(23) அழுகை... கோபம்... ரொமான்டிக்...!

"வாஹினி ஸ்டுடியோவில் அஞ்சம்மா என்ற ஒரு பெண்மணி எனக்கு உதவியாக இருந்தாள். அவள் ரொம்ப நாள்வரை ஸ்டூடியோவிலேயே இருந்தாள். நான் வீட்டிலிருந்து ஸ்டூடியோவுக்கு புறப்படுவதற்கு முன்பு குறிப்பிடப்பட்ட நேரப்படி குழந்தைக்கு பாலூட்டிவிட்டு வருவேன்.  படப்பிடிப்புத் தளத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட நேரம் வரும்போது  பால் சுரக்கும் அந்த நேரம் வந்துவிடும். என்னால் அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துடிப்பேன். செயற்கை முறையில் நான் பாலை வெளியேற்றிவிடுவேன். அதன்பின்புதான் வலி குறையும். இதை ஒருநாள் அங்கம்மாள் பார்த்துவிட்டு "என்னம்மா இது?'' என்று வேதனைப்பட்டாள். 

Advertisment

அங்கே என் குழந்தை பசியால் துடிக்கிறதோ, என்னவோ நான் அதை சரிவர கவனிக்காமல் என் கடமையிலிருந்து  தவறிவிட்டேனா? என்றெல்லாம் எண்ணங்கள் வட்டமிடும். அப்போது என் மனம் உள்ளுக்குள்ளேயே விம்மி விம்மி அழும். என் மனசாட்சிக்குத் தெரியும் நான் குற்றமற்றவள் என்று. அது முன்னே வந்து ஆறுதல் சொல்லிவிட்டுப்போகும்.

Advertisment

குழந்தை பிறந்த பிறகு நான் சரியாக ஓய்வெடுத்துக்கொள்ள முடியவில்லை. நல்ல சத்துள்ள ஆகாரத்தையும் சாப்பிட வசதி யில்லை. இதனால் நான் ரொம்பவும்  பல கீனமாக இருந்தேன். எப்போதும் சோர் வுடன் இருந்தேன். இதனால் உடலில் பலம் குறைந்து, சாதாரணமாக நடக்கும் போது கூட கொஞ்சம் கூன் விழுந்தது போல குனிந்துதான் நடப்பேன். படப்பிடிப்புத் தளத்தில் என்னைப் பார்த்த டைரக்டர் பிரசாத், வேடிக்கையாக "இப்படி குனிந்து நடந்தால் எப்படி? உன் முதுகில் ஒரு கல் லைக் கட்டி தொங்கவிட்டு, முதுகை நிமிர்த்தி நடக்க வைக்கப்போகிறேன் பார்'' என்பார்.

எனக்கு சத்தம் போட்டு அழத்தெரி யாது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மன திற்குள்ளேயே குமுறிக் குமுறி அழுவேனே தவிர, நாலுபேர் அறிய சத்தமிட்டு அழவேமாட்டேன். நான் அழுகிறேன் என்பதை என் கண்கள் வேண்டுமானால் காட்டிக் கொடுக்கலாம்.

Advertisment

நான் சினிமாவுக்கு புதுசு என்பதால் சினிமாவில் அழுகைக்கான நடிப்பு, கோபமான நடிப்பு, ரொமாண்டிக் நடிப்பு எல்லாம் இயல்பாக  வெளிப்படுத்த வேண் டும் என்பதை  சினிமாவுக்குள் வந்துதான் நான் கற்றுக்கொண்டேன். அதனால் "படப்பிடிப்பு நடைபெறும்போது என்னைப் பார்க்க யாரும் ஸ்டுடியோவுக்கு வரவேண்டாம்' என்று என் கணவர் மற்றும் என் வீட்டார் எல்லாரிடமும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன். "நான் சினிமாவை ஒரு தொழிலாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். அங்கே என்னை வேடிக்கை பார்க்க  நீங்கள் யாரும் வரவேண்டாம்'' என்று சொல்லிவிட்டேன்.  அப்போது என் தங்கை கிருஷ்ணாவும் ஜெமினி ஸ்டுடியோவில் மாதச் சம்பளத்தில் நடனமாடும் பெண்களில் ஒருத்தியாக வேலை பார்த்து வந்தாள். அப்போதெல்லாம் நடிகர், நடிகைகள், நடனப் பெண்கள், பாடகிகள் போன்ற வர்களுக்கு மாதச் சம்பளம்தான் கொடுப்பார்கள். அந்த வகையில் என் தங்கை கிருஷ்ணா மாதம் 125 ரூபாய் சம்பளமாக பெற்றுவந்தாள். காலையில் ஸ்டுடியோவுக்குச் சென்றால் மாலையில்தான் அவள் வீடு திரும்புவாள்.

