(21) அழத் தெரியாமல், திட்டு வாங்கி அழுதேன்!

டைரக்டர் எல்.வி.பிரசாத் எடுத்த மூவி டெஸ்ட் என்ற அந்தச் சோதனை, படத்தில் அவர் சொன்னதை உள்வாங்கி ஏழுவிதமான முகபாவங்களில் நடித்தேன். படப்பிடிப்பு முடிந்தது அடுத்தபடியாக என்னுடைய குரலைச் சோதிக்க விரும்பினார்கள். அன்று நான் மேக்கப் போட்டுக்கொண்ட மாடியின் கீழேதான் ஒலிப்பதிவு இலாகா இருந்தது. என்னை ஒலிப்பதிவு கூடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். என்னை ஒரு பாட்டு பாடும்படி சொன்னார்கள். "பாட்டா, இதென்ன சோதனை எனக்கு அது வரவே வராதே' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாலும்கூட, ஆனால் எனக்குப் பாட வராது என்பதை சொல்லத் துணிவு வர வில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பாடல்  பாடினேன்.

Advertisment

"ஓ.கே. குரல் நன்றாகவே இருக்கிறது கொஞ்சம் பயிற்சி செய்தால் போதும்' என்று அவர்களுக்குள் ளாகவே ஏதோ பேசிக்கொண்டார்கள்.  பின்னர் என்னை அழைத்து "நீங்கள் வீட்டுக்குப் போகலாம்' என்று சொல்லி, காரை கொடுத்து என்னை வீட்டில் இறக்கிவிடச் சொல்லி அனுப்பினார்கள்.

Advertisment

வீட்டுக்கு வந்து விட்டேன், ஆனால் எந்தக் காரியமும் ஓடவில்லை. ஏதோ ஒரு இயந்திரம் போல சுழன்று என் அன்றாட வேலைகளை செய்து வந்தேன். இரவு படுக்கையில் படுத்ததும் தூக்கம் கண்களைத் தழுவவில்லை. மழை பெய்யும் முன் மேகங்கள் வந்து கவிழ்ந்துகொள்ளுமே அதுபோல பலவிதமான எண்ணங்கள், என் சிந்தனையைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டன. என் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பதிலே அந்த டெஸ்ட்டின் முடிவில்தான் இருந்தது. ஏதாவது ஒரு சின்ன வேஷமாவது கொடுப்பார்களா? அல்லது சினிமாவுக்கே நீ லாய்க்கில்லை என்று சொல்லிவிடுவார்களா? தெரியவில்லை. இதுபோன்ற நேரங்களில் ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு விட்டு பொறுமையாக இருப்பதே நல்லது. 

"ஆண்டவனே என்னை ஏமாற்றி விடாதே, உன் பெண்ணை கைவிட்டு விடாதே.    என்னையும் என் குழந்தையை யும் தவிக்க விட்டுவிடாதே'' என் நெஞ்சத் தில் இதுபோல ஓராயிரம் பிரார்த்தனைகள் ஒன்றான பின் ஒன்றாக எதிரொலித்தன.

Advertisment

பொழுது விடிந்தது. என்னாச்சு ஏதாச்சு என்கின்ற எண்ணமும் கடலலை போல எழுந்தது. எந்த பரிட்சைக்கும் உடனே ரிசல்ட் வந்து விடுவதில்லை அல்லவா. கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும், பொறுத்திருக்க வேண்டும் நானும் அப்படித்தான் காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு எந்த விதமான தகவலும் வரவில்லை. செல்போன் இல்லாத காலம் அது. இரண்டாவது நாள் வந்தது. புதிதாக அது கரைந்து ஓடியது. மூன்றாவது நாளும் முந்திக்கொண்டு வந்தது நாட்கள் வெகு வேகமாக  ஜெட் வேகத்தில் ஓடுவதுபோல் தோன்றியது. நான்காவது நாள் விடியற்காலை நேரம், என் வீட்டு வாசல் முன்பு ஒரு கார் வந்து நின்றது. 

sowcarjanaki1

டைரக்டர் திரு. எல்.வி. பிரசாத் அதிலிருந்து இறங்கி வந்தார். சற்று நிம்மதி பெருமூச்சு வந்தது. டெஸ்ட்டின் முடிவு வெளியாகியது. பிரசாத் வந்தார், அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று ஒவ்வொரு வினாடியும் பயந்தபடியே, அவரையே பார்த்தபடி நின்றேன்.

"ஜானகி! உனக்கு முக்கியமான வேஷம் கொடுக்கப் போகி றோம். நன்றாக நடிக்க வேண்டும். என்ன தெரிகிறதா?'' என்றார். 

