குடியுரிமை திருத்தச் சட்டத்தை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப் பட்டு அன்று மாலையே விடுவிக்கப் பட்டனர். ஆனால், உதயநிதியின் கைதை கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. தலைமைக்கழகப் பேச்சாளரும், மாவட்ட மாணவரணியின் முன்னாள் அமைப்பாளருமான கு.வாஞ்சி நாதன் 28 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார். அவரை சென்னைக்கு வரவழைத்து பெருமைப்படுத்தியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
வாஞ்சிநாதனிடம் நாம் பேசியபோது, ""குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த் தும் உதயநிதி கைதை கண்டித்தும் 75-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினருடன் கடலூர் பெரியசாமி நகரில் கலைஞர் அறிவகம் முன்பு மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எனது தலை மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப் பாட்டம் முடிந்து புறப்பட்டுச் சென்ற பிறகு திடீரென என்னை கைது செய்து பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அவசர அவசரமாக ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர் போலீஸார். பொதுச் சொத்துக்களுக்கு பங்கம் விளைவித்ததாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் என் மீது பொய்வழக்குப் பதிவு செய்தனர்.
சட்டத்தில் முகாந்திரமிருந்தும் ஜாமீனில் விடாமல் பார்த்துக்கொண்டது போலீஸ். 28 நாள் சிறைவாசத்தில் குடிநீர் பற்றாக்குறை, தொலைபேசி பழுது, விசாரணை கைதிகளை ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கும் அவலம் என பல்வேறு குறைகளை அறிந்தேன். வாரத்திற்கு ஒருமுறை குறை தீர்க்கும் கூட்டத்தை சிறைக் கண்காணிப்பாளர் நடத்துகிறார். ஆனால், குறைகளை சிறைவாசிகள் சொல்லப் பயப்படுகின்றனர். அப்படி நடந்த ஒரு கூட்டத்தில், சிறைவாசிகள் படும் துயரங்களை எடுத்துச்சொன்னேன். மறுநாளே, தினமும் குடிக்கவும் குளிக்கவும் தேவையான தண்ணீரை வழங்க உத்தரவிட்டார் கண்காணிப்பாளர். தண்ணீர் பற்றாக்குறை சரி செய்யப்பட்டது.
அதேபோல, பழுதடைந்த தொலைபேசி சரிசெய்யப்பட்டதுடன், சிறைவாசிகளை அவர்களது உறவினர்கள் இரண்டு முறை சந்திக்கவும் அனுமதி வழங்கினார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் உதயநிதியை சந்திக்க விரும்பினேன். உடனடியாக சென்னைக்கு வரவழைத்தார் உதயநிதி. எனது அம்மாவுடன் அவரை நான் சந்தித்தபோது, "பொய் வழக்குகளை உடைத்து விடலாம். கவலைப்படாமல் கட்சிப்பணிகளை தொடர்ந்து செயலாற்றுங்கள்' என வாழ்த்தினார். அந்த வார்த்தைகள் என்னை மேலும் வலிமைப்படுத்தி யிருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.
வாஞ்சிநாதன் போன்ற உடன்பிறப்புகள்தான் தி.மு.க. எனும் அரசியல்கோட்டையின் அடித்தளம்.
-இளையர்