கேமரா முன் நடிப்பு சோதனை!

பி.என்.ரெட்டி யிடம், அவர் மூலம் நான் சினிமா வாய்ப்பு பெற வந்த விபரத்தைச் சொன்னேன், எனக்கு திருமணமாகி மூன்றுமாத குழந்தையும் அப்போது இருப்பதைத் தெரிந்து கொண்ட அவர், என் முயற்சிக்கு ஆதரவு தருவதற்குத் தயங்கினார்.

Advertisment

"நான் அன்றைக்கு உனக்கு கதாநாயகி வாய்ப்பு தருவதற்கு அழைத்தேன், உன் குடும்பத்தார் சம்மதிக்கவில்லை, கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பதாக சொல்லி போய்விட்டாய். இப்போது கல்யாணமாகி கைக்குழந்தையுடன் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருக்க.  நான் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. சினிமா வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் ஒத்துவராது. நீ சினிமாவில் சேர வருவது எனக்கு நல்லதாகப் படவில்லை'' என்று சொல்லிவிட்டார். 

Advertisment

அதைக்கேட்டு அதிர்ந்துபோனேன். பிறகு அவரிடம் ஒளிவு மறைவில்லாமல் என்னுடைய தற்போதைய வாழ்க்கைச் சூழ்நிலையையெல்லாம் அப்படியே சொன்னேன். "சினிமா மீது ஆர்வம் கொண்டோ, மோகம் கொண்டோ நான் உங்களிடம் இந்த உதவியைக் கேட்டு வரவில்லை, அப்படி ஒரு காலத்தில் எனக்கு ஆர்வம் இருந்தது உண்மை. ஆனால் இப்போது... நான் வாழ்க்கை நடத்த, தலைநிமிர்ந்து வாழ, என் பிரச்சினைகளைச் சமாளிக்க நான் சினிமாவைத் தேடிவந்திருக்கிறேன். எனக்கு நீங்கள் உதவி செய்துதான் ஆக வேண்டும்'' என்று சொல்லி அங்கேயே உட்கார்ந்துவிட்டேன்.

சில நிமிடங்கள் மௌனமாகக் கரைந்தன. அவர் என் நிலையை உணர்ந்தவராக, ஏதோ யோசனை செய்தவர், பிறகு அவரது சகோதரரான பி.நாகிரெட்டிக்கு போன் செய்தார். அப்போது நாகிரெட்டி, வாகினி ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுத்திருந்தார். "விஜயா கம்பைன்ஸ்' பட கம்பெனி ஆரம்பித்து ஒரு தெலுங்கு படம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

Advertisment


"இங்கே என்னைப் பார்க்க திறமையான ஒரு இளம் பெண் வந்திருக்கிறாள். நீ தயாரிக்கும் படத்தில் அவளுக்கு ஏதேனும் வாய்ப்பு தரமுடியுமா? அவளை வைத்து ஒரு நடிப்புச் சோதனைப் படம் (மேக்கப் டெஸ்ட்) எடுத்துப் பார்த்து, வாய்ப்புக் கொடு'' என்று என்னைப்பற்றிச் சொல்லி பலமாக பரிந்துரை செய்தார். பின்னர் என்னிடம் திரும்பி "ஓரிரு தினங்களில் நாகி ரெட்டியாரிடமிருந்து தகவல் வரும்' என்று சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்.

பிரபல தெலுங்கு கதாசிரியரும் எழுத்தாளரு மான கும்பராவ் "சந்த மாமா' பத்திரிகையில் பணியாற்றிவந்தார். அவர் எங்கள் குடும்ப நண்பர். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாருமே இலக்கியத்தில் ஆர்வமும் கலையில் ஈடுபாடும் கொண்டவர்கள். நான் பள்ளியில் படித்து வந்த நாட்களிலிருந்தே அவருக்கும், அவரது  குடும்பத்தாருக்கும் என்னை நன்கு தெரியும்.   அப்போது நான் அவரிடம் என் சினிமா முயற்சி பற்றி சொன்னேன். அதனால் நாகி ரெட்டியார், சக்கரபாணி இருவரிடமும் என்னைப் பற்றி அவர் சொல்லிவைத்தார். அந்த நேரத்தில் நான் சினிமாவில் பிரவேசிக்க அவரும், அவரது குடும்பத்தாரும் பெரிதும் உதவினார்கள். 

