"முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்வரை என்.டி.ஏ. கூட்டணியில் இணைய மாட்டேன் என கடந்த ஆண்டு இறுதிவரை உறுதியாக கூறிக் கொண்டிருந்த அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திடீர் பல்டியடித்து அக்கூட்டணியில் இணைந்ததற்கு, அரசியலோடு சேர்த்து தனிப்பட்ட சில கணக்குகளும் உண்டு' என கூறுகிறது விவரமறிந்த வட்டாரம்.
எப்பாடு பட்டாவது தமிழ் நாட்டில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., அதன் முதல்கட்டமாக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ்.ஸை தர்மயுத்தம் செய்ய வைத்து, தற்போது தனிமரமாக நிறுத்திவிட்டது. அதேபோல, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் அ.தி.மு.க.வி-ருந்து ஒதுக்கித் தள்ளி அக்கட்சியை காயலான் கடைக்கு அனுப்ப முடிவெடுத்து விட்டது.
இருந்தாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. என்ற குதிரை மீது சவாரிசெய்யும் பா.ஜ.க.வின் கனவு பலிக்க வேண்டுமானால் அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் வாக்குகளையும் என்.டி.ஏ. கூட்டணி வென்றாக வேண்டும். இதற்காக, "சேர்க்கவே மாட்டேன்' எனக் கூறிய எடப்பாடியாரை முதலில் சமாதானம் செய்வதற்காக, கடந்த இரு மாதங்களுக்கு முன் டெல்லியி லிருந்து தமிழகம் வந்திருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை பொதுச்செயலாளர் அருண்குமார், எடப்பாடியாரை ரகசியமாக சந்தித்து பேசிய பிறகு டி.டி.வி. தினகரனையும் சந்தித்தார்.
அப்போதைக்கு கூட்டணியில் சேர டி.டி.வி.தினகரன் சம்மதம் தெரிவித்திருந்தாலும், பிடிகொடுக்காமலேயே நழுவிக் கொண்டிருந்தார் எடப்பாடியார். இதனால் வெறுப்படைந்த நிலையில்தான், "எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட் பாளராக இருக்கும்வரை என்.டி.ஏ. கூட்டணியில் சேரவே மாட்டேன்'' என அழுத்தம்திருத்தமாக கூறிவந்தார் டி.டி.வி.
இதையடுத்து, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர்களின் "பங்காளிச் சண்டையால்' கூட்டணியின் வெற்றிக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என கருதிய அமித்ஷா, அவரே நேரடியாக களத்திலிறங்கியதாகக் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் நடைபயண நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டெல்லி சென்ற கையோடு, "அவங்க ரெண்டு பேரையும் உடனே டெல்லிக்கு வந்து என்னை பார்க்கச் சொல்லுங்க' என கறாராக உத்தரவு பிறப்பித்தார் அமித்ஷா.
அதைத்தொடர்ந்து, ஜனவரி 7ஆம் தேதி இரவு 9:30 மணிக்குமேல் டெல்லியிலுள்ள அமித்ஷாவின் வீட்டில் ஆஜரானார் எடப்பாடியார். அப்போது "ஓ.பி.எஸ்., சசிகலா இல்லையென்றாலும்கூட தினகரனை மட்டுமாவது கூட்டணிக்குள் கட்டாயம் இணைக்கவேண்டும். அதுதான் உங்களுக்கும் நல்லது'' என அறிவுரை கூற, அவரிடம் தலையாட்டிவிட்டு சென்னை திரும்பினார் எடப்பாடியார்.
அதேபோல, மறுநாள் இரவு அமித்ஷாவை சந்தித்தார் டி.டி.வி. தினகரன். அப்போது, வழக்கு தொடர்பான சில பேப்பர்களை காட்டிப் பேசிய அமித்ஷா, "இந்தா பாருங்க. இரட்டை இலை சின்னத்துக்கு 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சி.பி.ஐ.யால் நீங்கள் கைது செய்யப்பட்ட வழக்கிலிருந்து உங்களை விடுவிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீங்கள் தாக்கல் செய்த வழக்கு (ஈதக.தஊய.ட. 273/2019 மற்றும் ஈதக.ஙஆ 5134/2019) கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதே வழக்கு பிப்ரவரி 2ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதாவது, ஒருபுறம் திகார் கதவும், மறுபுறம் என்.டி.ஏ. கூட்டணி கதவும் திறந்தே இருக்கின்றன. எதில் நுழையலாம் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்'' எனக்கூற, சப்தநாடியும் ஒடுங்கிப் போய் சென்னை திரும்பிய டி.டி.வி. தினகரன் அன்றுமுதல் கப்சிப் ஆனார்.
அதன் தொடர்ச்சியாகத்தான், தமிழகம் வந்திருந்த பியூஷ் கோயல் முன்னிலையில் என்.டி.ஏ. கூட்டணியில் அவர் இணைந்ததும், மதுராந்தகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில், "மாண்புமிகு. திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி' எனப் புகழ்ந்ததும் நடந்தது.
தற்போதைக்கு என்.டி.ஏ. கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துவிட்டாலும், "பழைய பாசத்தில் அவருடன் யாரும் கொஞ்சி குலாவக்கூடாது' என அ.தி.மு.க.வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் அனைவருக்கும் ஸ்ட் ரிக்டான உத்தரவு பிறப்பித்திருக் கிறாராம் எடப்பாடியார்.
ஆக மொத்தத்தில்... முதலில் சசிகலா, அடுத்து ஓ.பி.எஸ்., தற்போது டி.டி.வி.தினகரன் என அ.தி.மு.க.வின் விழுதுகள் அத்தனையையும் வெட் டித்தள்ளி எம்.ஜி.ஆரால் துவங்கப் பட்டு, ஜெயலலிதாவால் வளர்த் தெடுக்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்திற்கு பா.ஜ.க. முற்றுப்புள்ளி வைக்கப்போகும் நாளை வேதனை யோடு பார்த்துக்கொண்டிருக் கின்றனர் அரசியல் நோக்கர்களும் ரத்தத்தின் ரத்தங்களும்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/27/ttvbox-2026-01-27-11-32-17.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/ttv-2026-01-27-11-30-48.jpg)