(18) பிராமணர்களுக்குதான் வீடு! நீங்க பிராமினா?
அதுவரை என் கணவர் என்னிடம் சொல்லாத ஒரு விஷயத்தை இப்போது சொன் னார். விஜயவாடாவில் உள்ள அனகாபல்லி என்ற ஊரில் என் கணவரின் பங்காக கொஞ்சம் நிலம் இருப்பதாகவும், அதை விற்றுவிட்டு வர விரும்புவ தாகவும் சொன்னார். அதைக் கேட்டு எனக்கு சற்று நிம்மதி பெருமூச்சு வந்தது. சொன்ன படியே அனகாபல்லி கிளம்பிப் போனார். அந்த நிலத்தை விற்பனை செய்து, அதற்கான தொகை ரூபாய் 2500ஐ பெற்றுக்கொண்டு திரும்பி வந்தார். அந்த நேரத்தில் அந்தப் பணம் எங்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் 1949ல் 2500 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. இன்றைய கணக்கில் 5 லட்சம் ரூபாய்க்கு சமம். 10 கிராம் தங்கம் 88 ரூபாய்க்கு விற்ற காலம். உலகிலேயே நான் பெரிய பணக்காரி ஆகிவிட்டது போன்ற மன மகிழ்ச்சியையும், வாழ்க்கையில் எனக்குப் பாதுகாப்பு கிடைத்துவிட்டது போன்ற நம்பிக்கையும் அந்த பணத்தைப் பார்த்ததும் எனக்கு ஏற்பட்டது. பணத்தின் பலத்தை அப்போது உணரமுடிந்தது.
குழந்தைக்கு புதிய துணிமணிகள் வாங்கி னோம். நீண்ட நாட்களாக எனக்கு ஒரு நல்ல கைகடிகாரம் வாங்க வேண்டும் என்ற ஆசையையும் இப்போது நிறைவேற்றிக்கொண்டேன். எனவே "பேவர் லூபர்' கைக்கடிகாரம் வாங்கிக் கொண் டேன். நான் ஆசையாக வாங்கிய புதிய கடி காரத்தை மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று மாமியிடம் காட்டினேன். அவர் அதைக் கண்டதும் சொன்ன வார்த்தை என்னைத் தூக்கிவாரிப் போட்டது. "இனிமேல் எங்க தயவெல்லாம் உனக்கு எதுக்குமா?' என்று அவர் கூறியது, என் இதயத்தைக் கூர்மையான ஈட்டியால் குத்தியதுபோ-ருந்தது. நேற்றுவரை, ஏன் இந்தக் கடிகாரத்தைக் காண்பிப்பதற்கு ஒரு நொடி முன்புவரை... என்னை அன்புடன் நேசித்து வந்த, பாசமழை பொழிந்த அந்த பழைய மாமியா இது.?
என்னுடைய சின்ன சந்தோஷத்தைக்கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில் லையே. எத்தனை ஆசையாக நான் என் மகிழ்ச்சி யைப் பகிர்ந்துகொள்ள ஓடிப்போய் காட்டினேன். அது தப்பா? அதுதான் அவரின் மனமாற்றத்திற்குக் காரணமா..?
ஷில்லாங்கில் நான் பார்த்த, அனுபவித்த அத்தனை பூகம்பங்களும் இப்போது ஒன்று சேர்ந்து வந்து என் நெஞ்சில் குமைந்தது. நான் வாங்கிய கடிகாரம், நான் அந்த வீட்டில் இனி இருக்கவேண்டிய காலத்தையும் நிர்ணயித்து விட்டது. அதிக இனிப்பும் ஒருநாள் திகட்டிவிடும் போல. ஒரு முடிவுடன் நான் திரும்பி வந்தேன். அந்த சம்பவம் காலை சுமார் 11 மணிக்கு நடந்தது. மாலை 4 மணி அளவில் என் மாமாவிடம் சென்றேன். என்னை அதுநாள்வரை அன்புகாட்டி ஆதரித்ததற்காக, அவருக்கு என் மனமார்ந்த நன்றியை இருகரம் கூப்பி கண்ணீருடன் தெரிவித்துக்கொண்டேன்.
"பணம் கையில் இருப்பதனாலயே வீட்டை விட்டுப் போகிறேன் என்று நினைக்காதீர்கள்.. நான் இப்போது கைக்குழந்தைக்காரி குழந்தையை வளர்க்க பணம் தேவை. அந்த நாலு காசு இப்போது என்னிடம் இருப்பதாலேதான் நான் உங்கள் வீட்டை விட்டுப் போகிறேன். இனிமேல் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் தவறாக பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் மாமா'' என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். என் கணவரை அழைத்துக் கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே கிளம்பினேன். எங்கே போகப்போறேன், என்ன செய்யப் போகிறேன்? என்பதெல்லாம் நான் யோசித்துப் பார்க்கவே இல்லை.
ஏதோ ரோஷத்தோடு வேகத்தோடு வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வது போல, வீட்டை விட்டு வெளியே வந்த என்னை இந்த பரந்த உலகம் கைநீட்டி வரவேற்றது. இந்தப் பரந்த உலகத்தில் என் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளவும், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடவும் என் முதல் அடியை தைரியமாக எடுத்து வைத்தேன். அப்போது சென்னை தியாகராய நகரில் மோதிலால் தெருவில் என் சித்தியின் வீடு இருந்தது. என் தாயாரின் இளைய சகோதரி அவர். எனக்கு அவரது நினைவு வந்ததும் என் கணவர், குழந்தையுடன் அங்கு சென்றேன். சித்தி எங்களை ஆச்சரியமாகவும் சற்று கலக்கமாகவும் பார்த்தார். நான் சற்று சுருக்கமாக "இன்று இரவு மட்டும் இங்கே தங்கியிருக்க அனுமதி கொடுங்கள், நாளை காலை நாங்கள் புறப்பட்டுப் போய்விடுவோம்'' என்றேன். அனுமதி தந்தார் அன்றைய இரவை அங்கே செலவிட்டோம்.
