(33) என்னை தேடிவந்த கதாபாத்திரங்கள்!
ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, அது மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுவிட்டால், தொடர்ந்து அதேபோன்ற வேடங்கள் நம்மைத் தேடி வருவதுண்டு. "படிக்காத மேதை', "பார்த்தால் பசி தீரும்', "அன்னை', "பார் மகளே பார்', "பெற்றால்தான் பிள்ளையா', "மோட்டார் சுந்தரம்பிள்ளை' போன்ற படங்களில் நான் ஏற்று நடித்த குடும்பத் தலைவி, நல்ல மனைவி, நல்ல அம்மா, நல்ல சகோதரி போன்ற குடும்பப்பாங்கான வேடங்கள் உயிர்ப்புடன் இருந்தன. படத்திற்கு பலம் சேர்த்தன என்று பத்திரிகைகள் பாராட்டும் வகையில் அமைந்ததால், அதுபோன்ற வேடங்களுக்காக இயக்குநர்கள் என்னைத் தேடிவந்தார்கள்.
நிஜ வாழ்க்கையில் நான் குறைவில் லாத ஒரு நல்ல அம்மாவாக எனது கடமையைச் செய்து வந்ததால், அம்மா வேடங்களை உள்வாங்கி நடித்தேன். தாய்மையின் உணர்வை வெளிப்படுத்தும் வேடம் "காவல் தெய்வம்' படத்தில் அமைந் தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய "கைவிலங்கு' என்ற நாவலை திரைக்கதை யாக வடிவமைத்து கே.விஜயன் இயக்கி னார். பிரபல குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். படத்தில் மிக முக்கியமான சாமுண்டி என்ற பனை மரமேறும் தொழிலாளி பாத்திரத்தை நடிகர் திலகம் சிவாஜி செய்தால் சிறப்பாகயிருக்கும் என்று கருதினார். இதற்காக சிவாஜியை அணுகினார் சுப்பையா. அப்போது "உயர்ந்த மனிதன்' உட்பட பல படங்களில் சிவாஜி பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். எனவே சிவாஜியால் கால்ஷீட் ஒதுக்கித்தர முடியவில்லை. நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் நல்ல நண்பர் ஏவி.எம்.சரவணன். எனவே அவரை அணுகி சிவாஜியின் கால்ஷீட் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார்.
ஏவி.எம். சரவணன் சிவாஜியை சந்தித்து பேசினார். எப்படி கால்ஷீட் ஒதுக்கித் தருவது, முடியவில்லையே என்று சிவாஜி தன் நிலையை விளக்கி னார். " "உயர்ந்த மனிதன்' படத்திற்கான ஐந்து நாட்களை உங்களுக்கு ஒதுக்கித்தருகிறேன். அதை "காவல் தெய்வம்' படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அந்த ஐந்து நாட்களை எங்களுக்கு நடித்து தந்துவிடுங்கள்' என்று சரவணன் ஒரு யோசனை கொடுத்தார், சிவாஜியும் சம்மதித்தார். அந்த ஐந்து நாட்களில் அந்த ரோலை மிக அற்புதமாக செய்துகொடுத்தார். பனை மரமேறும் தொழிலாளியாக படம் முழுக்க வரும் ரோல் அது. கொடுத்த ஐந்து நாட்களில் தனது போர்ஷன் முழுவதையும் கச்சிதமாக முடித்துக் கொடுத்துவிட்டார் நடிகர் திலகம். அது மட்டுமல்ல, அந்தப் படத்திற்கு சம்பளமாக எஸ்.வி.சுப்பையா கொடுத்த 15 ஆயிரம் ரூபாயை வாங்காமல் சிவாஜி கணேசன் நடித்துக் கொடுத்தார் என்று ஏவி.எம். சரவணன் சொல்ல கேள்விப்பட்டேன். படத்தில் சிவாஜியைப் போலவே பண்பட்ட நடிகர்கள் சிவக்குமார், லட்சுமி, நம்பியார், அசோகன், நாகேஷ், பாலையா, ஜி.சகுந்தலா, வி.கோபாலகிருஷ்ணன், சண் முகசுந்தரி என அனைவரும் நிறைவாக நடித்துத் தந்தனர்.
"காவல் தெய்வம்' படத்தில் எனக்கு அலமேலு என்ற கதாபாத்திரம். அது எப்படிப்பட்டது என்பதை நான் சொல்வதைவிட அப்போது "பேசும் படம்' மாத இதழ் எழுதி இருந்ததை அப்படியே தருகிறேன்...