சிறு வேஷம்தான் கிடைக்கப்போகிறது. ஏதோ நம்மை மகிழ்ச்சிப்படுத்த அப்படி சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

அவர் என்னிடம் பயப்படும்படியாக எதையும் பெரி தாகச் சொல்லாவிட்டாலும், நான் இன்ப அதிர்ச்சிக்குள் ளாகும்படியான விஷயத்தை சொன்னார். அதைக் கேட்டு எனக்கு மயக்கமே வந்துவிடும்போல் இருந்தது. "உண்மையாகவா?' என்று அவரையே வியந்து பார்த்தேன்.

"எங்கள் முதல் படமான "சௌகார்' படத்தில் நீதான் கதாநாயகியாக நடிக்கப் போகிறாய். உன்னையே கதாநாயகியாக நடிக்க வைக்க நாங்கள் தீர்மா னம் செய்துவிட் டோம்'' என்றார் டைரக்டர் எல்.வி. பிரசாத்.

என்னால் நம் பவே முடிய வில்லை. எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியா? கதாநாயகன்  என்.டி. ராமராவ். நான் அவருக்கு ஜோடி. என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். இது உண்மைதானா? அல்லது கனவா? இறைவா உன் கருணையே கருணை.

 "சௌகார்' படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகுதான் அது உண்மை என்று தெரிந்தது. என் உள்ளம் நிறைந்து வழிந்தது. கடவுளுக்கு நன்றி சொன்னேன். வாழ்க்கை என்பது ஒரு சுவையான நாவல் என்று நான் சொன்னேனே, அந்த நாவலில்  ஒரு பெரும் அத்தியாயம் முடிந்து என் வாழ்க்கையிலும் புதிய அத்தியாயம் துவங்கியது.

1949ஆம் ஆண்டு அப்போது எனக்கு வயது பதினேழு. என் மூத்த மகள் யக்ஞாவின் வயது  மூன்று மாதம். சௌகார் படத்தின் கதை நாயகி. நினைக்க நினைக்க மனசுக்கு சுகமாக இருந்தது.  என் மகளை சிறப்பாக படிக்க வைப்பேன், வளர்த்து ஆளாக்குவேன் என்ற நம்பிக்கை துளிர்விட்டது. 

சௌகார் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றது. படப்பிடிப்பின் முதல் நாள் டைரக்டர் எல்.வி.பிரசாத்  காலையில் என் வீட்டுக்கு வந்தார். காரில் அவருடன் நானும் ஸ்டுடியோவுக்கு சென்றேன். இப்படி தினம் காலை 5:00 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கார் வந்து விடும். திரும்புவதற்கு இரவு 10-12 மணிகூட ஆகும் சாப்பாடு எல்லாம் ஸ்டூடியோவில் தான். ஸ்டூடியோ வுக்குச் சென்றதும் செட்டில் நான் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்திருப்பேன். நடிக்கவேண்டிய சமயம் வரும்போது உதவி இயக்குனர் வந்து அழைத்ததும், சென்று நடித்துவிட்டு மறுபடியும் பழையபடி ஒரு மூலையில் வந்து உட்கார்ந்துகொள்வேன்.  யாருடனும் பேச மாட்டேன். ஏன், யாராவது என்னிடம் வந்து குட்மார்னிங் சொன்னால்கூட பதிலுக்கு நான் வணக்கம் சொல்ல மாட்டேன். காரணம்... அவ்வளவு கூச்சம், அவ்வளவு பயம்.

என் நடவடிக்கைகளைக் கவனித்த டைரக்டர் பிரசாத் ஒரு நாள் என்னிடம் வந்து, "இந்த மாதிரி எல்லாம் இருக்கக் கூடாது, சற்று கலகலப்பாக இருக்க வேண்டும். வணக்கம் சொன்னால் பதிலுக்கு  வணக்கம்  சொல்ல வேண்டும். அது தான் பண்பு, மரியாதை. முதலில் பழகத் தெரிந்து கொள்ள வேண்டும். உன்னையே நீ குறைவாக எடைபோட்டுக் கொண்டிருப்பதாலேயே இப்படிக் கூச்சப்படுகிறாய்'' என்று எடுத்துச்  சொன்னார். இதுபோல அவர் சொல்லச் சொல்ல எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வர ஆரம்பித்தது.

படப்பிடிப்பு தொடங்கிய  சில நாட்களில் நடந்த ஒரு சம்பவம் நன்றாக நினைவில் இருக்கிறது. சௌகார் படத்தில் என் மாமாவை கட்டிப்போட்டு அவரது எதிரிகள் அடிப்பார்கள். அதைப் பார்த்துவிட்டு நான் பதறி அழவேண்டும். 

காட்சியை என்னிடம் பிரசாத் விவரமாக சொன்னார். "காட்சியில் நீ நன்றாக அழவேண்டும். அது இயல்பாக அழுவதுபோல் இருக்கவேண்டும்'' என்று சொன்னார். ஆனால் காட்சியில் நடிக்கும்போது எனக்கு அழுகையே வரவில்லை. தவிர, மாமாவாக நடித்த ஜீ.வி.சுப்பாராவ் ஏதோ தமாஷ் செய்ய, நடிக்கும்போது அதை நினைவில் வைத்துக் கொண்டு சிரித்து விட்டேன்.

