(22) பாசம் எல்லாம் ஒரு வேஷம்!

ன் தாயார் பேசிய விஷயத்தை என் கணவரிடம் சொன்னபோது, அவர் அதற்கு பெரிதாக எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை, மறுப்பும் சொல்லவில்லை. செலவில் பாதியை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள் என்ற கோணத்தில், அவர் இந்த யோசனையை வரவேற்கவில்லை. வேறு காரணத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisment

"நீ காலையிலேயே ஸ்டுடியோவுக்குப் போய்விடுகிறாய். குழந்தையை ஆயா சரியாகக் கவனிக்கவில்லை என்று கவலைப்படுகிறாய். இந்த நிலையில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள அவர்கள் (உன் அம்மா, தங்கை) உதவுவார்கள் அல்லவா'' என்று விளக்கினார்.

Advertisment

அவர் சொல்வதில் உள்ள நியாயம் எனக்கும் புரிந்தது, சரியென்றும்பட்டதால் சம்மதித்தேன். 

அம்மா, அண்ணன், தங்கை எல்லாரும் ஓரிடத்தில் மீண்டும் சேர்ந்திருக்கிறோம். 

இது மகிழ்ச்சியான தருணம். மீண்டும் பாசமும் அன்பும் உறவும் எங்களுக்குள் வளரும் என்று நினைத்தேன். ஆயாவைவிட என் அம்மா, தங்கை இருவரும் இன்னும் கூடுதல் கவனத்துடன் குழந்தையைப் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது. அந்த நினைப்பும் நம்பிக்கையும் ரொம்பநாள் நீடிக்கவில்லை. ஆமா... கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளி என்பது போல, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதுபோல தொந்தரவுகள், பூசல்கள், கொஞ்சம் கொஞ்சமாக தலை காட்ட ஆரம்பித்தன.

Advertisment

அன்றைய தினம் நான் ஏதாவது ஒரு சோகமான காட்சியில் நடித்துவிட்டு வந்தால், அதன் பாதிப்பும் களைப்பும் இருக்கும்தானே? அந்தக்காட்சியில் கிளிசரின் போட்டு அழுது நடித்ததால் சற்று உப்பிய, சிவந்த கண்களுடன் வீட்டுக்கு வருவேன்.

"எங்களைப் பார்த்ததுமே, ஏன் இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு வருகிறாய்?  நாங்க வந்தது உனக்கு பிடிக்கலையா?'' என்று என் தாயார் குத்தலாகக் கேட்பார். நான் எந்த நிலையில் எந்தக் காட்சியில்  நடித்துவிட்டு வருகிறேன் என்பதை அவர் நினைத்துப் பார்க்க மாட்டார். ஏதோ வாய்க்கு வந்ததைப் பேசுவார். வேறு சில நேரங்களில் இன்னும் ஒருபடி மேலே போய், "நாங்க என்ன உன் வீட்டு ஆயாவா? உன் குழந்தையை பார்த்துக்க, உனக்கு வேறு ஆள் கிடைக்கலையா? நீதான் சம்பாதிக்கிறியே வேறு ஆயாவை வைத்துகொள்வதுதானே?'' இப்படி சிலநாள் கேள்விகள் வரும்.

ஒரு வேலைக்கார ஆயாவைவிட, என் குழந்தையை (தன் பேத்தியை) என் தாயார் கொஞ்சம் அன்பாகப் பார்த்துக்கொள்வார், கவனமாய்  பார்த்துக்கொள்வார் என்று  நினைத்தது தப்பா?

"அந்தக் குழந்தை உனக்குப் பேத்தி மாதிரிதானே? நீ அதற்கு ஆயாதானே'' என்று வேகமாக வந்த  வார்த்தைகளை அப்படியே அமுக்கிவிட்டேன்.

ஒவ்வொரு நாளும் இப்படி சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்கள் நிஷ்டூரமாக  பேச ஆரம்பித்தார்கள். அவர்களாகத் தேடிவந்தார்கள். நாங்களும் பாதிச் செலவை ஏற்றுக் கொள்கிறோம் என்றார்கள். பிறகு எதற்காக இந்த குத்தல் பேச்சு, எதற்காக வம்புச் சண்டை. எனக்கும் ஒன்றுமே புரியவில்லை.

இவர்கள் இப்படியென்றால்... என் கணவர் வேறு மாதிரியாக குத்தலும், கிண்டலுமாக கேள்வி தொடுப்பார்.

"இன்னைக்கு என்ன ஸீன்ல நடிச்சே.?''

"கல்யாண ஸீன்ல நடித்தேன்''

sowcarjanaki1


"முதல் இரவு ஸீன் எடுக்கலையா?''

"ஆமா, முதலிரவு காட்சியை எடுத்தார்கள்" என்று நான் வெகு எதார்த்தமாக அன்றைக்கு நடித்த  காட்சிகளைப் பற்றி சொல்வேன்.

