"நீங்கள்தானே போராடினீர்கள்.? இனிமேல் போராட்டம் என்பது உங்கள் கனவிலும் இருக்கக்கூடாது' என காவல்துறையால் குறிவைத்து இளைஞர்கள் வேட்டையாடப்பட்ட நிலையில்... தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கருகிலேயே தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அ.குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, மடத்தூர், சில்வர்புரம், சங்கரப்பேரி, தபால் தந்தி காலனி உள்ளிட்ட 15 கிராமங்களில் பெரும்பாலான இளந்தாரிகள் யாரும் இல்லை! குறிப்பாக அ.குமரெட்டியாபுரம், மடத்தூர் பகுதிகளில் யாருமே இல்லை என்பதுதான் வேதனையே!
""சுவர்ஏறிக் குதித்து நள்ளிரவில் கதவை தட்டியும், உடைத்தும் வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் நபர்களைத் தூக்கிச் செல்கின்றது போலீஸ். தினமும் குறைந்தது பத்து பேரையாவது தூக்கிச் செல்வதுதான் அவர்களது இலக்குபோல. கதவைத் தட்டிய நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் என்னவென்று கேட்டால், "உம் பையன் தீவிரவாதி லிஸ்ட்டுல இருக்கான்... அதனாலதான் தேடிவந்தோம்' என சர்வசாதாரணமாய்க் கூறிவிட்டு, "சீக்கிரம் உம் பையனை வரச் சொல்லாவிட்டால் "இவம் தீவிரவாதி'ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிப்புடுவோம்... அப்புறம் விசனப்படக்கூடாது' என மிரட்டிவிட்டும் செல்கிறார்கள். நாங்க என்ன தப்பு செய்தோம். மக்களுக்குத் தொந்தரவு கொடுக்கின்ற ஆலையை மூடச்சொன்னது தப்பா..?'' என பொரிந்து தள்ளுகிறார் அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த பொன்மாடத்தி.
"பொதுமக்களை எக்காரணம் கொண்டும் விசாரணை எனும் பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது' என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்ததையும், வழக்கிற்கு சம்பந்தமில்லாத மக்கள் கைது செய்யப்படுவதில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்ததையும் சட்டைசெய்யாமல், தொடர் கைது நடவடிக்கைகளை செய்து வருகின்றது எஸ்.பி. முரளி ரம்பா தலைமையிலான காவல்துறை.
அ.குமரெட்டியாபுரத்தில் பால்ராஜ் மற்றும் இஸ்ரவேல் அந்தோனிராஜ், வீரபாண்டியாபுரத்தில் மகேஷ் மற்றும் ராஜ்குமாரை போலீஸார் கைது செய்ததால்... இது இன்னும் தொடரும் என்ற அச்சத்தில் அங்கு இளந்தாரிகள் யாரும் இல்லை. தூத்துக்குடி மாநகரத்திலும் கைது எனும் பெயரில் வேட்டையாடி வருகின்றது. நள்ளிரவில் போஸ்டர் ஒட்டுபவர் தொடங்கி மாணவர் வரை தேடுதல் வேட்டை என்கிற பெயரில் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் விளாசுவதையும், பல பேரைத் தேடிப் பிடித்து இழுத்து வந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதையும் இன்றுவரை விடவில்லை மாவட்ட காவல்துறை.
தலைமறைவாக இருக்கும் சுந்தரமூர்த்தியோ, ""அர்த்தராத்திரியில் வந்து கைது செய்யுமளவிற்கு நாங்க என்ன குத்தம் செய்தோம்..? வழக்கே இல்லாமல் வெறும் கணக்குக் காண்பிக்கிறதுக்காக ஆளை தூக்குவது எந்த வகையில் நியாயம்..?'' என்றார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன் மடத்தூர் கிராமத்திலுள்ள ஆண்களை போலீஸ் தூக்கிச் செல்ல வருகின்றார்கள் என்கிற தகவல் பரவியவுடனே, ""வர்ற போலீசுகிட்ட நாம மட்டும் ஏன் தனியாகப் போராடணும்..?' என ஊருக்கு நடுவில் இருக்கின்ற பத்ரகாளியம்மன் கோவிலில் ஒன்றுகூடி விடிய...விடிய அங்கேயே பொழுதைக் கழித்திருக்கின்றனர் அக்கிராம மக்கள். ""எங்க ஊர் இளந்தாரிகளை கைது செய்தவுடன் அவர்களது கை கால்களை உடைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது போலீசு'' என்கின்றனர் மடத்தூரை சேர்ந்த சுரேஷும், அர்ஜுன பாண்டியனும்.
காவல்துறையோ, ""கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியவர்களை வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில்தான் கைதுசெய்து வருகிறோம். சம்பந்தம் இல்லாத யாரும் கைது செய்யப்படவில்லை. "எந்த சம்பவத்திலும் தொடர்பு இல்லாதவர்கள் என தெரியவந்தால் உடனே விடுவித்துவிடுகிறோம்'’என்கிறது.
அடக்குமுறைகளால் எந்தவொரு போராட்டமும் முடிவிற்கு வந்ததாக வரலாறு இல்லை.
-நாகேந்திரன்
படங்கள்: ராம்குமார்
குமுறும் பெண்கள்!
""கலவரத்தின்போது பேசப்பட்ட செல் அழைப்புகளின் பட்டியலையும் போட்டோவையும் அடையாளமாக வைத்து, அப்பாவி மக்களை போலீஸ் கைது செய்கிறது. சட்ட உதவி மையத்தில் குவியும் பெண்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்காக பல்வேறு வழக்கறிஞர்களை சட்ட உதவி மையம் நியமிச்சிருக்கு. கலவரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அரசின் ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், போலீஸ் அத்துமீறி ஆட்களைத் தூக்கினால் விசாரணைக் கமிஷனிடம் மக்கள் எப்படிப் போய் நடந்ததை முறையிடுவார்கள். மனு கொடுப்பார்கள். அது நடைமுறைச் சட்டத்திற்கு மாறானது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் உண்மை நிலவரம் வெளியே தெரியாமல் போய்விடும்'' என்கிறார் வழக்கறிஞர் அதிசயகுமார்.
-பரமசிவன்