கடந்த 21-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில்... ஆப்கானிஸ் தானிலிருந்து மீட்கப்படும் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக தஜிகிஸ்தானிலுள்ள துஷான்பே விமான நிலை யத்தில் இந்திய விமானப்படையின் சி 17 விமானம் காத்திருக்கிறது. காபூலிலிருந்து மீட்கப்படும் இந்தியர்களை முதலில் தஜிகிஸ் தானுக்கு அழைத்து வருவார்கள். அங்கிருந்து இன்னொரு விமானத்தில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. அந்த நள்ளிரவில் தங்களுக்கான விடியலை நோக்கி காபூல் விமான நிலையத்தை நோக்கி 6 பேருந்துகளில் வந்துகொண்டிருந்த 150 இந்தியர்கள் உள்ளிட்ட பயணிகளை விமானநிலையத் துக்கு வெளியிலேயே துப்பாக்கி முனையில் தாலிபான்கள் சுற்றி வளைத்துள்ளார்கள். பின்னர் அந்த பேருந்துகளைக் காலியான ஒரு மைதானத்திற்குக் கொண்டுசென்ற தாலிபான்கள், அனை வரது பாஸ்போர்ட்டாக்குமென்ட் விவரங்களைச் சோதனையிட்டனர். முதலில் பெண்களை மட்டும் விடுவித்தனர். இதற் கிடையே இத்தகவலை ரகசியமாக இந்தியாவிலுள்ள உறவினர்கள், நண்பர்களுக்குச் சிலர் தெரிவிக்க, இந்தியர்களைத் தாலிபான் கள் கடத்தியதாக உலகமெங்கும் செய்தி பரவியது.
தாலிபான்களின் சோதனையில், இவர்கள் இந்தியர்கள் தானென்றும், வேறெந்த தீவிரவாதக் குழுக்களையும் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் தெரியவர, 6 மணி நேரம் கழித்து இந்தியர்களை விடுவித்தனர். இதற்கிடையே தாலிபான்களைத் தொடர்புகொண்ட இந்திய வெளி யுறவுத்துறை அதிகாரிகள், இந்தியர்களை விடுவிக்கு மாறு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். தாலிபான்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 150 இந்தியர்கள் மட்டுமல்லாது, அந்நாட்டின் குருத்வாரா ஒன்றில் தஞ்சமடைந்திருந்த சுமார் 200 சீக்கியர்கள் மற்றும் இந்துக்களையும் சேர்த்தே இந்தியாவுக்கு அழைத்துவர முடிவெடுத்தனர். இவர்களோடு, இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம்புக விருப்பம் தெரிவித்த ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த மக்களில் சிலரும் விமானத்தில் இந்தியாவுக்கு வருவதற்கு இந்தியா ஓகே சொன்னது. அங்கிருந்து மீட்கப்பட்ட அனைவரும் இரண்டு விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் மீட்கப்படும்வரை திக்... திக்... திக்... நிமிடங்களாகவேயிருந்தன.
இந்நிலையில், இந்தியாவுக்குவர விருப்பம் தெரிவித்துள்ள இந்தியர்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானத்திலிருந்து இந்தியாவுக்கு மீட்டு வருவதில் இந்திய தூதரகம் தீவிர கவனம் செலுத்திவருகிறது. அமெரிக்கப் படையினர் அனைவரும் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், அதற்குள் இந்தியர்களை மீட்பது உள்ளிட்ட ஆப்கன் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டியது. அதில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், இதுவரை 15,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 5,000 பேர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகவும், அனைவ ரையும் பாதுகாப்புடன் மீட்போமென்றும் தெரிவித் தார். கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, "தற்போது காபூல் விமான நிலையத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை. ஆப்கனிலிருந்து இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரையும் மீட்டு வரவேண்டும். மத்திய அரசு அனைத்து நாடுகளுடனும் பகையுடன் இருக்கும் நிலையில், இது எப்படி சாத்தியமாகும்?''’என்று கேள்வி எழுப்பினார். எனினும், இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதில் ஒன்றிய அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆப்கானின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு
கடந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. 2009-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 218 கிமீ நீளம் கொண்ட Zaranj-Delaram நெடுஞ்சாலை இந்தியாவால் கட்டித் தரப்பட்டது. 2015-ம் ஆண்டில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றக் கட்டிடம், இந்தியாவின் கொடையாகும். அதேபோல, ஆப் கானிஸ்தானின் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங் களின் பாசனத் தேவையைப் பூர்த்திசெய்யும் ஆப்கானிஸ்தானத்தின் மிகப்பெரிய சல்மா அணையை, 2016-ம் ஆண்டில், சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மோடி அரசு கட்டிக் கொடுத் திருக்கிறது. உள்நாட்டுப் போரில், தாலிபான்கள் இந்த அணை மீதே 3 முறை தாக்குதல் நடத்தியும் தாக்குப்பிடித்து நிற்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர, இந்தியா சார்பில் 400 பேருந்துகள், 200 மினி பேருந்துகள், ஆப்கன் ராணுவத்துக்கு 285 ராணுவ வாகனங்கள், 10 ஆம்புலன்ஸ்களை இந்தியா வழங்கியுள்ளது. இவற்றின்மூலம், உள்நாட்டுப் போரால் பலத்த பொருளாதாரச் சீரழிவில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தானைச் சீரமைக்க இந்தியா தன்னாலான அளவில் பெரிதும் உதவியது.