பி.என்.ரெட்டி அவர்களைப் பார்த்து வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு எங்கள் வீட்டுக்கு ஒரு கார் வந்தது. திரு. நாகிரெட்டிதான் மேக்கப் டெஸ்ட் எடுக்க என்னை அழைத்திருந்தார். அந்த சமயம் எனக்கு மேக்கப் போட்டவர், அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான மேக்கப் நிபுணர் ஹரிபாபு. (டி.ஆர்.ராஜகுமாரி, எம்.கே.டி.பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களுக்கு முதல் மேக்கப் போட்டவர்.) 

அவரது ராசியான கைகளால் எனக்கு மேக்கப் போட்டார். வாகினி ஒளிப்பதிவு தியேட்டர் மாடியில் அப்போது மேக்கப் அறையிருந்தது. என் முகத்திற்கு மேக்கப் போட்டு முடித்ததும், ஹரிபாபு ஒரு முறைக்கு, இருமுறையாக என் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு,   "கொஞ்சம் சிரி' என்றார்.

sowcarjanaki1

தனிமையில் இருக்கும்போது ஒரு பெண்ணை பார்த்து சிரி என்றால் அவளுக்கு கோபம் வருமா, வராதா? அவர் அப்படிச் சொன்னதும். நான் ஒரு மாதிரியாக கோபத்துடன் அவரைப் பார்த்தேன். என் முறைப்பின் அர்த்தத்தை ஹரிபாபு புரிந்துகொண்டார். என்னைப் போன்ற அசடுகள் எத்தனை பேரை அவர் பார்த்திருப்பார்.

ஒரு தந்தையின் பரிவுடன் ஹரிபாபு என் முதுகை மெல்ல தட்டிக் கொடுத்து,   "கோபப் படாதேம்மா, நீ சிரித்தால்தான் உன் உதடுகளின் வடிவம் எனக்குத் தெரியும். அப்போதுதான் சரியாக உதடுகளை வரைந்து நான் லிப்ஸ்டிக் போடமுடியும்'' என்று அவர் சொன்னதும், நான் நடந்துகொண்டது எவ்வளவு கேலிக்கிடமானது என்பதை உணர்ந்தேன். வெட்கம் என்னை பிடுங் கிற்று.

ஒரு கிராமத்துப் பெண்ணைப் போல் வரையப் பட்டிருந்த படத்தை பார்த்து, அதேபோல எனக்கு பாவாடை, தாவணி அணிய வைத்து, நகைகளையும் பூட்டி, புருவங்களைத் தீட்டி என்னைச் சிங்காரித்தார்கள். மேக்கப் டெஸ்ட் நடந்து கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில் என் மனம் ஓயாமல் அலைபாய்ந்துகொண்டிருந்தது. நான் என்ன நினைத்தேன் என்பதை என்னால் நினைவுபடுத்திக்கொள்ள முடியாவிட்டாலும், நான் நினைக்காதது ஒன்றுமில்லை என்று மட்டும் சொல்வேன்.  குறிப்பாகச் சொல்வதென்றால் அப் போது என் நினைப்பு எண்ணம் என்னவென்றால்... "நானே உழைத்து என் குடும்பத்தை காப்பாற்றணும், என் உற்றார், உறவினர்களின் சிரிப்புக்கு இடமளிக்காமல் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும்'' என்ற எண்ணம் என் இதயத்தை ஓயாமல் அமுக்கிக்கொண்டிருந்தது.

