(27) தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!

ன் தந்தையிடம் ஒருநாள்  விளையாட்டாக வோ, வினையாகவோ "ஏன் அப்பா கடவுளை பார்க்க முடிவதில்லை? அவர் இருக்கிறார் என்பதை எப்படிச் சொல்வது? எல்லையற்ற ஆகாயத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது?, இவ்வளவு பெரிய சமுத்திரம் இருக்கிறது இதை யார் படைத்தது? இவ்வளவு சிறிய எறும்பு இருக்கிறதே அது எப்படி ஓடுகிறது?'' என்று கேட்டேன். 

Advertisment

"இதற்கெல்லாம் யாராவது ஒருவர் காரணமாக இருக்கவேண்டும்தானே... அவர்தான் கடவுள்மா'' என்றார்.

Advertisment

சில சமயம் அவர் சொல்வது புரியும்; சில சமயம் சொல்வது புரியாமல் போரடிக்கும், சொல்லிக்கொண்டே போவார். நான்  அதிசயமாக அவர் வாயையும், முகத் தையும் பார்த்துக் கொண்டிருப் பேன். பின்னர் அப்படியே அப்பாவின் மடியில் சாய்ந்து தூங்கிவிடுவேன்.

1958ஆம் ஆண்டு. என் அப்பா அப்போது கல்கத்தா வுக்குச் சென்றிருந்தார். ஒருநாள்   "ஜானகி... நாளை நான் வருகிறேன். விமான நிலையத்தில் என்னைச் சந்திக்கவும்'' என்று எனக்கு செய்தி அனுப்பி யிருந்தார்.

Advertisment

என் குழந்தை களைக் கூப்பிட்டேன், "உங்கள் தாத்தா நாளைக்கு வரப் போகிறார்'' என்றேன்.

தாத்தாவிடம் அவர்களுக்கு ஒரு தனி ஈடுபாடு உண்டு. அதைக் கேட்டதும், "ஹேய் தாத்தா, தாத்தா வரப்போறார்' என்று கத்திக்கொண்டே படுக்கப் போய்விட்டார்கள்.

அன்று எனக்குப் படப்பிடிப்பு இருந்தது. முடித்துவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பினேன். மறுநாள் காலை நான் விமான நிலையத்திற்குப் போகவேண்டும்... படுக்கப் போனேன் . அப் போது என் தந்தையின் உருவம் என் கண் முன்னே நின்றது. நாளை அவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியே நிறைவாக தெரிந்தது. என் தந்தையை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்கின்ற எண்ணம் வலுப்பெற்றது. விளக்கை அணைத்துவிட்டு தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, அந்த நினைவிலேயே கண்களை மூடிக் கொண்டேன்.

திடீரென்று ஏதோ மணிச் சத்தம் கனவில் கேட்பது போன்ற ஒரு உணர்வு. தூக்கத்தி லிருந்து விடுபட்டு எழுந்து உட்கார்ந்தேன். ஆம்... என் படுக்கைக்கு அருகிலிருந்த டெலிபோன் மணி தான் அடித்தது. கடிகாரத்தைப் பார்த் தேன், மணி பன்னிரெண்டுக்கு மேலாகியிருந்தது. இந்த நேரத்தில் யார் போன் செய்வது? வெறுப்பும் திகைப்புமாக போனை எடுத்தேன்.

"கல்கத்தா ட்ரங்கால்' என்றது மறுமுனை. அதைக் கேட்டதும் எனக்குள் பயம்...  என்னவோ ஏதோ என்கின்ற படபடப்பு. என் தந்தையார் இருதயக் கோளாறினால் அன்று மாலை இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது... இடிந்து போனேன். ரொம்ப நாட்களுக்குப் பிறகு தந்தையை பார்க்கப்போகிறோம், அவருடன் உரையாடப் போகிறோம் என்று நினைத் திருந்த நேரத்தில், நான் மட்டு மல்ல, தன் பேரன் பேத்திகளு டன் அவர் பேசி மகிழ வேண்டிய தருணத்தில் இப்படி நடந்துவிட்டதே என்று மருகினேன்.

"உடலை என்ன செய் வது?'' கல்கத்தா ஆஸ்பத்திரி சிப்பந்தி கேட்டார். 

"உடலை  ஐஸ் பெட்டியில் வைத்து பாதுகாப்பாக தனி விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்றேன். 

 "அது எப்படி முடியும். உடலை  பாதுகாக்க எங்களிடம் வசதி இல்லையே'' என்றார் அந்தச் சிப்பந்தி.

என் வாழ்நாளிலேயே அப்போதுதான், ஒரு இந்தியப் பெண் சொல்லக்கூடாத ஒரு வார்த்தையை, நான் அவரிடம் சொன்னேன். 

"உங்களைச் சுட்டுவிடுவேன்... சொன்ன தைச் செய்யுங்கள்'' என்றேன் கோபமாக.

பக்தியையும் தார்மீக உணர்வையும் மட்டும் என் தந்தை எனக்கு தரவில்லை; நல்ல தைரியத்தையும் தந்திருந்தார். அந்த தைரியம் தான் எனக்கு பல வேளைகளில் உதவியிருக் கிறது. இப்போதும் துணை நிற்கிறது. பம்பரம் போல் சுழன்றேன். அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்துக்கொண்டே, என் கைகள் டெலிபோனை சுற்றியபடி இருந்தன. கல்கத்தா விமான நிலையத்துடன் தொடர்புகொண்டேன். நெருக்கடியான நிலையில் கடவுளைப் போல உதவுபவர்கள் சிலர் இருப்பார்கள்.

அஸ்ஸாம் செல்லவிருந்த ஒரு விமானம் தற்காலிகமாக அங்கு போகாமல், கல்கத்தா விமான நிலையத்தில் இருந்தது. இது என்  அதிர்ஷ்டம் மட்டுமல்ல; என் தந்தையின், தாயின், சகோதர சகோதரிகளின் அதிர்ஷ்ட மும்தான். உரியவர்களிடம் பேசி, அந்த விமானத்தில் சென்னைக்கு அவரைக் கொண்டு வர ஏற்பாடு செய்தேன்.

மறுநாள். விமான நிலையத்தில் நான் இருந் தேன். என் தந்தையின் உடலை  சுமந்து வந்த விமானம், கீழே இறங்க உத்தரவை எதிர்பார்த்து ஆகாயத்தில் வட்டமிட்டபடி பறந்து கொண்டிருந்தது. விமான நிலையத்தின் ஒலிபெருக்கிகளில், "தனிப்பட்ட ஒரு விமானம் இப்போது ஜானகி என்பவரது பெயரில் வந்திருக்கிறது. அவர் உடனே விமான நிலைய அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளவும்'' என்று அறிவிப்பு வந்தது.

கேட்டும், கேட்காததுமாக, நடந்தும், நடக்காததுமாக, நான் அங்கே சென்றேன்.

என் தந்தை விமானத்திலிருந்து இறக்கப்பட்டார். அவர் இறந்துபோனவர்போல தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருப் பது போலவே காணப்பட்டார். முன்தினம் அவரை வரவேற்பதற்காக நான் தயாராக வாங்கி வைத்திருந்த பெரிய மாலையை, இப்போது அவர் சடலத்தின் மீது வைத்தேன். என் கண்ணீர் அவரது சடலத்தை அபிஷேகம் செய்தது. என் விம்மலே மந்திரமாக ஒலித்தது.

"ஜானகி, இறக்கும் மனிதன் எங்கும் போவதில்லை. அவன் கடவுளிடம்தான் போகிறான். இப்போது உள்ள நிலையைவிட உயர்ந்த நிலைக்குப் போகிறான். அதனால் இறந்தவர்களை காணும்போது அழக்கூடாது, பயப்படக்கூடாது'' என்று அவர் எப்போதோ சொன்ன வாசகங்கள்  இப்போது  என் நினைவுக்கு வந்தன.

அவர் சுலபமாக சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால், நம்மால் அவ்வளவு சுலபமாக தாங்கிக்கொள்ள முடிகிறதா? என் வாழ்க்கையில் ஒரு பெரிய அத்தியாயம் அவரது மறைவுடன் முடிந்தது. நான் பக்குவம் பெற்ற ஒரு பெண்ணாக வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரண மாக என்  தந்தையாரையும், இயற்கை தாயையும்தான் சொல்ல வேண்டும். என் தந்தை எனக்கு புகட்டியது அறிவும் பண்பும்.

இப்போது என் குழந்தைகள் எனக்குத் துணை. பட உலகமும், ரசிகர்கள் உலகமும் எங்களுக்குத் துணை.

"வாழ்க்கை என்பது என்ன? வீடு என்பது என்ன? தூய்மை என்பதுதான் வீட்டுக்கு அழகு. நட்பின் சின்னமே... வீட்டின் கவுரவம். தெய்வத்தன்மை நிறைந்தது வீட்டின் வாழ்வு. இன்பம் நிறைந்த நிலையே வீட்டில் செல்வம்' -இந்த வாசகம்தான் என் இதயத்தில் இன்றும் நிறைந்திருக்கிறது. இதே வாசகத்தைத்தான் என் வீட்டின் நுழைவாயிலிலும் நான் எழுதி, கண்ணாடி போட்டு மாட்டி வைத்திருக்கிறேன்.

என் வாழ்க்கை நாவலின்  இரண்டாவது அத்தியாயமாக இதை வைத்துக் கொள்வோமா?

திரை உலகம் என்னை திரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டது. 1959ல் நான்கு படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தேன். அப்போது திரையுலகில் என்னைப் பற்றி சொல்லப்பட்ட விமர்சனம் என்ன தெரியுமா? 

(பேசுறேன்...)

படம் உதவி: ஞானம்