(31) சில படங்களில் எம்.ஜி.ஆர். தலையிடுவது ஏன்?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர் நடிக்கும் படங்களில் எல்லா விஷயத்திலும் தலையிடுவார். இது படம் சிறப்பாக வரவேண்டும் என்கின்ற எண்ணத்தில்தான், அவர் நடிக்கும் போது கருத்து சொல்வார், காட்சிகளில் திருத்தம் சொல்வார். அது சிலருக்கு பிடிப்பதில்லை. ஆனால் படம் எடுத்து முடித்தபின்பு போட்டு பார்க்கும்போதுதான் தெரியும், அவர் காரணத்தோடுதான் தலையிட்டார், திருத்தம் சொன்னார் என்பது.
அதேபோல நான் அவருடன் நடித்த "பணம் படைத்தவன்' படத்தில், நான் மேலைநாட்டு பாணி நடனம் ஆடும்...
"கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா...'
என்ற இந்தப் பாடல் காட்சி பட மாக்கும்போது, அந்தக் காட்சியை நிறுத்தச் சொல்லி எம்.ஜி.ஆர். ஒரு திருத்தம் சொன்னார். அவர் சொன்ன திருத்தத்தைக் கேட்டு நானே ஆச்சரியப்பட்டேன். அவர் எவ்வளவு பெரிய டெக்னீசியன் என்பதும், அவர் எந்தளவுக்கு பெண்களை... குறிப்பாக தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை பாதுகாக்கக்கூடியவர் என்பதற்கும் உதாரணமான சம்பவம் அது.
அந்தப் பாடல் காட்சியில் எனக்கு கொடுக்கப்பட்ட உடை மிகமிக மெலிசாக இருந்தது. உடல் தெரியும் வகையில் கவர்ச்சியான உடை. இதைக் கவனித்துவிட்ட சின்னவர் (எம்.ஜி.ஆர்.), காட்சியைப் படமாக்குவதை நிறுத்தச்சொல்லி, காஸ்ட்யூமரை அழைத்து, அவர் காதில் ஏதோ சொல்ல... அவர் உடனே உள்ளே போனார்.
பிறகு என்னை ஒரு ஓரமாக அழைத்துச் சென்று "ஜானகி நீ குடும்பப்பாங்கான படங்களில் அதிகமா நடிக்கிறே. உனக்கு குடும்பப் பெண்கள் மத்தியில் நல்லபேர் இருக்கு. நீ ஒரு குணச்சித்திர நடிகை. இந்த உடை உன்னை கொஞ்சம் ஆபாசமாகக் காண்பிக்கும். அதனால் நீ வேறு உடை மாற்றிக்கொள்'' என்றார். அவர் சொன்னதில் உள்ள உண்மை எனக்குப் புரிந்தது. சினிமாவை எந்தளவுக்கு அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதும், என்னைப் பற்றி எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்பதையும் பார்த்து வியந்து போனேன். அவர் மீதான மரியாதை கூடுதலானது. அவர் இதைச் சொல்லவேண்டும் என்பது அவசியமில்லை. "யார் எப்படி நடித்தால் எனக்கென்ன? என் வேலையே எனக்கு முக்கியம்' என்று அவர் நினைக்கவில்லை. தன் படத்தில் நடிப்பவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் நினைத்தார். பிறகு எம்.ஜி.ஆர். தேர்வு செய்த ஆடையை அணிந்து நடனம் ஆடினேன்.
அந்தப் பாடலின் இடையே ஒரு சரணம் வரும்.
"பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்?
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்'
என்கின்ற வரிகள்தான் அவை.
கேட்டால்தான் சிலர் உதவி செய்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். ஒருவரின் முகத்தைப் பார்த்தே, அவர் ஏதோ பிரச்சினையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு உதவுவார். அப்படித்தான் என் வாட்டமான முகத்தை பார்த்து ஒருமுறை "ஏதேனும் உதவி தேவையா?' என்று கேட்டார்.
ஒரு சமயம் நான் பணப்பிரச்சனை காரணமாக கஷ்டமான சூழ்நிலையில் இருந்ததை எம்.ஜி.ஆர். எப்படியோ தெரிந்துகொண்டார். நாகேஷ் தியேட்டரில் எதிர்பாராத ஒரு தருணத்தில் என்னை அங்கு பார்த்த எம்.ஜி.ஆர்., என் அருகில் வந்து மிக மெதுவான குரலில், "என்ன ஜானகி நீ கஷ்டத்துல இருப்பதா கேள்விப் பட்டேன், ஏதாவது பண உதவி தேவையா?'' என்று கரிசனத்துடன் கேட்டார்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "கூடப் பிறந்தவர்களே கஷ்டமான நிலையில் கண்டுகொள்ளாமல் போகும்போது, இவர் இப்படித் தேடிவந்து உதவி தேவையா?' என்று கேட்கிறாரே என்ன சொல்வது? உண்மையிலேயே அவர் வள்ளல்தான். ஆனால் அவர் சொன்னதே போதும் என்று அவரிடம்
எந்த உதவியும் பெறவில்லை. காரணம் நான் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும் யாரிடமும் உதவி என்று கேட்கும் பழக்கம் எனக்கில்லை.
இங்கே என் மனசுக்கு பட்டதை சொல்றேன். " எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர். போல நடிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. சினிமாவில், அரசியலில் அவர் இடத்தை யாரும் பிடிக்கவில்லை, இனி பிடிக்கப் போவதும் இல்லை. அவர் தேடிவந்து உதவிசெய்யக் கேட்டபோது "உங்க அன்பு மட்டும் போதும்ணே'' என்று சொல்லிவிட்டேன். திரையுலகில் எனக்கு மூன்று சகோதரர்கள். மூத்த சகோதரர் எம்.ஜி.ஆர்., இரண்டாவது சகோதரர் சிவாஜிகணேசன், மூன்றாம் சகோதரர் ஜெமினி கணேசன்.
1962ல் நான் நடித்து இரண்டாம் படமாக வந்தது "அன்னை'. வங்க மொழியில் பல நல்ல நாவல்கள், நாடகங்கள் வருவதுண்டு. அப்படி வந்த ஒரு அருமையான ஹீரோயின் ஓரியண்டட் கதையை, "அன்னை' என்ற பெயரில் ஏவி.எம்.செட்டியார் தயாரித்தார். டாக்டர் நிரஞ்சன் குப்தா எழுதிய வங்க நாவல் "மாயா ம்ருகா'. பிறகு நாடகமாக அரங்கேறியது. பின்னர் வங்காளத்தில் திரைப்படமாகவும் வந்தது. நாடகம் வெற்றி பெற்ற அளவுக்கு, திரைப்படம் வெற்றிபெறவில்லை.
இந்த கதை ஏவி.எம்.செட்டியாருக்கு மிகவும் பிடித்துப்போனதால் அதை வாங்கி தயாரித்தார். கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன் செய்ய அதற்கு திரைக்கதை, வசனம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதினார். இதில் பானுமதியும் நானும் அக்கா, தங்கையாக நடித்தோம் சில கட்டங்களில் போட்டிபோட்டு நடித்தோம் என்றுதான் சொல்லவேண்டும்.
1963ல் "கடவுளைக் கண்டேன்', "பார் மகளே பார்' என இரண்டு படங்களில் நடித்தேன். இதில் பேர்சொல்லும் படமாக "பார் மகளே பார்' அமைந்தது. இது எனக்கு விசேஷமான படம். சிவாஜியின் அன்பான மனைவியாக, இரண்டு பெண்களின் தாயாக... தாய்மையை உணர்ந்து நடித்தேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/sowcarjanaki1-2026-01-29-16-13-27.jpg)
கவியரசு கண்ணதாசன் இந்த படத்தில் தம்பதிகள் இருவர் தாம்பத்தியம் பற்றி பாடுவது போல ஒரு அருமையான பாடலை எழுதியிருந்தார்.
"நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
மகளே உன்னைத் தேடி நின்றாளே
மங்கை இந்த மங்கல மங்கை.
வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே
தந்தை உன் மழலையின் தந்தை
நான் காதல் எனும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
என்று சிவாஜி பாட
அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே...
என்று நான் பாடுவேன்.
இந்தப் பாடலில் கவியரசு கண்ணதாசன் அன்பான தம்பதிகள் பாடுவதுபோல் எழுதியிருந்தார். "ப' வரிசையில் படங்களை இயக்கி புகழ்பெற்ற பீம்சிங்தான் இந்த படத்தையும் இயக்கினார்.
1964 முதல் எனக்கான படங்கள் தேடி வந்தன. எல்லாமே மாறுபட்ட கதாபாத்திரங்கள். அவை என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றன.
அவை எப்படிப்பட்ட படங்கள்?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/sowcarjanaki-2026-01-29-16-13-14.jpg)