என் உடல்தான் படுக்கையில் கிடந்ததே தவிர, என் உள்ளம், விழிகள் விழித்தபடியே இருந்தன. மனதில் ஏதே தோ எண்ணங்கள். ஆயிரக்கணக்கான யோசனைகள். அதனால் தூக்கம் என்னைத் தொடாமல் போனது. நாம் செய்தது பைத்தி யக்காரத்தனமா? என்று ஒரு நினைப்பு வந் தது. அதே சமயம் தன்மானத்தை எத்தனை நாள் அடக்கி அடிமையாகி வைத்திருப்பது.? என்று எதிர் கேள்வி தோன்றியது.
இவ்வளவு பெரிய உலகத்தில், எத்தனை பரந்த மெட்ராஸ் மாகாணத்தில் நமக்கு வாழத்தானா வழியும் இடமும் கிடைக்காமல் போகும்? என்று என்னையே நான் தேற்றிக் கொண்டேன். சூரியன் உதயமாகி பொழுது விடிந்தது. "இன்றைய பொழுது எங்களுக்கு நன்மையானதாக அருள்வாய் இறைவா' என வேண்டியபடி புறப்படத் தயாரானோம். சித்தியிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம்.
அப்போது எங்களின் முதல் பிரச்சினை குடியிருக்க ஒரு வீடு. வாடகைக்கு ஒரு வீட்டைத் தேடி அலைந்தோம். இப்போது போல அப்போதெல்லாம் டூ லெட் போர்டு தொங்கும் வீடுகளைப் பார்க்க முடியாது. "இங்கு வாடகைக்கு வீடு கிடைக்குமா?' என்று கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். நல்லவேளை அதே தியாகராய நகரில் மூஸாசேட் தெருவில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டிருந்தது. அப்போது அதற்கு மின்சார இணைப்புகூட தரப் படாமல் இருந்தது. வாடகைக்கு விடப்படும் வீடு அது என்பது தெரிந்ததும், நேராக போய் விசாரித்தோம். "வீட்டுக்குச் சொந்தக்காரர் திருவல்லிக்கேணியி லிருக்கிறார் அங்கே போய் பார்த்து பேசுங்கள்' என்றார்கள்.
நாங்கள் போன நேரம் வீட்டுக்காரர் இருந்தார். அவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். "பிராமணர்களைத் தவிர வேறு யாருக்கும் நான் வீட்டை விடமாட்டேன். நீங்கள் பிராமணர்கள் தானா?'' என்று கேட்டு எங்களை பார்த்தார்.
"சுத்தமான மாத்வ வகுப்பைச் சேர்ந்தவர்கள்' என்று சொன்னேன்.
" முட்டை கூட சாப்பிட மாட்டீர்களே?'' என்றார்.
"தொடக்கூட மாட்டோம்'' என்றேன். நான் சொன்னது பொய்தான் ஆனால் அப்போதைக்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை.
"மாதம் நூறு ரூபாய் வாடகை. ஐந்து மாத அட்வான்ஸ் முன்பணமாக தரப்பட வேண்டும்'' என்றார் ஹவுஸ்ஓனர். முன்பணத்தைக் கொடுத்து விட்டு, மூஸாசேட் தெருவில் உள்ள புதிய வீட்டில் குடியேறினோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று இரவு நிம்மதியுடன் தூங்கினேன்.
மறுநாள் வீட்டுக்குத் தேவையான பொருட் கள் ஒவ்வொன்றாக வாங்க ஆரம்பித்தோம். அந்த சாமான்களை வைத்துக்கொள்ள ஒரு மர பீரோவை வாங்கினோம். குழந்தைக்காக ஒரு தொட்டிலை வாங்கினோம். என் பழைய வாழ்க்கையின் நினைவுச் சின்னமாக என் வீட்டில் இன்றும் அந்த மர பீரோ பாதுகாப்பாக இருந்துவருகிறது.
இப்படி தனிக்குடித்தனம் வந்த பிறகும், என் கணவர் வேறு வேலை தேடுவதில் எந்தவிதமான அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி ஒரு முயற்சிகூட எடுத்ததாக எனக்குத் தெரிய வில்லை. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண், தன் கணவனிடம் அன்பு, ஆசை இவை எல்லா வற்றையும்விட நம்பிக்கையான பாதுகாப்பான ஒரு எதிர்கால வாழ்க்கையைத்தான் பெரிதும் எதிர்பார்க்கின்றாள். "நம் கணவர் இருக்கின்றார். நமக்கென்ன குறை? நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?' என்ற ஒருவகை தைரியம் திருமண மான பிறகு ஒரு பெண்ணுக்கு வந்து அமைகிறது. அந்தத் தைரியம். அந்த நம்பிக்கைதான் என் வாழ்க்கையில் எனக்கு அமையவில்லை. எனவேதான் என் பாதுகாப்பையும் நம்பிக்கையான ஒரு எதிர்காலத்தையும் நானே தேடிக் கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.
நான் எப்போதும் குடும்பப் பாசம் மிக்கவள்? என் கணவர் ஒரு நல்ல வேலையில் இருந்திருந்தால், ஓரளவு வசதியான வாழ்க்கைக்கான வருமானத் தையும் பெற்றிருந்தால், நான் சினிமா பக்கமே தலைகாட்டி இருக்க மாட்டேன்.
பிறகு ஏன் நான் சினிமா பக்கம் ஒதுங்கினேன்.
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/sowcarjanaki-2025-12-15-17-07-28.jpg)