கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக நினைக்குமாம் பூனை. இந்தப் பூனை ரக மனிதர்கள் நம்மிடையே உண்டு. அவர்கள் எதற்கும் கவலைப்படாமல், எதுவும் செய்வார்கள். நாட்டுக்கோ, தனி நபருக்கோ, எல்லாவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவார்கள். அவர்கள் எத்தகையவர்கள் என்பதைப் பார்ப்போம்.
கறுப்புப் பணம், கள்ள நோட்டு, ஊழல் மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக, 2016, நவம்பர் 8-ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும், வெளிநாடுகளில் தங்கியிருப்போர், சுற்றுலா சென்றவர்கள், என்.ஆர்.ஐ., ராணுவத்தில் பணியாற்றுவோர், 2017, மார்ச் 31-ஆம் தேதி வரையிலும் ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டது.
நூறு கோடிக்கு ஐநூறு கோடி டீல்!
ஊழலோ, வரி ஏய்ப்போ செய்தவர்கள், கோடிகோடியாக சேர்த்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை, வங்கி மேலாளர்களின் ஒத்துழைப்போடும், கமிஷன் அடிப்படையிலும், முடிந்தமட்டிலும் மாற்றிவிட்டார்கள். ஆனாலும், ‘அதுக்கும் மேல’ என்று சொல்லும்விதத்தில், அதிகமாக குவித்து வைத்திருந்த பழைய நோட்டுகள் எல்லாவற்றையும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களால் மாற்ற முடியவில்லை. அதனால், சென்னையில் மட்டும், சில இடங்களில் குடோன் பிடித்து, பல ஆயிரம் கோடி செல்லாத நோட்டுகளை ஸ்டாக் வைத்திருக்கின்றனர். கெடு முடிந்து ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையிலும், செல்லாத நோட்டுகளை மாற்றிவிடலாம் என்ற பழைய நினைப்போடு, சில ‘அன்டர்-கிரவுன்ட்’ வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதற்கென்றே, 180 தரகர்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர். ‘ரூ.100 கோடி புது நோட்டுக்கு, ரூ.500 கோடி பழைய நோட்டுகள் தருகிறோம்‘ என்று ‘டீல்’ பேசுகின்றனர். ஒப்பந்தமும் போடுகின்றனர். பேராசையின் காரணமாக, சுய அறிவை இழந்து, ‘செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்’ என்ற குருட்டு நம்பிக்கையோடு, இந்தத் தரகர்கள் விரிக்கும் மாயவலையில் சிலர் விழுந்த வண்ணம் உள்ளனர்.
வீடியோ பதிவில் கரன்ஸி கட்டுக்கள்!
சென்னை தியாகராயநகர் ஏரியாவில், ஜீவா பார்க், சோமசுந்தரம் பார்க், நடேசன் பார்க், ஆந்திரா கிளப், முத்தையா மெஸ், சங்கீதா ஹோட்டல், வாணி மஹால், ராஜா டிரைவிங் ஸ்கூல், நீலகண்டமேத்தா தெரு, கோயம்பேடு சங்கீதா ஹோட்டல், அண்ணாநகர் சரவணபவன், வடபழனி எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் தியேட்டர் அருகிலுள்ள பொம்மைக்கடை போன்றவை தரகர்கள் கூடும் இடங்களாக உள்ளன. இவர்கள் சர்வசாதாரணமாக, ‘100 கோடி, 200 கோடி’ என்று யார் யாரிடமோ போனில் பேசியபடியே இருப்பார்கள். இந்த ஏரியாக்களில் புதிதாக யார் தலை தெரிந்தாலும், அவர்களின் நடவடிக்கையை கவனித்து, "புதுசுக்கா? பழசுக்கா?'’’ என்று கேட்டு, தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வார்கள் தரகர்கள். புதுசு’’ என்று ஒருவர் சொன்னால், “"உங்ககிட்ட புதுசு எவ்வளவு இருக்கு? எங்ககிட்ட பழசு இவ்வளவு இருக்கு'’’ என்று கூறி, அண்ணா நகர் கிழக்கு -சிந்தாமணி சிக்னல் -பாலாஜி பவன் ஹோட்டல் மேல்தளத்தில் இயங்கிவரும் சொரன்டோ கெஸ்ட் ஹவுஸ் -அறை எண் 213-க்கு அழைத்துச் செல்வார்கள். அங்குவைத்து, "எங்ககிட்ட இந்த லாட்ஜுலயே பழசு 50 கோடி வரைக்கும் இருக்கு. உனக்கு காட்டுறதுன்னா இப்பவே காட்டுறோம். அல்லது வீடியோ பார்த்தால் போதும்னா வீடியோ காட்டுறோம். நீ புதுசுக்கு வீடியோ எடுத்துட்டு வா. அந்த வீடியோவுல, ரூபாய் நோட்டுக் கட்டுக்களுக்கு மேல் அன்றைய செய்தித்தாளையும் வைத்து எடுக்கவேண்டும். இல்லைன்னா, எங்கள கூட்டிட்டுப்போயி காட்டு. இந்த லாட்ஜுல வச்சிருக்கிற பணம் சும்மா ஒரு சாம்பிளுக்குத்தான். நுங்கம்பாக்கம் ஏரியா குடோன்ல பத்தாயிரம் கோடி வச்சிருக்கோம். ஒரு பெர்சன்ட் கமிஷன்னாலே உனக்கு 100 கோடி கிடைக்கும்'’என்று விளக்கிவிட்டு, புது நோட்டு தரகரின் செல்போன் நம்பரை, பழைய நோட்டு தரகர் வாங்கிக்கொள்வார்.
‘சேர்த்த பணமெல்லாம் செல்லாமல் போச்சே!’ -புலம்பிய தலைவர்கள்!
அடுத்த நடவடிக்கையாக, புது நோட்டு தரகர் செல்போன் நம்பரின் மூன்றுநாள் தொடர்புகளை ஆடியோவுடன் எடுப்பதற்கு கோயம்புத்தூர் முருகானந்தம் என்பவர் ஆயத்தமாகிவிடுவார். மார்ட்டின் பினாமி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் இவர், காவல்துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, புது நோட்டு தரகரின் கால்-லிஸ்ட்டை எடுத்து, புது நோட்டு வைத்திருக்கும் பார்ட்டி குறித்த விவரங்களைச் சேகரித்துவிடுவார்.
அடுத்த நடவடிக்கையாக, புதுநோட்டு தரகரை கழற்றிவிட்டு, புது நோட்டு வைத்திருக்கும் பார்ட்டியை நேரடியாகவே அழைப்பார்கள். அப்போது, புரிந்துணர்வு ஒப்பந்தம்(Memorandum of understanding) போடுவார்கள். அப்போதுதான், ஆளும்கட்சியைச் சேர்ந்த, மூன்று இனிஷியல்காரரான, தமிழக அரசியல் தலைவரின் பினாமிகளில் ஒருவர் என்று பேசப்படும், சென்னை, அபிபுல்லா ரோடு ஸ்ரீனிவாசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார். அந்த அரசியல் தலைவரின் கோடானுகோடிகளோடு, அவருக்கு நேரெதிர் அரசியல் பண்ணும் சிரித்த முகத்தின் பல்லாயிரம் கோடி பழைய நோட்டுகளும் இந்த ஸ்ரீனிவாசன் வசம் உள்ளன. இந்த இருவர் மட்டுமல்ல. மேலும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் "சேர்த்த பணமெல்லாம் செல்லாமல் போச்சே? இனி எப்படி மாற்ற முடியும்? இந்த நோட்டுக்களை வைத்து நாங்க என்ன செய்ய முடியும்? ஏதாவது பண்ணுங்க. எப்ப முடியுமோ? அப்ப கொடுக்கிறத கொடுங்க'’ என்று புலம்பித் தீர்த்துவிட்டு, ஸ்ரீனிவாசன் சொல்லும் இடங்களில் கொண்டுவந்து கொட்டிவிட்டார்கள்.
செல்லாத நோட்டுகளை வைத்து, காவல்துறையினரின் ஆசியோடு, அரசியல் பின்னணி உள்ள இந்த ஸ்ரீனிவாசன் கும்பல் என்ன ஆட்டம் போடுகிறது தெரியுமா?
(சதுரங்க வேட்டை தொடரும்)
-சி.என்.ராமகிருஷ்ணன்