தனது நிறுவனங் களில் முதலீடு செய்தால் வருமானத் திலும், லாபத்திலும் பங்கு கொடுப்பே னென்று ஆசை வார்த்தை சொல்லி, சொந்த அக்காவிடமே நிதி மோசடி செய்த ராஜா என்பவரை கைது செய்துள்ளோம் என்றது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை. கைதானவர் தூத்துக்குடி மாமன்ற அ.தி.மு.க. உறுப்பின ரும், அ.தி.மு.க.வின் தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளராகவும் பதவி வகிக்கும் ராஜா என்பதும், அவர் முன் னாள் அமைச்சரான சண்முகநாதனின் மகன் என்பதும், இதன் பின்னணியில் காதல் திருமண பஞ்சாயத்து இருப்பதும் அதிர்ச்சி யைத் தந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார் சென்னை ஐயப்பன் தாங்கல் பிரெஸ்டீஜ் வில்லா விஸ்டா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த மருத்துவரான விண்ணரசி. புகாரில், "தற்பொழுது சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சாந்தோம் நெடுஞ்சாலை வடக்கு லீத் கோட்டை தெருவில் வசித்து வரும் தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளை பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மகன் ராஜா என்ற எஸ்.பி.எஸ்.ராஜா என்பவர் நடத்திவரும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபம் மற்றும் முதலீட்டிற்கான வருவாயும் தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியதால், உடன் பிறந்த தம்பி என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் முதலில் ரூ.80 லட்சம் கொடுத்தோம். அதனடிப்படையில், 2018, அக்டோபர் மாதத்தில், ஓம் மீனா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதலீட்டாளராக சேர்த்துக் கொண்டார்.
சிறிது நாள் கழித்து இன்னும் பணம் கொடுத்தால் நிறுவனத்தின் 16 சதவிகித பங்குகளை உங்களுக்குக் கொடுக்கிறேன். இதனால் நீங்கள் நிறுவனத்தின் இயக்குநராகக்கூட வாய்ப்பு இருக்கின்றது. வருமானமும் கோடிக்கணக்கில் இருக்கும் என மீண்டும் ஆசைவார்த்தை காண்பித்ததால், என்னுடைய கணவருக்கு சொந்தமாக ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.11 கோடி கொடுத்தார். ஏறக்குறைய எங்களின் முதலீட்டுப் பணம் ரூ.12 கோடியாக உயர்ந்தது. ஆனால் அந்த பணத்தை எங்களுக்கு தெரியாமல் அவரின் மற்றொரு நிறுவனமான ‘அஷூன் எக்ஸிம்’ நிறுவனத்திற்கு மாற்றிக்கொண்டார்.
பின்னர் தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் கோல்டன் ப்ளூ மெட்டல்ஸ் எனும் குவாரியை தொடங்கி என்னை அந்த நிறுவனத்தின் இயக்குநராக்கினார். இதற்காக என்னுடைய 300 சவரன் நகையை அவருக்கு கொடுத்துள்ளேன். பின்னாளில் நான் அந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ததுபோல் போலியாக கடிதம் தயார் செய்து அதனை ஆர்.ஓ.சி.க்கு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து, என்னை நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக அவரது மனைவி அனுஷாவை நியமித்து என்னை ஏமாற்றிவிட்டார். இதுபோக, அவரது அரசியல் எதிர்காலத்திற்காக என்னுடைய கணவர் ரூ.2.75 கோடி கொடுத் துள்ளார். இதுவரை மொத்தமாக ரூ.17 கோடி கொடுத்துள்ளோம். ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், நம்பிக்கை மோசடி செய்த எஸ்.பி.எஸ்.ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா மீது 409, 420, 485, 468, 471, 34 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கூடுதலாக, அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாதவாறு விமான நிலையங்களுக்கு, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதனிடையே, சென்னை விமான நிலையத்திலிருந்து மலேஷியா செல்ல முயன்ற ராஜாவை கைது செய்து சிறையிலடைத்த போலீஸார், அவரது மனைவி அனுஷாவை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் குடும்ப நண்பர் ஒருவரோ, "எம்.ஜி.ஆர். காலத்தில் கிளைச்செயலாளராக தொடங்கி, நான்கு முறை அமைச்சரான பண்டாரவிளை எஸ்.பி.சண்முகநாதனுக்கு 5 மகள்கள், ஒரே மகன். ஒரே ஆண் வாரிசு என்பதால் பெயருக்கேற்றபடி ராஜாவாகவே வளர்க்கப் பட்டார் சண்முகநாதனின் மகன். தூத்துக்குடி மாவட்ட அரசியலில் என்னுடைய ஒரே வாரிசு என்னுடைய மகன் ராஜா மட்டுமே எனக் கூறிவந்த சண்முகநாதன், தன்னுடைய மகன் ராஜாவை தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வைத்தார். 19வது வார்டில் வெற்றிபெற்ற தன்னுடைய மகனை மேயராக்கி அழகு பார்க்கும் ஆசையில் மேயருக்கான வேட்பாளராக்கினார். ஆனால் தோல்வியடைந்தார். இது போனால் என்ன? அவன் கோட்டைக்குப் போகணும்னு எழுதிருக்குலே.. இப்ப கட்சியில் தெற்கு மா.செ.வாக இருக்கேன். இத வைச்சு எம்மகன் ராஜாவை 2026ஆம் ஆண்டு தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வைத்து கோட்டைக்கு அனுப்புவேன் என்பார்.
