ர்.கே.நகரில் குக்கர் சத்தம் பலமாக கேட்டதிலிருந்து, இடைத்தேர்தல் என்றாலே செம குஷியாகிவிடுகிறார் டி.டி.வி.தினகரன். கலைஞர் மறைவால் திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததுமே, ""இரண்டு தொகுதியிலுமே அ.ம.மு.க. போட்டியிடும். குக்கர் சின்னம் நிச்சயம் ஜெயிக்கும்'' என நம்பிக்கையுடன் பேச ஆரம்பித்தார் தினகரன்.

byelectionஇந்த இரண்டு தொகுதிகளுக்கும் குக்கர் சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்குமா எனத் தெரியாத நிலையில், திருவாரூர் தொகுதியின் சுவர்களில் குக்கர் சின்னத்தை வரைந்து தள்ளிவிட்டார்கள் டி.டி.வி.யின் ஆதரவாளர்கள். தேர்தல் தேதி எப்போது எனத் தெரியாத நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் களமிறங்கி பணிகளை ஆரம்பித்துவிட்டது தினகரன் டீம்.

மதுரை மாநகராட்சி எல்லைக்குள் வரும் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திருநகர், ஹார்விபட்டி பகுதிகளை அடக்கிய 11 வார்டுகளையும் நாகமலைபுதுக்கோட்டை, வலையங்குளம், ஓ.ஆலங்குளம் உள்ளிட்ட 32 ஊராட்சிகளையும் உள்ளடக்கியதுதான் திருப்பரங்குன்றம் தொகுதி. கள்ளர், அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மை உள்ள தொகுதி.

1971-ல் காவேரிமணியமும் அதன்பின் செ.ராமச்சந்திரன் இருமுறையும் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்றவர்கள். எட்டு முறை அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. 1977 மற்றும் 80—ல் கா.காளிமுத்து வென்றார். அ.தி.மு.க.வே அதிக முறை வென்றிருந்தாலும் இப்போதே தொகுதியில் சுறுசுறுப்பு காட்டுவது தினகரனின் அ.ம.மு.க.தான். கள வேலைகள் குறித்து அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, “இந்த தொகுதியைப் பொறுத்தவரை 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள், 292 போலிங் பூத் இருக்கு. ஒரு பூத்துக்கு சராசரியாக 1,200 வாக்களர்கள். அனைத்து பூத்துகளுக்கும் தலா 5 பொறுப்பாளர்களை இப்போதே நியமித்துவிட்டார் தினகரன். இரண்டு மாதத்திற்கு அவர்களுக்கு தினசரி சம்பளம் 1,000 ரூபாய் என பேசி 10,000 அட்வான்சும் கொடுத்திட்டாரு.

Advertisment

அதேபோல் தினசரி 250 வாக்காளர்களைச் சந்திக்கும் கேன்வாசிங் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு தினசரி சம்பளம் ரூ.500 மற்றும் சாப்பாடு என ஏற்பாடு பண்ணிட்டோம். இதுவும் போக பூத் வாரியாக 5 முதல் நிலை பொறுப்பாளர்கள் என கணக்குப் போட்டு 1460 பேருக்கு 25 ஆயிரம் அட்வான்சும் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கோம். இப்பவே 1 லட்சம் ஓட்டு கன்ஃபார்ம். கடைசிக் கட்டத்துல யாருமே யூகிக்க முடியாத அதிரடி வேலையக் காட்டுவாரு அண்ணன் தினகரன். இடைத் தேர்தல் ரேஸில் ஜெயிக்கப் போவது நாங்கதான்'' என விலாவாரியாக பொளந்து கட்டினார்.

பாலு என்கிற நிர்வாகியோ, ""ஆர்.கே.நகர் போல இங்கேயும் தி.மு.க.வுக்கு மூணாவது இடம் தான். ஏன் முதல்வர் எடப்பாடிக்கும் அமைச்சர் எடப்பாடிக்கும் இது மானப் பிரச்சனை. அரசு எந்திரத்தை வைத்தும் அதிகார பலத்தை வைத்தும் எங்களை மிரட்டிப் பார்க்க முடியாது'' என தைரியமாகவே பேசினார்.

byelectionஅனைத்து வேலைகளும் ஜரூராக நடப்பதால், மாஜி சபா காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை நிறுத்துவதில் தீர்மானமாக இருக்கிறார் தினகரன்.

Advertisment

ஆளும் கட்சி ஏரியாவில் வலம் வந்தோம். செல்வம் என்ற ரத்தத்தின் ரத்தம் நம்மிடம், “""இங்க ஒரே குழப்பக் குத்துவெட்டா இருக்குண்ணே. மாஜி எம்.எல்.ஏ. முத்துராமலிங்கத்துக்கு ஓ.பி.எஸ். சப்போர்ட் பண்றாரு. அமைச்சர் உதயகுமாரோ ராஜன் செல்லப்பா மகன் சத்யன் அல்லது வக்கீல் ரமேஷுக்குத்தான் சீட்டுன்னு வரிஞ்சு கட்டுறாரு. இப்ப லேட்டஸ்டா நத்தம் விஸ்வநாதனும் தனது ஆள் ஒருவருக்கு சீட்டுன்னு குட்டையக் குழப்ப ஆரம்பிச்சுட்டாரு. எது எப்படி இருந்தாலும் தினகரனை ஜெயிக்கவிட மாட்டோம்'' என ரொம்பவே நம்பிக்கையாக பேசினார்.

தி.மு.க. ஏரியாவிலோ, டாக்டர் சரவணனும் எஸ்.ஆர்.கோபியும்தான் முன்னணியில் இருக்கின்றனர். செ.ராமச்சந்திரனும் ரேஸில் இருக்கிறார். ஆர்.கே.நகர் கதை மாதிரி ஆகிவிடக் கூடாது என்ற கவலை அதிகமாகவே தெரிகிறது. அதே நேரத்தில் மு.க.ஸ்டாலின் தலைவர் ஆன பின் நடக்கும் தேர்தல் என்பதால், கோஷ்டிகளை மறந்து கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் களத்தில் இறங்கினால் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. "அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. தவிர மற்ற கட்சிகள் போட்டியிடுவது "எங்கள் கட்சியும் இருக்கிறது' என்பதைச் சொல்லத்தான் என்பதுதான் இப்போதைய நிலைமை.

-அண்ணல்