அப்போது வீட்டிலே என்னை எல்லோரும் (அம்மா, அண்ணா) "இவளுக்கு என்ன பெரிய ஹீரோயின் ஆயிட்டா'' என்று குத்தலாகப் பேசுவார்கள். பொறுமையின் எல்லைக் கோட்டை நான் நகர்த்திப் போட்டுக்கொண்டே மௌனமாகக் கடந்துபோவேன்.

sowcarjanaki1

நான் நடித்துக் கொண்டிருந்த முதல் படமான சௌகார் படம் முடிவடையும் கட்டத்தை நெருங்க நெருங்க அடுத்தது என்ன? ரசிகர்கள் என்னை, என் நடிப்பை வரவேற்பார்களா? இந்தப் படத்துடன் நமது சினிமா வாழ்க்கை முடிந்து விடுமா? அல்லது தொடருமா? "இதோ இந்தப் படம் முடியப்போகிறது. இது முடிந்ததும் அடுத்த படத்திற்கு யார் நம்மை அழைக்கப் போகிறார்கள்? எப்படி பணம் வரும்? குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது?' என்றெல்லாம் கேள்விகள் கிளம்பி, என் இதயத்தில் அணிவகுத்து நின்றது. எல்லாம் விடை தேடும் கேள்விகள் தான்.

நாளெல்லாம் நெருப்பாக தகிக்கும் சக்தி வாய்ந்த மின்சார விளக்குகளின் முன் நின்று உழைத்துவிட்டு வரும் எனக்கு வீட்டில் நிம்மதி இருக்காது. மாமியார் வீட்டில் இருக்கிறோமா அல்லது பெற்ற தாயுடன்தான் நாம் இருக்கிறோமா? என்ற சந்தேகம் கூட சில சமயங்களில் வந்துவிடும். எதிர்காலம் குறித்த  பயத்தைச் சுமந்துகொண்டு வெளியிலிருந்து வீட்டுக்கு வரும் என்னைக் கண்டதும் என் தாயாரும், சகோதரனும், என் கணவரும் கேட்கும் விசித்திரமான கேள்விகளும், நடந்துகொள்ளும் முறைகளும் எனக்கு நரகவேதனை தரும். இந்த நரக வேதனையிலிருந்து எனக்கு சற்று இளைப்பாறுதல் கொடுத்தது என் குழந்தைதான்.

ஆம்! நான் இரவு வீடு திரும்பியதும், விளக்கைப் போட்டு பார்க்கும்போது பளிச்சென  ஒளியில் கண்களை ஒரு வினாடி மட்டும் திறந்து தன் பொக்கை வாயால் என் குழந்தை சிரிப்ப தைக் காணும்போது அத்தனை வேதனையும், சோர்வும் எங்கோ பறந்தோடிவிடும். தெய்வத்திற்கு நிகரான ஜீவன். ஒன்றும் அறியாத குழந்தைகூட என் வேதனையை மறக்கச் செய்ய சிரித்து வரவேற்கிறது. எல்லாம் தெரிந்தது போல பெருமை யடித்துக் கொள்கிற என் தாய், கணவர், சகோதரன் இவர்களுக்கு ஏன் அது தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வீட்டில் மறுத்துவிட்டார்கள் .அதனால் நான் சும்மா இருந்துவிடவில்லை. என் குழந்தையைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினேன். அவள் பெயர் குப்பம்மாள், நான் அவளுக்கு லட்சுமி என்று பெயர் வைத்தேன். அந்த லட்சுமி என்னுடனே ரொம்பகாலம் இருந்தார். அவளை ஒரு வேலைக்காரியாக அல்ல, என்  மகள்போலவே பார்த்துக்கொண் டேன். என் வாழ்க்கையில் நான் வேத னைப்பட்டு குமைந்தது, சந்தோஷப்பட்டு பூரித்து நின்றது. எல்லாம் அவளுக்குத் (லட்சுமிக்கு) தெரியும். அது மட்டு மல்ல... என் சுகம், துக்கம், தவிப்பு எல்லாவற்றையும் என் கூடவே இருந்து அனுபவித்தவள் லட்சுமி.

