தி.மு.க. மேயருக்கெல்லாம் இது போதாத காலம் போலும்! அந்த வகையில், சொந்த கட்சியினருக்கு எதிராக பா.ஜ.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டதாக திருப்பூர் மேயர் மீதான குற்றச்சாட்டை தலை மைக்கு கொண்டுசென்றுள்ளனர் திருப்பூர் மாநகர தி.மு.க.வினர்.
கடந்த 30ஆம் தேதியன்று அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட டாஸ்மாக் பாரில் மது அருந்திய பாலாஜிக்கும், அந்த பாரில் பணியாற்றிய சின்னமனூரை சேர்ந்த சரவணக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, அங்கேரிப் பாளையம் வழியாக வந்த சர வணக்குமாரிடம் நண்பர்களுடன் சேர்ந்து தகராறு செய்திருக்கிறார் பாலாஜி. இது சரவணக்குமாரின் உறவினர் முத்துவேலுக்கு தெரிந்த நிலையில், தகராறு செய்த இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சரவணக் குமாரை மீட்டு வந்திருக்கின்றார்.
மறுநாள் 31ஆம் தேதியன்று, அதே டாஸ்மாக் பாரில் சரவணக்குமா ரிடம் இந்துமுன்னணி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த பாலமுருகன், பாட்டில்மணி மற்றும் முத்துராஜ் ஆகியோர் வேண்டுமென்றே தகராறு செய்திருக்கின்றனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சரவணக்குமாரை அடித்துத் துவைத்திருக்கிறது இந்த க்ரூப். தொடர்ச் சியாக, "நீ வெளியூர்க்காரன். உனக்கு இங்க ஆள் கிடையாது. நேற்றும் பிரச்சனை, இன்றும் பிரச்சனை, நாளையும் பிரச்ச னைன்னு இப்படியே நடந்துக்கொண்டி ருக்கும். உயிருக்கு உத்தரவாதம் கிடை யாது. நான் சொல்வதைப்போல் சொல். இந்த சம்பவத்தில் ஆனஸ்ட்ராஜ் மேல் புகார் கொடு. மற்றதை நான் பார்த்துக் கிறேன். பணமும் தர்றேன். நம்ம பின் னாடி பெரிய ஆள் இருக்கு'' எனப் புதி தாய் அங்கு வந்து சமாதானம் பேசி யிருக்கின்றார் அதே இந்து முன்னணியை சேர்ந்த வினோத்குமார். இதனை நம்பிய இவரும் மருத்துவமனையில் சேர்ந்து போலீஸில் புகார் செய்ய, மாநகர தி.மு.க.வின் உட்கட்சி மோதல் வெளியாகியுள்ளது.
"அந்த பிரச்சனைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. இந்து முன்னணி, பா.ஜ.க.காரர்கள் துணையுடன் இதனை செய்தது தி.மு.க.வின் திருப்பூர் வடக்கு மாநகர மாவட்ட 15வது வார்டு கழக செயலாளர் குட்டி குமாரும், மேயரும் வடக்கு மா.செ.வுமான தினேஷ்குமாரும். முதல் நாள் நடந்த பிரச்சனை யை விலக்கிவிடச் சென்றது என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றும் முத்துவேல். ஏனெனில், காயமடைந்த சர வணக்குமார் அவருடைய மாப் பிள்ளை. மறுநாள் பிரச்சனை யில் நாங்க இல்லை. எப்படி இதனை செய்தது நாங்கள் தான் எனக் கூறுவார்கள்? எனக்கும் குட்டி குமாருக்கும் கட்சி ரீதியாக எதிர் நிலைப்பாடு உண்டு. நான் வடக்கு மாநகர மா.செ. தங்கராஜ் ஆதரவாளர். அவர் திருப்பூர் வடக்கு மா.செ. தினேஷ்குமார் ஆதரவாளர். இதில் பலி ஆடாகியுள்ளேன். இதுகுறித்து இந்துமுன்னணி, பா.ஜ.க.வினருக்கு சப்போர்ட் செய்யும் மேயர் தினேஷ்குமார் குறித்து தலைமைக்கழகம் வரை புகாரளித்துள்ளேன்'' என்றார் வேலாம்பாளையம் பகுதி கழக இளைஞரணி துணை அமைப்பாளரான ஆனஸ்ட்ராஜ்.
இது இப்படியிருக்க, காயமடைந்த சரவணக்குமாரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை செல்லும் போது, இந்துமுன்னணியை சேர்ந்த முத்துராஜ் என்பவர், "அண்ணே! போலீஸ் ஸ்டேஷ னுக்கு போய் கம்ப்ளைண்ட் கொடுக்கவா? ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு கம்ப்ளைண்ட் கொடுக்கவா?'' என மேயர் தினேஷ்குமாரிடம் பேசும் ஆடியோ ஒன்று மாநகரில் வைரலாகியுள்ளது. சொந்தக் கட்சிக்காரனுக்கு எதிராக, பா.ஜ.க.விற்கு ஆதரவான மேய ரின் பேச்சு விவாதப்பொருளாக, அன்று நடந்ததை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டிருக்கின் றார் சரவணக்குமார். இதுபற்றி தகவலறிந்த ஆனஸ்ட்ராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் குட்டிகுமார் மீது காவல் துறையிடம் புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மேயர் தினேஷ்குமார், "இது திட்ட மிட்டு என்மீது பரப்பப்படும் அபாண்ட குற்றச்சாட்டு. எனக்கு எதிராக வடக்கு மாநகர மாவட்ட செயலாளரான தங்கராஜ் என்பவரின் தூண்டுதல் பேரில் நடக்கின்றது. எதேச்சையாக பொதுமக்களில் யாரேனும் ஒருவர் என்னைக் கூப்பிட்டு தகவல் கூறினால் எனக்குத் தெரிந்த தகவலைத்தான் சொல்வேன். அது யாராக இருந்தாலும்.. அதுபோக, அந்த ஆடியோ பெரியது. ஒரு பகுதியை மட்டும் துண்டித்து பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து தலைமைக்கு தெரியப்படுத்தி விட்டேன்'' என்றார் அவர்.
உட்கட்சி மோதல், மேயர் தினேஷ்குமாரின் குற்றச் சாட்டு குறித்து கருத்தறிய வடக்கு மாநகர மா.செ.தங்கராஜை தொடர்புகொண்டோம்... பதிலளிக்கவில்லை. அவருடைய ஆதரவாளர்களோ, "கட்சிக்காக மட்டுமே வேலை செய்பவர் அவர். மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர் என்பதாலோ என்னவோ, தி.மு.க.வைத் தவிர அனைத்துக் கட்சியினரிடமும் இணக்கமாக இருக்கிறார். மாநகராட்சியில் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட உதவிப் பொறியாளர்கள் ஐவரும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் விசுவாசிகள். சொந்தக் கட்சிக்காரரான லோகேஷ், தகுதியிருந்தும் தவிர்க்கப்பட்டி ருக்கின்றார். இதுகுறித்தும் தலைமைக்கு தகவல் சென்றுள்ளது. இப்பொழுது கூட சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் குட்டிகுமாரை உசுப்பிவிட்டு தங்கராஜை அடிக்க ஏவியிருக்கின்றார். மேயர் தினேஷ்குமார் தலைமைதான் தீவிர விசாரணை செய்து முடிவெடுக்க வேண்டும்'' என்கிறார்கள் அவர்கள்.
உட்கட்சி மோதல்கள் தேவையில்லாத ஆணி என்பதனை திருப்பூர் மாநகர தி.மு.க.வினர் புரிந்துகொள்ள வேண்டும்.