"ஆயிரம் இருந்தென்ன அம்மா என்றழைக்க ஒரு குழந்தை தனக்கு பிறக்கவில்லையே என்ற குறை, மணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் சாகும்வரை இருக் கும். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் மாறுதலிருக்கும். இதோ, அந்த சிறை அதிகாரியின் மனைவி அவள் ஒரு மலடி! சிறைக்கைதிகளை தன் மக்களாக நினைத்து, தன் மலட்டுத்தன்மையை மறைக்கப் போராடு கிறாள். அவள் வீட்டிலே "குவா குவா' சப்தம் போடாத குழந்தைகள், புகைப்படங்கள் ரூபத்தில் சுவர்களில் நிறைந்திருக்கிறார்கள். அதனால் அவள் உள்ளம் நிறைந்துவிடவில்லை, இதோ எனக்கு நிறைய பிள்ளைகள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அம்மா என்று கூப்பிடமாட்டார்கள். இரண்டு வாக்கியங்கள்தான். முதல் வாக்கியத்தில் கண்கள் மகிழ்ச்சியை பிரதிபலிக்கின்றன, இரண்டாவது வாக்கியத்தில் தாங்கமுடியாத சோகத்தை பிரதிபலிக்கும் அவள் கண்களில் நீர் நிறைகிறது. நமது அடிவயிற்றை என்னவோ செய்கிறது அவளது நிலை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/sowcarpet1-2026-02-05-17-36-12.jpg)
அவள் அடி வயிற்றிலிருந்து பிறந்து, வாய் வழியே அம்மா என்று ஒலிபரப்பும் குரல் நம் கண்களில் நீர் நிறையச் செய்கிறது. ஒரு காட்சிதான்... அது ஒப்பற்ற நடிப்பைச் சொல்லும் காட்சி. குறி பார்த்து நிச்சயம் செய்து இலக்கில் அடிப்பவனைப்போல் கிடைத்த வாய்ப்பை அக்காட்சியில் பயன்படுத்தி அருமையாக நடித்தவர் சௌகார்ஜானகி. படம் 'காவல் தெய்வம்'. உள்ளத்தில் நிறைவில்லாத, வாழ்வில் குறை கொண்ட ஒரு மனைவியின் பாத்திரத்தில் சிறப்பாக நடித்து... நம் உள்ளங்களை நிறைவடைய செய்துவிட்டார் சௌகார் ஜானகி'' -இப்படிப் பேசும் படம் என் நடிப்புக்கு சான்றிதழ் அளித்தது. "கள்ளமில்லாத உள்ளம்கொண்ட கட்டுப்பெட்டி அவள். நாகரிக வாசனையும், படிப்பு வாசனையும் இல்லாத கிராமத்துப் பெண். தன்னுடன் பிறந்த தங்கைக்கு அவள் அன்னையும் அப்பனுமாய் ஆசானாய் திகழ்பவர். தங்கை படித்து பட்டம் பெற்று, ஊரும் உலகமும் புகழ பெருவாழ்வு வாழவேண்டும் என்ற ஒன்றேதான் அந்த அக்காவின் குறிக்கோள். சொத்து சுகங்களை மகிழ்வோடு இழந்தபோதும் அமைதியோடு வாழ அவளால் முடிகிறது. அவளது நல்லமனம் அவளை ஒரு நல்ல மனிதனின் மனைவியாக்குகிறது. அவள் நீதிபதியின் மனைவியாகிறாள். உடன்பிறந்த தங்கை, தன் கணவனையே கொலைகாரனாக குற்றம்சாட்டி, அவனைக் கூண்டில் ஏற்ற முடிவு செய்தபோ தும், உத்தமியான அவள் தாலி பலத்திலும், தர்மத்திலும் நம்பிக்கை வைத்து தங்கைக்கும் வெற்றிகிடைக்க ஆசி கூறுகிறாள். தன் கணவன் நிரபராதி என்பதை அவள் நிச்சய மாக நம்புகிறாள். ஆகவே உண்மை வெளியாகும்... அதற்கு தன் தங்கை காரணமாவாள் என்றும் சர்வ நிச்சயமாக நம்புகிறாள்.
தங்கையைக் குழந்தையாக கொண்ட அவள் கணவனை, தெய்வமாகக் கண்ட அவள் சத்தியத்தை உயிர் மூச்சாகக் கொள்கிறாள். ஒரு நடமாடும் தெய்வமாக விளங்கிய அந்த பாத்திரம் உலாவிய படம் "அக்கா தங்கை', பாத்திரதாரி சௌகார் ஜானகி.'' -"அக்கா தங்கை' படத்தில் என் கதாபாத்திரம் பற்றி "பேசும் படம்' சொன்னது இது.
நான் தெய்வ நம்பிக்கை கொண்டவள்தான்... ஆனால் நாத்திகவாதி போல நடித்தது ஏன்?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/sowcarpet-2026-02-05-17-36-00.jpg)