வேலூர் மாவட்டத்திலிருந்து மிக சமீ பத்தில் உதயமான திருப்பத்தூர் மாவட் டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம் பாடி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. அதில் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்ற மண்டைக் காய்ச்சல் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலுமே அதிகமாகத்தான் இருக்கிறது. அதைவிட பெரிய சமாச்சாரம் என்னன்னா சசிகலா ஜெயிலிலிருந்து ரிலீசாகிவிட்டால், அதன்பிறகு கட்சிக்குள்ள என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ, எப்படி நடக்குமோ என்ற பய பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள் அ.தி.மு.க. பெருந்தலை களும் சீட் கேட்க நினைக்கும் நிர்வாகிகளும்.
திருப்பத்தூர்
தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான தி.மு.க. நல்லதம்பிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்ற ஆசை ரொம்பவே இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சி எம்.எல். ஏ.க்களுக்கு சாதிப்பாசம் என்ற பேஸ் மெண்ட் மூலம் காண்ட்ராக்ட் என்ற ரூட்டை எடப்பாடி காட்டியதால் நல்லதம்பி மீது உ.பி.க்கள் கடு கடுப்பில் இருக்கிறார்கள். இதனால் ந.செ. ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜிம் மோகன் ஆகியோர் ரேஸுக்கு தயார்நிலையில் இருக்கிறார்கள்.
ஆளும் கட்சியான அ.தி.மு.க.விலோ, கடந்த தேர்தலில் தோற்ற, அமைச்சர் வீரமணியின் வலதுகரமான டி.டி.குமார் முதலிடத்திலும் அதற்கடுத்த இடங்களில் மாஜி எம்.எல்.ஏ. ரமேஷ், மாஜி ஒன்றியக்குழுத் தலைவர் டாக்டர் திருப்பதி ஆகியோர் வீரமணியே சரணம் என்கிறார்கள்.
நான்கில் ஒன்று நமக்கு, அதில் திருப்பத்தூர் இருக்கு என்ற கணக்குடன் பா.ம.க.வின் மாஜி எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, மா.செ.கிருபாகரன் ஆகியோர் காத்திருக்கிறார்கள். தேமுதிக சார்பில் மா.செ. ஹரிகிருஷ்ணனும் காத்திருக்கிறார்.
கடந்த எம்.பி. தேர்தலில் தோல்வியடைந்த அமமுகவின் தொழிலதிபர் குணசேகரனை முடிவு பண்ணியுள்ளாராம் தினகரன். ஆனாலும் அமமுகவின் ஒ.செ. பூபதி, கந்திலி ஒ.செ. சிவா இந்த இரண்டு பேரும் டிடிவி அருள் கிடைக்கும் என நம்புகிறார்கள்.
ஜோலார்பேட்டை
2016 பொதுத் தேர்தலில் தி.மு.க. நிர்வாகிகளின் உள்குத்துகளால் மிகக் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற கவிதா தண்டபாணி, இந்த முறை வெற்றி நம்பிக்கையுடன் அறிவாலயத் தையும் நம்பியிருக்கிறார். அதே நேரம் தொகுதிவாசிகளான மாஜி மா.செ. முத்தமிழ்ச் செல்வி, மாஜி எம்.எல்.ஏ. சூர்யகுமார் ஆகியோரும் முனைப்பு காட்டுகிறார்கள். வாணியம்பாடி கூட்டணிக் கட்சிக்குப் போனால் நமக்கு இந்த தொகுதிதான் சரிப்படும் என கணக்குப் போடுகிறார் மா.செ. தேவராஜ்.
மந்திரி, மா.செ. என்ற கெத்துடன் இருக்கும் கே.சி. வீரமணியைத் தவிர வேறு சாய்ஸ் யாரும் அ.தி.மு.க.வில் இல்லை. என்ன ஒண்ணு சசிகலாவுக்கு எதிராக கடுமையான அட்டாக்கை அ.தி.மு.க.வில் ஆரம்பித்தவர் வீரமணிதான். அந்த அட்டாக் திருப்பி நம்மை அட்டாக் பண்ணி விடுமோ என்ற பக் பக் மனநிலையில் இருக்கார் அமைச்சர் வீரமணி.
