(24) இது வரை நான் ஜானகி! இனி...?
எண்ணத்திலும் பார்வை யிலும் கோளாறு கொண்ட வர்களை என்ன செய்ய முடியும்? கடந்து செல்வதே சிறப்பு. என் வாழ்க்கையிலே பெரும் திருப்பம் ஏற்பட்டது. அந்தத் திருப்பம், அதை நானாக நாடிப் போக வில்லை. அந்தப் புதிய திருப்பத்திற்கு நான் வலுக் கட்டாயமாக விரட்டப்பட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணான நான், 1949ல் "சௌகார்' படத்தின் கதாநாயகி ஜானகியாக தென்னிந்திய மக்களுக்கு அறிமுகமானேன். நான் ஒரு நட்சத்திரமாக அவதாரம் எடுத்து 75 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த 75 ஆண்டுகளில் என் வாழ்க்கையில் நான் எத்தனையோ மேடு, பள்ளங்களை கடந்துவந்திருக் கிறேன்.
சில சம்பவங்கள் என்னைப் பெரும்அதிர்ச்சிக்கு ஆளாக்கி யிருக்கின்றன. இன்னும் சில என்னை பிரமிக்க வைத்திருக் கின்றன. நினைத்துப் பார்க்கும் போது என் வாழ்க்கையில் இவ்வளவு நடந்திருக்கிறதா? என்ற மலைப்பும் ஏற்படுகிறது, மகிழ்ச்சியும் உண்டாகிறது. என்னுடைய வளர்ச்சியையும், எனக்கு படவுலகில் கிடைத்து வந்த வெற்றிகளையும், எனக்கு ரசிகர்கள் இடமிருந்து கிடைத்து வந்த வரவேற்பையும், ஆதரவையும், கண்டு பொறாமைப் பட்டவர்களும் உண்டு. எனக்கான வாய்ப்புகளை மடைமாற்றி விட்டவர்களும் உண்டு.
அதேசமயம் நான் சோர்ந்திருந்தபோதும், சோகத்தால் சூழ்ந்திருந்தபோதும், அடுத்து எப்படி நாம் வாழப் போகிறோம்? என்று திகைத்து நின்ற நிலைகளிலும் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எனக்கு உதவிய உயர்ந்த உள்ளங்களும் உண்டு. அந்த உயர்ந்த உள்ளங்களை என் இதயக்கோயிலில் அமரவைத்து போற்றிவரு கிறேன். "ஜானகி நல்லவள் எதிர்காலத்தில் நன்றாக வரக்கூடிய நடிகை' என்ற நம்பிக்கைதான் அவர்களது ஆதரவு, எனக்கு கிடைக்க காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் வாழ்க்கையில் பல பெரிய தவறு களைச் செய்திருக்கலாம். "செய்திருக்கலாம்' என்று ஏன் சொல்கிறேன் என்றால்... நான் மனதார தவறு என்று நினைத்து எதையும் செய்யாததால்தான் அப்படிச் சொல்கிறேன். எந்தக் காரியத்தையும் என் மனசாட்சி சொன்னபடிதான் நான் செய்து வந்திருக்கிறேன். என் குழந்தைகளின் எதிர்காலம் தான் எனக்கு, என் வாழ்க்கையிலே மிக உயர்ந்த, முக்கியமான லட்சியமாக, பணியாகக் கருதி உழைத்தேன்.
வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்ட என் செல்வங்கள், இதைப் புரிந்துகொண்டு நல்லபடியாக அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் போதும். நான் அவர்களுக்காக பட்ட கஷ்டங் களுக்கும் செய்த தியாகங்களுக்கும் ஏற்ற பழிச் சொற்களுக்கும் பிரதிபலனாக இருக்கும் என்று நினைத்து, என் குழந்தைகள் என் உழைப்புக்கும் தியாகத்திற்கும் உரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்கள்.
