எனப்படும் திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில், திருப்பூர் வடக்கு , திருப்பூர் தெற்கு என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபிசெட்டிப்பாளை யம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் அடக்கம். ஏறக்குறைய 16 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி இது.
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிட்டிங் எம்.பி. கே.சுப்பராயன் மீண்டும் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியான பெருந்துறை சுப்பிரமணிக்கு வேண்டப்பட்ட அருணாச்சலம் களமிறக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. அணியில் முருகானந்தம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமியை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.
இத்தொகுதியில் எம்.பி.யாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் தொகுதி முழுக்க நன்கு பரிச்சயமானவர். தொடர்ந்து தொகுதி மக்களைச் சந்தித்து அரசுத் திட்டங்களின் பலன்களை மக்களுக்குக் கொடுத்து வருவதோடு, மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள்விரோதச் செயல்பாடுகளுக்கு எதிராக மக்களோடு சேர்ந்து பல போராட்டங் களையும் நடத்திவருபவர்.
மத்திய அரசின் புதிய ஜவுளிக் கொள்கையால் நூல் விலை ஏற்றம், பின்னலாடைத் தொழில் நசிவு, அத்தொழிலில் ஈடுபடும் தொழி லாளர்களுக்கு வேலையிழப்பு, வருமான இழப்பு இப்படி பல்வேறு இன்னல்களை இப்பகுதி மக்கள் நேரடியாகச் சந்தித்து வருகிறார்கள். மற்றொருபுறம் மாநில அரசு கொண்டுவந்த அவிநாசி- அத்திக்கடவு திட்டத் தின் மூலம் கோபிசெட்டிப் பாளையம், பெருந்துறை போன்ற சட்டமன்றத் தொகுதிகளில் விவசாய விளைநிலங்கள் செழிப்பாகி, அதன் பலனை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் மக்களுக்கு அறிமுகமில்லாத புதிய நபர்கள். இதனால் தி.மு.க. கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அ.தி.மு.க.வுக்கும்தான் நேரடிப் போட்டி. பா.ஜ.க. இங்குள்ள வட மாநிலத்தவர்களின் 50,000 வாக்குகளை அப்படியே அறுவடை செய்துவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறது. பவானி மற்றும் அந்தியூர் தொகுதிகளில் பா.ம.க.வின் வாக்குகளும் தங்களுக்கு ஆதாயம் சேர்க்கும் என்பது பா.ஜ.க.வின் கணக்கு. ஆனால், அக்கட்சித் தொண்டர்கள் பா.ஜ.க.வோடு அணி சேர்ந்ததை ரசிக்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த சம்பந்தியான சுப்பிரமணிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் அருணாச்சலம் என்பதால் கரன்சிகள் இத்தொகுதியில் தாராளமாகப் புழங்குகிறது. பதிலுக்கு பா.ஜ.க.வும் கோடிகளை செலவழித் தாவது தொகுதியில் இரண்டாம் இடத்தை பிடிக்கவேண்டுமென்ற முனைப்போடு வைட்டமின் பாசனத்தை இறக்கிவிட் டுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துவமான தனது வழக்கமான வாக்கு வங்கியை நம்பி களத்தில் ஆடுகிறது.
அதேநேரம் பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்தத்தின் பழைய விவகாரம் ஒன்று இப்போது கிளம்புவது அவருக்குப் பின்னடைவே. அது இப்போது சமூக ஊடகங்களில் வேக மெடுத்துவருகிறது.
இதுசம்பந்தமாக முருகானந்தம் திருமணம் செய்த ஞானசுந்தரியின் தந்தை கோவை மதுக்கரை சாவடிபுதூரில் வசிக்கும் சுந்தரசாமியிடம் பேசினோம். "எனது மகள் ஞானசுந்தரி நன்றாகப் படித்தார். ஆராய்ச்சி படிப்பில் பி.எச்.டி. பட்டம் பெற்றார். 2009 வாக்கில் திருமண ஏற்பாடு செய்தோம் அப்போது எங்களது உறவுமுறையில் இருந்துவந்த வரன்தான் முருகானந்தம். சீரும் சிறப்புமாக நாங்கள் அப்போது திருமணம் செய்து கொடுத்தோம்.
சில வருடங்கள்தான் வாழ்ந்தாள். வேறு ஒரு நபரின் மனைவியுடன் முருகானந்தத்துக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அது என் மகள் சாவில் சென்று முடிந்தது. அப்போது தற்கொலை என முடித்தார்கள்.
நான் என் மகளை முருகானந்தம் கொலை செய்துவிட்டார் என்று வழக்கு தொடுத்தேன். எனக்கு எங்கும் நீதி கிடைக்கவில்லை. வழக்கிலிருந்து வெளியேவந்த முருகானந்தம் எந்தப் பெண்ணோடு தொடர்பிலிருந்தாரோ, அவரையே திருமணமும் செய்துகொண்டார். இப்போது பா.ஜ.க. வேட்பாளராக திருப்பூரில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இப்போதுவரை அவர் மீது ஏறக்குறைய 30 வழக்குகள் உள்ளன. நான் தொடர்ந்து என் மகள் சாவுக்கெதிராக சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறேன்'' என வேதனை யோடு நம்மிடம் கூறினார். பெண் பாவம் பொல்லாததாச்சே!