கொரோனாவுக்கு இணையாக பெரும்பகுதி மக்களின் வாழ்க்கையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது ஊரடங்கு. தினக்கூலிகளும், அன்றாடங் காய்ச்சிகளும் ஊரடங்கு முடியும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

Advertisment

இம்மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ரேசன் ஊழியர்கள் மூலமாக அத்தியாவசியப் பொருட்களோடு, இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. அப்போது ரேசன் ஊழியர்களுடன் ஆளுங்கட்சி பிரமுகர்களை யும் அனுப்பிவைத்து, மக்கள் அபிமானத்தை அறுவடை செய்ய முயற்சித்தது அரசுத் தரப்பு.

Advertisment

dd

இது ஒருபுறமென்றால், மக்களுக்கு வழங்கவேண்டிய உதவித் தொகையிலேயே அதிகாரிகள் கைவைத்த கொடுமை நடந்திருக்கிறது. இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளருக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள மொளச்சூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் சுலோச்சனா ஆகியோர் புகார் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், “அரிசி அட்டைதாரர்களுக்கு அரசு கொடுத்திருக் கும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித் தொகையை விட்டுக் கொடுப்பதற்காக தங்களது இணையதளத்திற்குச் சென்றோம். அங்கே, எங்களது குடும்ப அட்டைக்கு ஏற்கனவே உதவித் தொகை வழங்கப்பட்டுவிட்டதாக தகவல் வந்தது. ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாங்கள் வெளியே வரவும் இல்லை. குடும்ப அட்டை எங்களிடமே இருக்கிறது எனும்போது, பணம் பெற்றதாக அறிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

Advertisment

இது எங்களுக்கு மட்டும் நடந்ததாகத் தோன்றவில்லை. நாங்கள் வசிக்கும் பகுதியில் மற்றவர்களுக்கும் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுக்கிறது. இதில் முறை யாக விசாரணை நடத்தி, தவறிழைத்த அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தை எழுதியவரும், பத்திரிகையாளருமான உதயகுமாரிடம் இதுதொடர்பாக பேசிய போது, “உதவித்தொகையை விட்டுக் கொடுத்தால் இயலாதவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அதையே கொள்ளை யடித்திருக்கிறார்கள். நுகர்வோர் பாதுகாப்புத்துறை மட்டுமின்றி, லஞ்ச ஒழிப்புத்துறை, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மற்ற சில அரசு நிறுவனங்களுக்கும் இந்தக் கடிதத்தை அனுப்பினோம். இதைக் கேள்விப்பட்ட மொளச்சூர் ரேசன் அதிகாரிகள், நேராக என்னிடமே வந்து சமரசம் பேசினார்கள். என் னுடைய வாக்கினை இன்னொருவர் போடுவது எந்தளவுக்குக் குற்றமோ, அதேபோல், எனக்கான நிவாரணத் தொகையில் கைவைப்பதும் குற்றம் என்று சொல்லி மறுத்துவிட்டேன்'' என்றார்.

உதயகுமார் வசிக்கும் சுங்குவார் சத்திரம் ரேசன் கடையின் கீழ்வரும் 200 அட்டைதாரர்களில் முக்கால்வாசி பேரின் நிலை இதுதான் எனில், தமிழகம் முழுவதும் எவ்வளவு பெரிய மோசடி அரங்கேறியிருக்கக்கூடும். யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதுதான் அரசின் இந்த உதவி. அதிலும் கைவைத்தால் எங்குதான் போவார்கள் மக்கள்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

படம் : அசோக்