என் குழந்தைகள்(2 பெண்கள், ஒரு ஆண்) வளர்ந்து நின்ற நேரத்தில் என்னிடம் பலரும் தவறாமல் கேட்ட கேள்வி. "உங்கள் குழந்தைகளை ஏன் சினிமாவில் நடிக்க வைக்கவில்லை?'' இந்த கேள்வியை ஓராயிரம் தடவை என்னிடம் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பார்கள். எந்த ஒரு தாயும், தகப்பனும் அவள் அல்லது அவன் சினிமாவில் பணியாற்றுபவனாக இருக்கும் பட்சத்தில் தன் குழந்தைகளை நிச்சயம் இந்தத் துறைக்கு கொண்டுவரமாட்டார்கள். வெளியே இருப்பவர்களுக்கு சினிமா உலகம் சிறப்பானதாகவே தெரியலாம். ஆனால் இங்கே இருப்பவர்களுக்கு அதன் உள்ளே நடப்பவை (போட்டி, பொறாமை எல்லாம்) நன்றாகத் தெரியும்.
சினிமாவைப் பொறுத்தவரையில் எனக்கு ஓரளவுக்கு மனநிறைவு ஏற்பட்டுவிட்டது. பலதரப்பட்ட கதாபாத்திரங்களை நான் ஏற்று நடித்துவிட்டேன். கதாநாயகியாக, குணச்சித்திர நாயகியாக, தாயாக, சகோதரியாக, பாட்டியாக, டாக்டராக, வக்கீலாக, கலெக்டராக... இப்படி ஒரு நடிகை எந்தெந்த வேடங்களை எல்லாம் ஏற்று நடிக்க ஆசைப்படுவாளோ அவற்றையெல்லாம் நான் திரைப்படங்களில் செய்து முடித்துவிட்டேன். ஆனாலும் ஏன் இன்னும் நடிக்க ஆசைப்படுகிறேன். 90 வயதிலும் பாட்டியாக நடிப்பது ஏனென்று உங்கள் கேள்வி இருக்கலாம்.
சுமார் 70 ஆண்டுகள் (1949-2020 வரை) என் ரத்தத்தையும், வியர்வையையும் ஆர்வத்தையும் ஆசாபாசங்களையும் திறமையையும் கொட்டி கலைப்பணியாற்றி வந்திருக்கும் நான், இந்த தொழிலை விட்டுவிட்டு நான் எப்படி இருக்க முடியும்? நடிப்பை விட்டு வெளியேற முடியும்? நடிப்புத் தவிர எனக்கு வேறு என்ன தெரியும். எமக்குத் தொழில் கவிதை என்று பாரதி சொன்னது மாதிரி எனக்குத் தொழில் நடிப்பு எந்த வேடத்தில் நடித்தாலும் நடிகர்தான், எந்த வயதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான்.
வாழ்க்கையில் நான் வாழ முடியவில்லை. ஆனால் திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களின் உருவில் நான் வாழ்ந்துகாட்டினேன், அதாவது வாழ்ந்து காட்டுவதுபோல் நடித்தேன். அதனால் தான் நான் நடிக்க ஆசைப் படுகிறேன், அது மாத்திர மல்ல என் கடைசி மூச்சு இருக்கும்வரை நான் நடிக்க ஆசைப்படுகிறேன். நடித்துக்கொண்டிருக்கும் போதே என் மூச்சும் முடியுமானால் அதை விடப் பெரிய சந்தோஷம் எனக்கு வேறு என்ன இருக்க முடியும்? பல நட்சத்திரங்களின் வாழ்வில் சினிமாவுக்கு முன், சினிமாவுக்கு பின் என்று இரண்டு பகுதிகள் உண்டு. நான் இந்த பகுதியில் சினிமாவுக்கு முந்தைய என்னுடைய சொந்தக் கதையை என் கணவர், என் தாய் -தந்தை, அண்ணன் -தங்கை, அந்த நேரத்தில் வாழ்வில் சந்தித்தவை எல்லாம் சொல்லிவந்தேன். இதில் என் குடும்பத்தார் பற்றி மட்டும்தான் சொல்லியிருக்கிறேன். வெளி நபர்கள் யாரையும் நான் குறிப்பிடவில்லை. அதற்குக் காரணம், மற்றவர்கள் மனதை புண்படுத்தவோ அவர்களை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளவோ நான் விரும்பவில்லை என்பதே. என் கதையை இலைமறை காய்மறையாக சொல்லவே நினைத்தேன் அப்படிச் சொல்லி வந்திருப்பதாக நினைக்கிறேன். சில உண்மைகளை நான் பகிரங்கமாக சொல்லி அத னால் யாருடைய மன மாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்து கிறேன்.