மேக்கப் அறையிலிருந்து நான் கீழ்த்தளத்திற்கு அழைத்து வரப்பட்டேன். அப்போது ஒரு  படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலிதேவி நடித்துவந்த, ஒரு படத்தின் நடனக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வேதாந்தம் ராகவய்யா மாஸ்டர், அஞ்சலிதேவிக்கு நடன முத்திரைகளை விளக்கி, எப்படி ஆட வேண்டும் என்பதை நடனமாடி, அபிநயம் பிடித்து காட்டிக்கொண்டிருந்தார். அங்கு நின்று இரண்டு நிமிடம் வேடிக்கை பார்த்தேன். இதற்கு முன்பு நான் சினிமா ஸ்டூடியோவுக்குள் காலடி எடுத்து வைத்தது கிடையாது. முதல் முறையாக பார்ப்பதால் ஒரு குழந்தை பொம்மைக் கடையை ஆர்வமாய் பார்ப்பது போல பார்த்தேன்.   அங்கே வைக்கப்பட்டு இருந்த கேமரா, ட்ராலி எல்லாமே எனக்கு புரியாத பொருளாக, என்னை ஆச்சரியப்படுத்தும் காட்சிப்பொருள்களாக தெரிந்தன. நான் அங்கிருந்து செட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

நாகிரெட்டி, சக்கரபாணி, டைரக்டர் எல்.வி.பிரசாத் மற்றும் பலர் அங்கே இருந்தார்கள். என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அப்போது என்னிடம் சில காகிதங்கள் கொடுத்தார்கள்.  நான் பேசி நடித்துக் காட்டவேண்டிய வசனங்கள் அதில் எழுதப்பட்டி ருந்தன. பலதரப்பட்ட உணர்ச்சிகளுடன், பலதரப் பட்ட பாவங்களுடன் பேசி நடிக்க வேண்டிய வசனங் கள் அவை. ஆச்சார்யா ஆத்ரேயா அவர்தான் வசனகர்த்தா. அவர் அருகில் வந்து வசனங்களை நிறுத்தி நிதானமாக படித்துக் காட்டினார். அந்த வசனங்களுக்கு நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை டைரக்டர் எல்.வி.பிரசாத் விளக்கினார். அதை வெறும் வசனங்களாக மட்டும் நான் நினைக்கவில்லை, என் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியே, என் தலையெழுத்தே அந்த வசனங்களில் இருப்பதாக நினைத்து அவற்றைச் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். 

என் கையிலிருந்த காகிதத்தில் இருந்த வசனங்களை ஒரு முறைக்கு, இருமுறை படித்து முடித்ததும் கேமரா முன்பு நான் அழைக்கப் பட்டேன்.

"இறைவா! எனக்கு உன் ஆதரவுக் கரங்களை நீட்டி, அருள் சுரக்கும் உன் பார்வையை என் பக்கம் திருப்பு. நான் ஒரு அபலைப் பெண்'' என்று என் குலதெய்வத்தை பிரார்த்தித்தபடி கேமராமுன் போய் நின்றேன். 

"லைட்ஸ்' என்ற குரல் வந்ததும், என் பிரார்த்தனை முடியவும், என்னைச் சுற்றி நாலாபக்கமிருந்த விளக்குகளும் பிரகாசமான ஒலிக்கற்றைகளை வீச, மாபெரும் ஒளி வெள்ளத்தின் மத்தியில் நானிருந்தேன்.

"நல்ல சகுனம், இறைவனே என் வாழ்க்கையிலுள்ள இருளை விலக்கிவிடு'' என்று நன்றியுடன் வேண்டிக்கொண்டேன்.

மார்க்கஸ் பார்ட்லேதான் ஒளிப்பதி வாளர். என்னை பல கோணங்களில் படம் பிடித்தார். பல இடங்களில் கேமராவை மாற்றி, மாற்றி வைத்து படம் பிடித்தார். எனக்கு அதெல்லாம் அப்போது ஒன்றும் புரியவில்லை. புதிய அனுபவமாக இருந்தது. இத்தனை பிரமிப்புகளுக்கிடையிலும் நான் கூச்சப்படாமல் தைரியமாக, என்னால் முடிந்த வரையில் திறமையாக வசனங்களை உள்வாங்கி பேசி நடித்தேன். படப்பிடிப்பு முடிந்தது... 

ஆனால் எனக்குள் பட படப்பு தொற்றிக்கொண்டது. நடிப்பு பரிசோதனை, படம் நன்றாக வந்திருக்கிறதா?  என்கின்ற படபடப்பு. 

என்ன நடந் தது...?

(பேசுறேன்...)