"உன் கல்யாணத்தின்போது கைக்கு வங்கி, இடுப்புக்கு ஒட்டியாணம் எல்லாம் நாங்க உனக்கு வாங்கிப் போடலை, படத்திலாவது அதெல்லாம் போட்டு எடுத்தார்களா?'' என்று கிண்டலாக கேட்டார்.

"அதையெல்லாம் போட்டுக்க நான் உண்மையாகவே ஆசைப்பட்டது கிடையாது. நடிப்புக்காக படத்தில் மட்டும்தான் போட்டுக் கொடுக்கிறேன். அதுவும் "கில்டு' நகைகள்தானே!'' என்று நான் சாதாரணமாகச்  சொன்னேன்.

ஆனால் அவர் சாதா ரணமாக அதை என்னிடம் கேட்கவில்லை. மனதுக்குள் வேறு ஏதோ புகைந்து கொண்டிருக்கும், பொறாமை யோ சந்தேக உணர்ச்சியோ அதிலிருப்ப தாக அவர் கண்களும் முகமும் காட்டிக் கொடுத்தன. 

நான் சினிமா வில் நடிப்பது அவருக்கு பிடிக்கவில்லை. கல்யாணக் காட்சியில் தாலி கட்டும் காட்சி இருக்கும். முதலிரவுக் காட்சியில் ஒரு நடிகர் என்னை தொட்டு, கட்டி அணைப்பது போல காட்சி எடுப்பார்கள் என்ற உறுத்தல் அவரது வார்த்தைகளில் வெளிப்படுவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

இதற்கெல்லாம் காரணம் நானா? நான் வேலைக்குப் போய்த்தானே என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. எனக்கு மட்டும் கைக் குழந்தையை பாலூட்டி வளர்க்கக் கூட வீட்டில் இல்லாமல், அதை பரிதவிக்க விட்டுவிட்டு நடிக்கப் போகவேண்டும் என்று பேராசையா. என்ன?

என் கணவரும், மற்ற கணவன்மார்களைப் போல நல்ல உத்தியோகத்திற்குப் போய், குடும்பத்தை சற்று வசதியாக நடத்த, பணம் சம்பாதித்து வந்திருந்தால் நானும் வீட்டிலிருந்து என் குடும்பத்தை., என் குழந்தையை சந்தோஷ மாகக் கவனித்துக்கொள்வேனே... சினிமா பக்கமே தலைகாட்டியிருக்க மாட்டேன்.

என் கணவர் இது மாதிரி கிண்டலாகக் கேட்கும்போதெல்லாம் எனக்கும் சற்று கோபம் வரும். ஆனால் பெண் என்கின்ற பொறுப்புடன் பொறுமையுடன் அமைதியாக கடந்து விடுவேன்.

"உள்ளூர இப்படி வேதனைப்படுபவர், என்னை ஒழுங்காக வைத்துக் காப்பாற்றுவதற்கு என்ன? என்னைப் போய் இப்படி கேட்க வந்துவிட்டார்... விட்டுத் தள்ளு''என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன். இதற்காக கலங்கி நின்றுவிட முடியுமா?

நான் அழுதால் என் கண்ணீரைத் துடைக்க என் கைகள்தானே ஓடிவரும். வேறு யாருடைய கையும் வராது. இதே நிலையில்தான் நான் அன்று இருந்தேன் அதன்பின் வெகு காலம்வரை என் நட்சத்திர அந்தஸ்து உயரும்வரை இந்த துயரங்கள் தொடர்ந்தன. 

காலையில் நான் வீட்டைவிட்டுக் கிளம்பும் போது என் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும். இரவு நான் வீடு திரும்பும்போதும் அது சுகமாக தூங்கிக்கொண்டிருக்கும். நான்குமாதக் குழந்தை, அதை தோளில் தூக்கி, மடியில் வைத்துக் கொஞ்சவும், அதன் மழலை மொழியைக் கேட்டு மகிழவும் முடியவில்லையே என்ற ஏக்கம் சிலநேரம் வந்து வாட்டும். வேலைக்குப் போகவேண்டும், குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணம் வரும் ஏக்கத்தை உடைத்துப்போடும்.

ஆரம்பத்தில் ஒரு சில மாதங்களுக்கு குழந்தைக்கு நானே பாலூட்டி வந்தேன். ஸ்டுடியோவுக்கு நான் போக ஆரம்பித்ததும் குழந்தையை தாய்ப்பாலிருந்து மாற்றி செயற்கை பாலுக்கு மாற்ற வேண்டியதாகிவிட்டது.

ஸ்டுடியோவில் அஞ்சம்மா என்ற ஒரு பெண்மணி எனக்கு உதவியாக இருந்தார். அவர் ரொம்ப நாள் வாஹினி  ஸ்டூடியோவில் இருந்தார்.

அப்போது நான் செய்த ஒரு செயலைப் பார்த்து அஞ்சம்மாள் திடுக்கிட்டார். 

"என்ன இப்படி பண்றீங்க'' என்றார்...

(பேசுறேன்...)

படம் உதவி: ஞானம்