"சௌகார்' படத்தின் கதை வசனகர்த்தா வான ஆசாயாஆத்ரேயாவுக்கு என் மீது ஒரு தனிப் பிடிப்பிருந்தது. ஒருநாள் படப்பிடிப்பு இடை வெளியில் என்னிடம் வந்து, "உன்னோடு நான் பேசுவதில் உனக்கு ஆட் சேபனை இல்லையே?'' என்று கேட்டார். எனக்கு அவரது கேள்வி விசித்திர மாக இருந்தது.  "உங்க ளோடு பேசுவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை'' என்றேன். 

நொந்து கிடந்த என் மனமும், அறிவுப் பசியி னால் தவித்துக்கொண்டிருந்தது. கலை உள்ளமும், இலக்கியப் புலமையும் நிறைந்த யாருடனாவது நாம் பேசிப் பழகமாட்டோமா என்று என் உள்ளமும் அப்போது ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தது. செட்டில் வேலை இல்லாத சமயங்களில் நான் ஒதுக் குப்புறமாக ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பேன். அப்போது ஆத்ரேயா என் அருகில் வந்து உட்கார்ந்து கொள்வார். அவர் எழுதிய கவிதைகளை என்னிடம் வாசித்துக் காட்டுவார். அவர் படித்த புத்தகங்களைப் பற்றியும் அதில் உள்ள இலக்கியச் சுவையை, தத்துவங்களை விவரித்துச் சொல்வார்.

அந்தப் பருவத்திலேயே கலை அழகுடனும், கருத்தழகுடனும் யாராவது பேசினாலோ, எழுதினாலோ என்னால் அதை ரசித்து ஜீரணிக்க முடிந்தது. அந்த அளவுக்கு ரசனை சக்தியைக் கடவுள் எனக்கு கொடுத்திருந்தார்.

நாங்கள் இருவரும் செட்டில் உட்கார்ந்து பேசிப் பழகியதைப் பார்த்து, சிலருக்கு என்னவோ போல  ஆகிவிட்டது. தவறாக புரிந்துகொள்ளப் பட்டது. என்னையும் அவரையும் பிணைத்து கம்பி கட்டினார்கள். ஒரு வீண் வதந்தி, எந்த அடிப்படை ஆதாரமுமின்றி கிளம்பிவிட்டது. தங்கள் படத்தின் கதை நாயகி பற்றி வதந்தி வருவது சரி யில்லை என்பதை அறிந்த படக் குழு வினர் செட்டில் என்னுடன் ஆத்ரேயா பழகக்கூடாது என்று சொல்லினர்.

"இங்கே நான் உன்கூட பேசக் கூடாதம்மா'' என்று அவர் கூறினார்.

"அதனால் என்ன... என் வீட்டுக்கு வாருங்கள். அங்கே நாம் சுதந்திரமாகப் பேசலாம்'' என்று சொன்னேன்.

 மறுநாள் முதல் அவர் என் வீட்டுக்கு வந்தார். முன்னறையில் நானும் அவரும் பேசுவோம். நாங்கள் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதற்கு ஆரம்பத்தில் என் வீட்டாரோ, கணவரோ எதிர்க்கவும் இல்லை ஒன்றும் சொல்லவும் இல்லை. ஆனால் நாளடைவில் அவர்கள் போக்கில் ஒரு விசித்திரமான மாறுதல் தெரிந்தது. 

வசனகர்த்தா ஆத்ரேயா வீட்டுக்கு வருவது சரியில்லை. அவர்களுக்கு பிடிக்கவில்லை. அடுத்து அவருடன் நான் பேசக்கூடாது என்று அவர்களும் சொல்ல ஆரம்பித்தனர். குழந்தைகளிடம் ஒரு சுபாவம் உண்டு ஒன்றை செய்யக்கூடாது என்று சொல்லித் தடுத்தோமானால் பிடிவாதமாக அதையேதான் அந்த குழந்தை செய்யும். ஏறக்குறைய அந்தக் குழந்தையின் நிலையில்தான் நானும் அப்போது இருந்தேன். "ஏன் பேசக் கூடாது?'' என்று எதிர் கேள்வி கேட்டேன். "நான் பேசத்தான் செய்வேன்'' என்றேன் பிடிவாதமாக.

சகஜமாக பழகுவதை தப்பான எண்ணத்தின் அடிப்படையில் தவறான கோணத்திலிருந்து என் வீட்டார் பார்க்க ஆரம்பித்தபோதுதான், என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.

அது என்ன...?              

(பேசுறேன்...)

sowcarjanaki2