ஜாமீனில் விடுதலையாகியுள்ள "மே 17' அமைப்பு திருமுருகன் காந்திக்கு சிறையில் நேரத்துக்கு சரியான உணவு கொடுக்காததால், அவருக்கு பல்வேறு வயிற்றுக்கோளாறுகள் இருப்பதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து புதிய பரபரப்பு உருவாகி இருக்கிறது.
ஐ.நா.வில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசிவிட்டுத் திரும்புகையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பெங்களூருவில் வைத்து தமிழக குடிவரவுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீன் பெறப் பெற அடுத்தடுத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே சிறையில் சிறைவிதிகளை மீறியும், நீதித்துறை உத்தரவு இல்லாமலும் திருமுருகன் காந்தி பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானதால், அவருக்கு கொடுக்கப்படும் உணவில் உடல்நலத்தை பாதிக்கும் மருந்து கலந்து கொடுக்கப்படுவதாக கூறப்பட்டது.
பலமுறை சிறையில் மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி, அடுக்கம்பாறை மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த சமயத்தில் அவர்மீதான 14 வழக்குகளிலும் ஒவ்வொன்றாக ஜாமீன் கிடைத்துவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்தே நேரடியாக விடுதலை செய்ய சிறை அதிகாரிகள் முன்வந்ததாக தெரிகிறது.
ஆனால், முறைப்படி சிறை விதிகளைக் கடைப்பிடித்து விடுதலை ஆகவே திருமுருகன் காந்தியின் வழக்கறிஞர்கள் விருப்பம் தெரிவித்தனர். 2017-ஆம் ஆண்டு குண்டாஸ் சட்டத்தை உடைத்து வெளியே வந்த திருமுருகன் காந்தி, அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்போது, சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் மீண்டும் வேலூரில் உள்ள பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். சிறையில் அடைக்கப்பட்ட இந்த 53 நாட்களில் அவரை அவருடைய தந்தை மட்டுமே சிறையில் பார்த்தார். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான், அவருடைய மகளை முதன்முறையாகப் பார்த்தார்.
மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர் எழிலன் பேசும்போது, "சிறையில் அவருடைய உடல்நலத்துக்கு ஏற்ற உணவு கிடைக்கவில்லை. அவருடைய வயிற்றுக் கோளாறுகளுக்கு என்ன காரணம், என்ன மாதிரியான சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று ஆய்வு செய்துவருகிறோம். சிறையில் அவருக்கு கொடுத்த உணவில் ஏதேனும் கலந்திருந்ததா என்பதெல்லாம் சோதனைக்குப் பிறகே தெரியவரும்'' என்றார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த திருமுருகனால் எப்படி விடுதலையானதும் அவ்வளவு ஆக்ரோஷமாக முழக்கம் எழுப்ப முடிந்தது என்ற ஆச்சரியத்துக்கு பதிலளித்த அவருடைய ஆதரவாளர்கள், "திருமுருகன் காந்தி எப்போதுமே எனர்ஜெடிக்காகவே இருப்பார்' என்றார்கள்.
ஜாமீனில் வெளியே வந்தாலும், ராயப்பேட்டை, புழல், தாம்பரம், நுங்கம்பாக்கம், ஆலந்தூர் ஆகிய காவல்நிலையங்களில் தினமும் கையெழுத்திட வேண்டிய சிக்கலில் இருக்கிறார். அதிலிருந்தும் விலக்குக்கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார் திருமுருகன் காந்தி.
-சி.ஜீவாபாரதி