(25) ஜப்பான் பொம்மை பேசிய வசனம்..!
தன் படத்தில் பணியாற்றும் நடிகையின் வலியறிந்து பேசிய முதலாளி எஸ்.எஸ். வாசன் என் இதயத்தில் உயர்ந்து விட்டார்.
என் பக்கம் திரும்பிய ஜெமினி அதிபர், "பணம் தருவாங்க வாங்கிக் கோங்க. 10 அல்லது 20 நாட்கள் வீட்டிலேயே தங்கி நல்லா ரெஸ்ட் எடுங்க. ஊட்டச்சத்து இருக்கிற உணவா சாப்பிடுங்க. உடம்பு சரியானதும் நீங்க ஷூட்டிங்குக்கு வாங்க'' என்று சொன்னதைக் கேட்டு அதிசயித்துப் போனேன்
அந்தக்காலத்துப் பட முதலாளி கள் தங்கள் படத்தில் பணியாற்றுகிறவர்களை எப்படி பார்த்துக் கொண்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆனாலும் ஜெமினி அதிபர் போன்ற விரிந்த இதயம் கொண்ட தயாரிப்பாளர்கள் மிக அபூர்வம்.
சற்று நிறுத்தி யோசித்தவராக, உரிமையோடு சில விஷயங்களைச் சொன்னார்.
"உனக்கு நல்ல முகம் இருக்கு. ரொம்ப நல்ல குரல் வளம் இருக்கு. ஆனால் முகத்துல அதற்கேற்ற மாதிரியான மலர்ச்சி இல்லை, வாடிப்போன மாதிரி இருக்கே. அப்படி இருக்கக்கூடாது. வெளியிலே வந்துட்டா அதுக்கேத்த மாதிரி நம்ம உடம்பை பார்த்துக்கணும்'' என்றார்.
அப்போது அது எனக்கு மிகச்சாதாரணமாகப் பட்டது. ஆனால் அவர் தந்த அறிவுரைகள்தான், என்னை சினிமாவில் ஜெயிக்கவைத்தது. இன்றுவரை என் உடல் நலனில், மேக்கப்பில் தனி அக்கறை எடுத்துக் கொள்கிறேன். காரணம், பொதுமக்கள் ஒவ்வொரு நடிகரையும், நடிகையையும் அடையாளம் காணும்போது, அவர்களது தனித்தன்மை, கட்டுமஸ்தான உடல் ஞாபகத்துக்கு வர வேண்டும். இதுதான் சினிமாக்காரர்களுக்கு தனி அடையாளத்தை கொடுக்கும். இதைத்தான் எனக்கு கொடுத்த அட்வைஸிலும் வாசன் சொன்னார். அவர் சொன்னதை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன்.
தெலுங்கு "சௌகார்' என்னை தமிழ்ப்பட உலகிற்கும் அறிமுகம் செய்து வைத்தது.
அதோடு சௌகார் என்கின்ற என் முதல் பட டைட்டில் என் பெயரோடு சேர்ந்து கொண்டது. தமிழில் என் முதல் படமே வரலாற்றுச் சிறப்புமிக்க படமாக அமைந்துவிட்டது ஆம்! தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. அதன் நிறுவனத் தலைவர் டி.ஆர்.சுந்தரம் படத்தை இயக்கினார்.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகிய காப்பியங்களில் ஒன்றான "வளையாபதி' சமண சமயம் சார்ந்த நூல். இதன் ஆசிரியர் யார் என்பது தெரியாது. இந்தக் காப்பியத்தைத் தழுவித்தான் "வளையாபதி' திரைப்படம் எடுக்கப்பட்டது. படத்திற்கான திரைக்கதை -வசனம் -பாடல்கள் எழுதியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழின் மிக கம்பீரமான கவிஞர்.