தாய் என்ற சொல் தெய்வத்துக்கு சமமானது. புனிதத்தின் சின்னமாக, விலை மதிக்க முடியாத சொத்தாக, பொறுமைக்கு எடுத்துக்காட்டாக, தியாகத்தின் பிறப்பிடமாக, தன்னலமற்ற தன்மைக்கு உதாரணமாக தாயை நாம் சொல்கின்றோம். நானும் அப்படிப்பட்ட ஒரு தாய் என்பதை என் உள்ளத்தைத் தொட்டுச் சொல்வேன். அப்போதெல்லாம் எது ஒன்றையும் நான் என் சுயநலத்திற்காக செய்துகொள்ள முன்வரும்போது, என் குழந்தைகள்தான் கண்முன்னே நிற்பார்கள். அந்த ஆசாபாசங்களை, சபலங்களை என் மனதில் ஆழப்போட்டு புதைத்துவிட்டு, என்னை நானே சுத்திகரித்துக்கொண்டு பழைய ஜானகியாகி விடுவேன்.
உண்மையைச் சொல்கிறேன்... மனைவி என்ற கடமையிலிருந்து நான் தவறியிருந்தாலும் தாய் என்ற பந்தத்தில் இருந்து நான் செய்யவேண்டிய கடமைகளிலிருந்து கொஞ்சம்கூட தவறியவள் அல்ல. இதை பல நூறு தடவை அழுத்தமாக, உரத்த குரலில் சொல்வேன். ஒரு தாயாக, பாட்டி யாக என் பந்தபாசம் தொடர்ந்துகொண்டு தானிருக்கிறது. திரைப்பட நடிகை ஜானகியாக உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். சராசரி குடும்பப் பெண் ஜானகியை அதாவது சினிமாவுக்கு முந்தைய அவரது வாழ்க்கை உங்களில் பலருக்கு தெரிந்திருக்க முடியாது. எனவே (குடும்பப் பெண்) ஜானகியின் கதையை சொன்னேன். ஒரு பெண் என்ற வகையில் ஜானகி எப்படிப்பட்டவள் என்பது இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும்.
சௌகார் ஜானகி எப்படிப்பட்ட நடிகை என்பது இனி என் சினிமா பயணத்தில்...
(பேசுறேன்...)
____________
பட்டு மாமியின் நம்பிக்கை தரும் டிப்ஸ்
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/06/sowcarjanaki1-2026-01-06-10-56-02.jpg)
வயதாகும்போது கிரேஸ்ஃபுல்லாக வயதை அங்கீகாரம் செய்வதுதான் அழகு. அதை விட்டுவிட்டு, செயற்கையான முறையில் வயதில் குறைந்த தோற்றத்தை உண்டாக்க முனைவதில் என்ன பலன்?
உங்கள் இதயம் -உங்கள் இன்சைடு மனது -அழகை வெளிப்படுத்துகிறது. இதைத்தான் "அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள்.' நேச்சுரல் கிரே தலைமுடி எனது ஸ்டைல் ஆகிவிட்டது. க்ரேஸ்ஃபுல் க்ரே. 1989 முதல் நேச்சுரல் க்ரே ஹேர்ஸ்டைலில்தான் நான் இருக்கிறேன். "உங்கள் தலைமுடியைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று பல பெண்கள் என்னிடம் இப்போதும் சொல்வார்கள்' -என்று தனது கூந்தல் அடர்த்தியின் ரகசியம் சொல்லிச் சிரிக்கிறார் பட்டு மாமி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/sowcarjanaki-2026-01-06-10-55-48.jpg)