ஒரே மகன் என்பதால் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்தார். மகள்களும் ராஜாவைத் தான் தாங்கினார்கள். ஆனால் காதல் திருமணம் செய்து முன்னாள் அமைச்சருக்கு மட்டுமில்லாமல் குடும்பத்தையே நெஞ்சை பிடிக்க வைத்தார் ராஜா. ஆரம்பத்திலிருந்தே, "அந்த சாதி நமக்கு ஆகாது. அவள விட்டுட்டு வா!' என ராஜாவுக்கு பல வகையிலும் நெருக்கடி கொடுத்துப் பார்த்தது சண்முகநாதன் குடும்பம். அவர் அசையவில்லை. சென்னையிலேயே மாமனார் ஆதரவில் காதல் மனைவியுடன் வசிக்க ஆரம்பித்தார். இப்ப தேர்தல் நெருங்க ஆரம்பித்துவிட்டது. வேறு வழியில்லை. சொந்த மகளை வைத்து சீட்டிங் அஸ்திரத்தை பிரயோகிக்க ஆரம்பித்திருக்கின்றார் சண்முகநாதன்'' என்றார் அவர்.
சென்னையில் m/s Omeena pharma distributors pvt limited, m/s Ashun exim, m/s Golden blue metal pvt limited.., என இத்தனை நிறுவனங்களா? அதுபோக கட்டலாங்குளத்தில் 40 ஏக்கர் நிலம், 300 பவுன் நகைகள் எனக் குடும்பப் பிரச்சினை யில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் பினாமி சொத்துக்கள் பட்டியல் வெளியாகிறதே? இப்படி குடும்பத்துக்குள்ளயே அடிச்சிக்கிட்டாத்தான் பினாமி சொத்துகளின் உண்மை நிலவரமே வெளிவரும் போல என இப்பகுதியிலுள்ள வாட்ஸ்-அப் வட்டாரத்தில் வைரலாகி வருகின்றது. இதே வேளையில், அந்த கோல்டன் ப்ளூ மெட்டல்ஸ்தான் இப்போது தற்போதைய அமைச்சர் ஒருவரின் மகன் பெயரில் இருக்கின்றது. வெளியில் எதிர்க்கட்சிகள், உள்ளுக்குள் பிசினஸ் பார்ட்னர்கள் என்பதும் வைரலாகியுள்ளது.
"அனுஷாவும், ராஜாவும் காதலித்துத்தான் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு எஸ்.பி.எஸ். தரப்பு ஒத்துக்கொள்ளவேயில்லை. முன்னாள் அமைச்சர் என்பதால் தன்னுடைய அதிகாரத்தை அவர்களிடம் காண்பித்தார். அவருடைய மகள்களும் இந்த திருமணத்தை தடை செய்வதில் மட்டுமே குறியாக இருந்தனர். இதற்கான ஒரே காரணம் அந்தப் பெண் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமே. ராஜாவின் திருமணத்தைத் தடுக்க தற்கொலை மிரட்டல் விடுத்தனர். ஆணவக்கொலை செய்வோ மென்றும் மிரட்டிப் பார்த்தனர். எஸ்.பி.எஸ்.ராஜா எதற்கும் மசியவில்லை. காதலில் உறுதியாக இருந்து அந்தப் பெண்ணையே திருமணம் செய்தார். பாதுகாப்பிற்காக பெண் வீட்டாரின் அரவணைப் பில் இருந்தார். இடையில் "அந்தப் பெண்ணை விட்டுட்டு வா! உன்னை எம்.எல்.ஏ. ஆக்குகிறேன். உன்னுடைய சகோதரிகளுக்கும் புகுந்த வீட்டில் மரியாதை இருக்கும். இல்லையெனில் நீ வம்பாக சிக்குவாய்!' என அவரது குடும்பத்தினரால் எச்சரிக்கப்பட்டார் ராஜா. அது இப்படி ஆகுமென் றும், கைது வரை போகுமென்றும் நினைக்க வில்லை. இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு. இப்பொழுது கூறப்பட்ட புகாரில் உள்ள நிறுவனங்களை உற்றுநோக்கினால் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது எனத் தெரியும். நல்லவேளை கொலையாகவில்லை இருவரும்'' என்கிறார் தலைமறைவாக இருக்கும் அனுஷாவின் உறவினர்.
"அவ வேணாம்னு வரட்டும்... அத்தனையும் விலகும்'' என்கிறது சண்முகநாதனின் தரப்பு. ஆகையால் இந்த நாடகம் விரைவில் முற்றுப்பெறும் என்கின்றனர் சண்முகநாதனின் குடும்பத்து நண்பர்கள்.
இந்நிலையில் எஸ்.பி.எஸ்.ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி அறிவித்துள்ளது அ.தி.மு.க. தலைமை.
-நா.ஆதித்யா