17248 அடி நீளமான படத்திற்கு இசை அமைத்தவர் எஸ். தட்சணாமூர்த்தி. நடித்தவர்கள் நான் (சௌகார் ஜானகி), முத்துக்கிருஷ்ணன், டி.பி. முத்துலட்சுமி, ஏ கருணாநிதி மற்றும் பலர். டைட்டில் கார்டில் என் பெயரை சௌகார் ஜானகி என்று போட்டார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/sowcarjanaki1-2026-01-08-17-58-38.jpg)
காரணம், அப்போது தமிழ் சினிமாவில் இதே பெயரில் ஒரு முன்னணி நடிகை நடித்துக்கொண்டிருந்தார். அவர்தான் பிற்காலத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மனைவியான வி.என்.ஜானகி அக்கா. நான் "சௌகார்' ஜானகியானது இப்படித்தான் .
"வளையாபதி'யில் நடிக்கச் சென்றபோது என்னை நிறைய பயமுறுத்தினார்கள். மாடர்ன் தியேட்டர்ஸில் நடிக்கிறே, படப்பிடிப்பில் தாமத மில்லாமல் கலந்துகொள்ள வேண்டும். ஓரிரு நாள் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் படத்திலிருந்தே அதன் தயாரிப்பாளர் டைரக்டர் டி.ஆர்.சுந்தரம் தூக்கிவிடுவார். உடனே வேறு நடிகையை வைத்து படமாக்க ஆரம்பித்து விடுவார். அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
அப்போது டப்பிங் முறை இல்லை. எனவே நானே படப்பிடிப்பின்போது வசனம் பேச வேண்டும்.
சாதாரண வசனம் என்றால் ஒரு முறைக்கு இருமுறை மனப்பாடம் செய்து பேசி விடலாம், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய செந்தமிழ் வசனத்தை சரியாக உச்சரிக்க வேண்டும், தப்பாக மாற்றி உச்சரித்தால் கவிஞர் கோபித்துக்கொள்வார்.
நல்லவேளை மாடர்ன் தியேட்டர்ஸ் ஒத்திகைக் கூடத்தில் வசனங்களைக் கவனமாக கேட்டுக் கேட்டு உள்வாங்கி பேசினேன்.
தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நான்தான் தமிழ் காவியமான "வளையாபதி'யில் கவியரசர் பாரதிதாசனின் தேன்சூட்டும் தீந் தமிழ் வசனங்களை பேசி நடித்தேன் என்பதை பலர் நம்பவே இல்லை. ஆரம்பத்தில் யார்தான் நம்ப முடியும். அப்போதும் இப்போதும் நான் பெருமைப்பட்டு ரசித்த ஒரு பாராட்டு, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பாராட்டுதான்.
"இந்த ஜப்பான் பொம்மையா புரட்சிக் கவிஞரின் வசனங்களைத் திருத்தமாகப் பேசி நடித்தது?' என்று அவர் சொன்ன வார்த்தை என் முதல் தமிழ் படத்திற்கு கிடைத்த உயரிய விருது என்றே சொல்வேன்.
1952, அக்டோபர் 17ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து கலைஞர் வசனம் எழுதிய "பராசக்தி' திரைப்படம் வெளியான அதே நாளில், நான் தெலுங்கில் நடித்த "முக்குரு கொடுகுலு' படமும், தமிழில் அறிமுகமான "வளையாபதி' படமும் வெளியானது என்பது மகிழ்ச்சியான விஷயம்.
இன்னொரு உண்மைத் தகவலை சொல்ல ஆசைப் படுகிறேன். "பராசக்தி' படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் தங்கை கல்யாணியாக ஸ்ரீரஞ்சனி நடித்தார். முதலில் அந்த கல்யாணி வேடத்தில் நடிக்க வேண்டியவள் நான்தான். முகவரி மாறிப் போனதால் எனக்கான வாய்ப்பு இடம் மாறிவிட்டது. ஸ்ரீரஞ்சனி கல்யாணியாகிவிட்டார். அதே நாளில் தமிழில் நான் நடித்த முதல் படம் வெளிவந்தது கூடுதல் சிறப்பு.
அன்பிற்குரிய தமிழ் மக்களே, "வளையாபதி' படத்தின் வீடியோ யாராவது வைத்திருந்தால் அன்புகூர்ந்து எனக்கு அனுப்பி வையுங்கள்.
(பேசுறேன்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/08/sowcarjanaki-2026-01-08-17-58-13.jpg)