தற்போதைய சூழலில் ஆப்கானிஸ்தானம், ஜனநாயகத் தலைமையில்லாத தேசமாக உள்ளது. தாலிபான்களின் பிடிக்குள் வந்தாலும், இது ஜனநாயக அரசாக இல்லாததால் சர்வதேச நாடு களுடனான வர்த்தக உறவு நிலையில் திட்டவட்ட மான எவ்வித உடன்பாடுகளும் ஏற்படவில்லை. எனவே இரு நாட்டு உறவுகளும் மேம்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இந்தியா செய்து கொடுத்துள்ள உதவிகளை தாலிபான்கள் நன்முறை யில் பயன்படுத்துவார்களா, அல்லது சேதப்படுத்து வார்களா என்பது போகப்போகத் தான் தெரியும்.
இந்தியா-ஆப்கான் வர்த்தகத்தில் பின்னடைவு
தாலிபான்களின் கைக்குள் சென்ற பின்னர், ஆப்கானிஸ்தானின் எல்லைகளும், அங்குள்ள வங்கிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியா ஆப் கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவு முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஆப் கானிஸ்தானுக்கு சர்க்கரை, தானியங்கள், தேயிலை, மருந்துப் பொருட்கள் மற்றும் துணி வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. கடந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து சர்க்கரையை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலிருந்தது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3,06,24,000 டன் சர்க்கரையை வாங்கியதாக அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கு வழியில்லாமல் சர்க்கரை ஏற்றுமதியாளர்கள் முழி பிதுங்கியுள்ளனர்.
கடந்த மாதத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இந்திரா பால்சிங் என்ற ஏற்றுமதியாளர் ஆப்கானிஸ்தானுக்கு 5,000 மெட்ரிக் டன் மைதா ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டரைப் பெற்றிருந் தார். ஆனால் தற்போதுள்ள சூழலில், இந்தியாவி லிருந்து மைதாவை இறக்குமதி செய்வதைவிட, அருகிலுள்ள உஸ்பெகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்ய தாலிபான் அரசு முடி வெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானத்தி லிருந்து இந்தியாவுக்கு உலர் பழங்கள், நறுமணப் பொருட்கள் இறக்குமதி பெருமளவில் நடைபெற்றது. தற்போது இந்த இறக்குமதி முற்றிலும் தடைபட்டுள்ளதால் வட இந்தியாவில் இவற்றுக்கான விலை கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு மட்டுமே கடந்த கொரோனா காலத்திலும்கூட சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆப் கானிஸ்தானிலிருந்து உலர் திராட்சை, ஆப்பிள் மற்றும் அத்திப்பழங்கள் இறக்குமதி செய்யப்படு கின்றன. தற்போது இந்த இறக்குமதியும் முற்றாகத் தடைபட்டுள்ளது. இதேவேளை, தாலிபான்களை ஆதரிப்பதால், ஆப்கான்-பாகிஸ்தான் இடையி லான வர்த்தகம் 50% அதிகரித்துள்ளதாகத் தெரி கிறது. அதேபோல, எரிபொருள் பற்றாக்குறையால் தவித்த தாலிபான்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, ஆப்கானிஸ்தானுக்கு எரிபொருள் ஏற்றுமதியை ஈரான் தொடங்கியுள்ளது.
உலகை அதிரவைத்த காபூல் குண்டுவெடிப்பு
தாலிபான்களின் ஆட்சியின்கீழ் ஆப்கானிஸ் தான் வந்தபோதும், அங்குள்ள அரசியல் சூழல் இன்னமும் கலவரமாகவே தொடர்கிறது. காபூலிலிருந்து 100 கி.மீ. தொலைவிலுள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியில், அகமது மசூத் என்ற இளம்போராளி தலைமையில் ஒருங் கிணைந்த மக்கள், தாலிபான்களுக்கு எதிராகப் போரில் இறங்கினர். எனவே பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு நோக்கித் தாக்குதல் தொடுத்த தாலிபான்கள், தற்போது அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிகிறது. இன்னொரு பக்கம், ஆப்கானிஸ்தானில் மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்ற அச்ச நிலை தொடர்ந்தவண்ணம் உள்ளது. பெண்களின் உரிமைகளை மதிப்போம் என்றும், கல்வி உரிமையைப் பறிக்க மாட்டோமென்றும் தாலிபான்கள் சொல்லும்போதே, கல்லூரிக்குச் சென்ற பெண்களைத் திருப்பியனுப்பிய சம்பவமும், அழகு நிலையங்களின்மீது தாக்குதலும் நடக்கிறது. ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானியான நிலோஃபர் ரஹ்மானி, “தாலிபான்களின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத சூழல் ஏற்படக்கூடும்” என்று கவலை தெரிவித்தார்.
இதற்கிடையே, ஐ.எஸ். தீவிரவாதிகள் திடீர் எழுச்சி பெற்றிருப்பதாகவும், காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மக்களும் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டுமென்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது. அமெரிக்கா எச்சரித்தது போலவே, காபூல் விமான நிலை யத்துக்கு வெளியே 4 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் இதுவரை 85 பேர்வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பலியானவர்களில், அமெரிக்க வீரர்கள், மருத்துவர்கள் அடங்கிய குழுவைச் சேர்ந்த 13 பேரும், பொதுமக்களில் 72 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ். அமைப்பின் இத்தாக்குதலுக்குக் கண்டனத்தைத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தங்கள் வீரர்கள் 31-ம் தேதிக்குள் ஆப்கானிஸ் தானத்திலிருந்து வெளியேறுவதை மீண்டும் உறுதிசெய்தார். இத்தாக்குதலுக்குக் பலத்த கண்டனம் தெரிவித்த இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது.