(26) திரையுலகில் ஒரு திருப்பம்!

ன் திருமணம் நடந்த பிறகு, நான் சௌகார் ஜானகியாகி சினிமாவுலகில்  பெயர் பெற ஆரம்பித்த நேரம். அந்த வாலிபரை (என் அன்பர்) நான் தற்செயலாக சில சமயங்களில் சந்திக்க நேரும் போதெல்லாம் அவர் "நீங்கள்' என்றுதான் என்னை மரியாதையாக அழைப்பார்.  "நீங்கள்' என்ற மரியா தைக்கான இந்த நாலு எழுத்துச் சொல், எங்களுக்கு இடையே இருந்த இடைவெளியை அதிகப்படுத்தி யதே  தவிர, நண்பர்கள் என்ற முறையில் கூட எங்களை அருகில் அழைத்து வரவில்லை. சில சமயங்களில் எதிர்பாராத வகையில் நாங்கள் ஏதேனும் படக் கொட்டகையில் பார்க்க நேர்ந்தால், அவர் உடனே எழுந்து வெளியே சென்றுவிடுவார். ஒருமுறை இதேபோல அவர் எழுந்து வெளியே கிளம்பியபோது "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?'' என்று அவரிடம் கேட்டேன்.

Advertisment

"உங்கள் இதயத்தை புண்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான்'' என்று பதிலளித்தார்.  நான் மௌனமாக இருந்துவிட்டேன்.

Advertisment

என் மகளின் திருமணம் நடந்தபோது  என் நண்பர் என்ற முறையில் அவருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்தேன், அவர் வரவில்லை. ஆனால் அவருடைய நல்வாழ்த்து அந்த இடத்தை இட்டு நிரப்பியது. என் வாழ்க்கை நாவலின் ஒரு அத்தியாயம் இப்படி. இதை முதல் அத்தியாயம் என்று சொல்லலாமா? 

1952ல் நான் நடித்து இரண்டு படங்கள் வெளிவந்தது எனக்குள் நம்பிக்கையை விதைத்தது. "முக்குரு கொடுகுலு' தெலுங்கிலும், "வளையாபதி' தமிழிலும் என்னை சினிமா துறையினரிடையே கொண்டு போனது. "அந்த "வளையாபதி பொண்ணு...' என்று நான் நடித்த படத்தோடும், "சத்தியவதி' என்ற என் கேரக்டர் குறித்தும் பேசப்பட்டது. 

Advertisment

திரையுலகினர் அவர்கள் பார்வையை என் பக்கம் திருப்பினர். 1954ல் "பணம் படுத்தும் பாடு' படத்தில் மீண்டும் என்.டி.ஆர். ஜோடியாக நான் (சௌகார் ஜானகி) மற்றும் தங்கவேலு, வர்மா, யமுனா, டி.கே.கல்யாணம், பிரெண்ட் ராமசாமி நடிக்க, வை.ஆர்.சுவாமி இயக்கினார். "பணம் படுத் தும் பாடு' என்பது பணத்தால் ஏற்படும் துன்பங்கள், உறவு சிக்கல்கள் மற்றும் வாழ்வின் போராட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மையக் கருத்து. "காசேதான் கடவுளடா' என்ற ஒரு பாடலும் இதில் உண்டு. அடுத்தடுத்து வந்த படங்கள் என்னுடைய பொருளாதாரச் சிக்கலை தீர்த்து வந்தன.

1955ல் "ஏழையின் ஆஸ்தி' என்ற படத்தில் நடித்தேன்.  தமிழின் முதல் பான் இந்தியா படம் இதுதான் என்று சொல்லுவார்கள். இது தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியானது.  கதை எழுதி டி.எல்.ராமசந்தர் இயக்கினார். இந்தப் படத்திற்கு முதன் முறையாக மூன்று பேர் (உதயகுமார், சம்பந்தம், குஹன்) வசனம் எழுதினர். அதேபோல இரண்டு பேர் (டி.ஏ.கல்யாணம், ஜி.நடராசன்) இசை அமைத்தனர். படத்தில் மொத்தம் பத்து பாட்டு. கருத்தைக் கவரும் காதல் பாடல்களை குஹன் எழுதியிருந்தார். கதை நாயகனாக ராஜ்நாலா, கதை நாயகியாக நான், மற்றும் சூரியகாந்தம், சந்திரகுமாரி, பேபி காஞ்சனா, மூக்கையா நடித்தனர். 1958ஆம் ஆண்டில் இரண்டு படங்களில் நடித்தேன். சினிமா பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வந்த தருணம் அது. இந்த ஆண்டிலே ஒரு துயரமான சம்பவமும்  நடந்தது.  முதலில் மகிழ்ச்சியான விஷயம்.

பிரபல டைரக்டர் பி.ஆர்.பந்துலு இயக்கி, நடித்து, தயாரித்த படம் "எங்கள் குடும்பம் பெருசு'. அவருடன் எம்.பி.ராஜம்மா நடித்தார். ஜி.முத்து கிருஷ்ணனுக்கு நான் ஜோடி. இந்தப் படத்தில் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவுக்காக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கௌரவ வேடத்திலும் மற்றும் சரோஜாதேவி குலதெய்வம் ராஜகோபால் ஆகியோரும் நடித்தனர். 

தெலுங்கில் முகம் தெரிந்த நடிகை என்பதால் இரு மொழிகளில் தயாராகும் படங்களில் என்னை ஒப்பந்தம் செய்வதாக அப்போது ஒரு பேச்சு. இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் அன்றைய பிரபல ஒளிப்பதிவாளர் சுப்பராவுடன், கர்ணன் ஒளிப்பதிவு செய்தார். டி.ஜி.லிங்கப்பா இசைக்க, பி.ஏ.குமார் வச னம் எழுதினார். ஒரு ஸ்கூல் மாஸ்டரின் கதையான இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று எல்லா மொழிக்கும் திரைக்கதை பொருந்தியது. இந்தப் படம் என்னை நான்கு மொழிகளிலும் கொண்டுசேர்த்தது. 

இதே 1958ல் நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாக நான் நடித்த படம்  "நல்ல இடத்து சம்பந்தம்'. பல நல்ல விஷயங்கள் இந்த படத்தில் அரங்கேறியது. படத்திற்கான கதையை நடிகர் வி.கே.ராமசாமி எழுதினார். அதற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் பிரபல இயக்குனர் ஏ.பி. நாகராஜன். அதேபோல ஏ.பி.நாகராஜன், வி.கே. ராமசாமி சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்தார் கள். அன்றைய முன்னணி இயக்குனர் கே.சோமு டைரக்ஷன். இந்தப் படத்தின் மூலமாகத்தான் எல்.ஆர்.ஈஸ்வரி பாடகியாக திரையுலகில் அறி முகமானார். ஏற்கனவே எம்.எஸ். ராஜேஸ்வரி என்ற பாடகி  இருந்ததால், லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற பெயரை எல்.ஆர்.ஈஸ்வரி என்று மாற்றி வைத்தவர் பிரபல டைரக்டர் ஏ.பி.நாகராஜன்.

படத்தில் எனக்கு ஜோடி எம்.ஆர்.ராதா. அவருக்கு அடங்கிய நல்ல மனைவியாக நான். பிரேம்நசீர் எனக்கு அண்ணனாகவும், எம்.என். ராஜம் அண்ணியாகவும், சாரங்கபாணி எனக்கு தந்தையாகவும், வி.கே. ராமசாமி -சி.கே.சரஸ்வதி மாமனார், மாமியாராகவும் நடித்தனர். "நல்ல இடத்து சம்பந்தம்' மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தது.  திரைஉலகில் 1958ஆம் ஆண்டு எனக்கு முன் னேற்ற ஆண்டாக அமைந்தது. 

மல்லிகைப்பூ என்றால் எனக்கு ஒரு மயக்கம். அதன் நெடி வீசும் மணத்தில், தூய்மையின் சின்னமான அதன் மாசுமருவற்ற வெண்மை நிறத்தில் எனக்கு ஒரு மயக்கம் உண்டு. இதனாலேயே என் வீட்டின் மாடியில், என் படுக்கை அறையை ஒட்டினாற் போல, மல்லிகைக் கொடியைப் படரவிட்டிருக்கிறேன். படப் பிடிப்பில்லாமல் வீட்டிலும் யாரும் இல்லாமல், நான் தனிமையில் இருக்கும்போது இந்த மல்லிகைக் கொடியின் அருகில்  நாற்காலி யை போட்டுக்கொண்டு உட்காருவேன். 

நான் என் கடந்த காலத்தைப் பற்றியும் நினைப்பதுண்டு. எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திப்பதுண்டு. ஆனால் இந்த மல்லிகையை பார்க்கும்போதும், மணத்தை நுகரும்போதும், எனது சிறுபிராயத்து மல்லிகையின் தோற்றத்தைப் போலவோ, அவற்றின் மணத்தைப் போலவோ இவையிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதே மல்லிகைதான்; அதே மணம்தான்... ஆனாலும் அந்தப் பழைய வாசனை -அது எங்கே? என் சிறுபிராயத்துடனே அது போய்விட்டதோ? என் உணர்வுக்கு அது மீண்டும் வரவே வராதோ? ஏதோ யோசனை... விசித்திரமான குழப்பம். 

ஒரு சமயம் இப்படித்தான் மல்லிகைப்பூவை வாங்கி வந்து நான் தொடுத்துக்கொண்டிருந்தேன். கை வலிக்கும் வரை தொடுத்துவிட்டேன். தலை நிறைய தொடுத்ததையும் வைத்துவிட்டேன். அப்படியும் மிச்சமிருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

"என்னம்மா யோசிக்கிறாய்?'' என்று கேட்டபடி என் தந்தை வந்தார்.

"பூ மிஞ்சிப் போச்சு, சாமி படத்துக்கு போடப் போறேம்பா'' என்றேன்.

"போடுமா உன் உண்மையான பக்தி அப்போதுதான் தெரியும்'' என்றார்.

"என்னப்பா சொல்றீங்க?'' என்று கேட்டேன்.

"இல்லம்மா திருப்தியான உள்ளத்திலிருந்து வருவதுதான் உண்மையான பக்தி. இப்போ பார், உன் தலைக்கு ஆசைப்படி பூ வைத்துக்கொண்டுவிட்டாய். உன் உள்ளம் திருப்தியடைந்து விட்டது. மீதியை முழுமனதோடு சாமிக்குப் போடப்போகிறாய். அதுதான் உண்மையான பக்தி. சாமி படத்துக்கு நீ தொடுத்த பூவையெல்லாம் போட்டுவிட்டு, கடைசியில் கொஞ்சம் பூவை தலையில் வைத்துக்கொள்ளும்படி வரலாம். அப்போது சிறிதளவாவது உன் மனம், "எனக்கு இவ்வளவு குறைவான பூதானே கிடைத்தது என்று எண்ணும். அப்போதே உன் பக்தியும் போலியாகிவிடும்'' என்றார்.

எனக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி... படாடோபமாக கடவுளை வழிபடுவது பிடிக்காது. எனக்கு நம் மதத்திலும், கட வுளிடத்திலும் நிறைய நம்பிக்கை உண்டு. ஆனால் அந்த நம்பிக் கையையும் ஈடுபாட்டையும் வளர்த்தவர் என் தந்தையேதான்.

1958. என் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம்...

(பேசுறேன்...)

படம் உதவி: ஞானம்