வீரமணியை எப்படியும் கவிழ்த்தே ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் (சசிகலா ரிலீசுக்குப் பின்னால் நிலைமை எப்படி மாறும்னு தெரியாது என்பது தனிக்கதை) டிடிவி தினகரன், வீரமணியின் அக்கா மகன் தென்னரசுவை கொம்பு சீவி வைத்துள்ளார். தென்னரசு பின்வாங்கினால் இளங்கோ என்பவர் தயாராக உள்ளார்.
வாணியம்பாடி
தி.மு.க.வின் கூட்டணியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ரொம்பவே ஜரூர் காட்டுகிறார். தி.மு.க. மா.செ. தேவராஜோ, பொ.செ. துரைமுருகனை பெரிதும் நம்புகிறார். முஸ்லிம் லீக் சார்பில் ஃபாரூக்கும் அமமுக சார்பில் கண்ணபிரானும் ரேஸில் இருக்கிறார்கள்.
ஆளும் கட்சியைப் பொறுத்தவரை, அமைச்சர் நிலோபர் கபிலுக்கு சீட் தர எடப்பாடி விரும்பினாலும் அமைச்சர் வீரமணிக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. அதே நேரம் ஜமாத் கமிட்டிகளின் ஆதரவும் நிலோபருக்கு இல்லாததால் நிலைமை சிக்கல் தான். இந்த கேப்பில் உள்ளே வருகிறார்கள் ஆலங்காயம் ஒ.செ.வும் மாஜி எம்.எல். ஏ.வுமான சம்பத்குமார், மாநில சிறு பான்மை நலப்பிரிவு து.செ.பஷீர், வாணி கல்விக்குழும செந்தில்குமார் ஆகியோர் அமைச்சர் வீரமணியிடம் சரண்டராகி விட்டார்கள்.
ஆம்பூர்
இடைத்தேர்தலில் வென்ற தி.மு.க.வின் வில்வநாதனுக்கு வருகிற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற ஆசை இருக்கிறது, ஆனால் போட்டியோ கடுமையாக இருக்கிறது. மாதனூர் ஒ.செ. சுரேஷ்குமார், புதிதாக நியமிக்கப்பட்ட ஒ.செ. ஞானவேலன் போன்றோர் தி.மு.க.விலும் ‘சூப்பர் நேஷன் பார்ட்டி’ என்ற கட்சியை நடத்தும் தொழிலதிபர் கலீல் ரகுமான் துரைமுருகன் ஆதரவிலும் வில்வநாதனுக்குப் போட்டியாளர்களாக உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியான ம.ம.க.வுக்கு வாணியம்பாடி போனால், ஆம்பூர் நமக்கு என்ற கணக்குடன் முஸ்லிம் லீக்கின் அப்துல்பாஷித்தும் ரேஸில் உள்ளார். ஒரு வேளை காங்கிரசுக்குப் போனால் மாவட்டத் தலைவர் பிரபு, சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா ஆகிய இருவரும் தீவிரம் காட்டுகிறார்கள்.
ஆளும் கட்சியிலோ, அதே இடைத்தேர்தலில் தோற்ற ஜோதிராமலிங்கம், இன்ஜினியர் வெங்கடேசன், வக்கீல் அணியின் மாவட்ட அமைப் பாளர் டெல்லிபாபு, ந.செ.மதியழகன் போன்றோர் நம்பியிருப்பதும் அமைச்சர் வீரமணியைத்தான்.
அமமுகவில் இணைந்ததால் எம்.எல்.ஏ.பதவியைப் பறிகொடுத்த பாலசுப்பிரமணியன்தான் தினகரனின் செலக்ஷன் லிஸ்டில் இருக்கிறார்.