டைரக்டர் பிரசாத்துக்கு கோபம் வந்துவிட்டது. "உன்னை சிரிக்க வைப்பதற்காக இங்கே வரவழைக்கவில்லை நன்றாக நடிக்கத் தெரியாவிட்டால், ஏன் நடிக்க வரவேண்டும்?'' என்று கோபத்துடன் சொல்லிவிட்டார்.

பெண் ஜென்மம் ஆயிற்றே பொறுக்குமா? எனக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்து விட்டது. பொல பொலவென்று கண்களி லிருந்து நீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. விம்மலும் கண்ணீருமாக காட்சியில் நடித்தேன்.

இது முடிந்ததும் டைரக்டர் பிரசாத் வந்தார் "ஜானகி  பிரமாதம்'' என்றார்.

ஆனால் என் அழுகை நிற்கவில்லை, நாகி ரெட்டியார் வந்து என்னை சமாதானப்படுத்தினார்.  "நீ நன்றாக நடிக்கவேண்டும் என்பதற்காகவே பிரசாத் இப்படிச் சொன்னார். உன் மனதை புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல'' என்று என்னைத் தேற்றினார்.  

டைரக்டர் பிரசாத், "அட! இதற்காகவா அழுகிறாய்? நான் உன் திறமையைக் குறைத்து எடை போட்டுச் சொல்லவில்லை'' என்றார். இரண்டு மணி நேரம் கழிந்த பிறகே என் அழுகை நின்றது. ஆனால் என் மனமோ இரண்டு நாள் கழித்துதான் சமாதானமடைந்தது.  

படப்பிடிப்பு நடைபெறும்போது என்னைப் பார்க்க யாருமே ஸ்டூடியோவுக்கு வரக்கூடாது என்று என் கணவர், என் வீட்டார் எல்லாரிடமும் நான் கண்டிப்புடன் சொல்லியிருந்தேன்.   "நான் அதை (நடிப்பை) ஒரு தொழிலாக நினைத்துச் செய்கிறேன். அங்கே என்னை வேடிக்கை பார்க்க நீங்கள் யாரும் வரவேண்டாம்'' என்று உறுதியாக சொல்லிவிட்டேன்.

"சௌகார்' படத்திற்காக எனக்கு  சம்பளமாக இரண்டாயிரத்து ஐநூறு கொடுத்தார்கள். அதை மாதம் ஐநூறு ரூபாய் வீதம் தவணைகளில் வாங்கிக்கொண்டேன். 

ஒருநாள் என் தாயார், தங்கை கிருஷ்ணா, சகோதரன் ராமு எல்லோரும் என் வீட்டிற்கு திடுமென வந்து நின்றார்கள். அவர்கள் மிகவும் குழப்பமான நிலையில் காணப்பட்டார்கள். 

ஒரு வகையில் என் யூகம் சரியாகவே இருந்தது. அங்கு மாமாவிடம் ஏதோ தகராறு. அதனால் அங்கிருந்து கிளம்பி என் வீட்டிற்கு வந்து விட்டார்கள். என் மனது மிக மிக இளகியது. யாராவது சற்று பரிதாபமாக தங்களைப் பற்றிச் சொன்னால் போதும் மெழுகாக என் உள்ளம் உருகிவிடும். என் தாயார் கண்ணீருக்கிடையே, மாமா வீட்டில் அவர்கள் கஷ்டப்பட்டதையெல்லாம் விவரிக்க ஆரம்பித்தார்.

"வேறு எங்கே போவேன். எனக்கு உன் நினைவுதான் வந்தது, புறப்பட்டு வந்து விட்டேன்" என்று சொன்னார்... "வீடும் பெரிதாக இருக்கு, நாம் எல்லோரும் ஒன்றாகவே இருப்போம். செலவை கூட நீ பாதி, நான் பாதி என்று பிரித்துக்கொள்ள லாம்'' என்று  யோசனை தெரிவித்தார்.

என் தாயார் அப்படிப் பேசியது எனக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக செலவைப் பற்றி அவர் சொன்னதை நினைத்தபோது, ஒரு தாயார் தன் மகளிடம் அம்மாதிரி வியாபார ரீதியில் பேசியிருக் கக்கூடாது, என்று நான் எண்ணிக்கொண்டேன்.

நிம்மதியாக சென்றுகொண்டிருந்த எனது கலைப்பயணத்தில், மீண்டும்  சகோதர சண்டை. நிம்மதியின்மை வர ஆரம்பித்தன.

என்ன நடந்தது? 

(பேசுறேன்...)