துரை திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் தர்காவும், அடிவாரத்தில் முருகன் கோயிலும் உள்ளன. அத்துடன் சமணர் படுகைகளும் இருக்கின்றன. இப்படி பல்வேறு மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுடன் மத நல்லிணக்கத்தின் வடிவமாக திருப்பரங்குன்றம் மலை திகழ்கிறது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு வருடமாக  திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து பதட்டமான சூழ்நிலையை இந்துத்வா அமைப்புகள் உருவாக்கி வருகின்றன. 

Advertisment

கடந்த வருடம் மே மாதம் தர்கா போகும்வழியில் திடீரென போலீஸ் செக்போஸ்ட் முளைத்தது. காவல் ஆய்வாளர் மதுரை வீரன் வந்ததும் முதல் வேலையாக தர்காவுக்குப் போகும் வழியில் ஒரு செக்போஸ்ட் போட்டு அங்கு காவலர்களை நிறுத்தி தர்காவுக்கு போகும் நபர்களின் போன் நம்பர், முகவரியைக் கொடுத்துவிட்டுத்தான் போகணும் என்று உத்தரவு போட்டார். 

Advertisment

அடுத்த சில வாரங்களில் நேர்த்திக் கடன் செலுத்த வந்தவர்களிடம் தர்காவில் ஆடு, கோழி வெட்ட அனுமதி யில்லை என்று தடுத்தார். அதுமுதலே இப்பகுதியில் ஒன்றைத் தொட்டு ஒன்றாக இந்துத்துவ அமைப்புகள் பிரச்சனைகளை உருவாக்கி வந்தன. 

கார்த்திகை மாதம் முருகனின் திருப்பரங்குன்ற மலைமீது எப்போதும் ஏற்றப்படும் தீபத்தை தவிர்த்து தர்காவுக்கு அருகிலுள்ள கல் தூணிலும் தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக் குமார் மதுரை நீதிமன் றத்தில் வழக்குத் தொடுக்க, உயர் நீதி மன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அந்த இடத்தை ஆய்வுசெய்து, தர்கா அருகில் கார்த்திகை தீபமேற்ற எந்தவித ஆட்சேபனையும் இல்லையென்றார். சட்டம் ஒழுங்கு குலையாமலிருக்கவும், சமூக மோதல் ஏற்படாம லிருக்கவும் அதற்கெதிரான நிலைப்பாட்டையெடுத்து இரண்டாவது தீபமேற்ற 144 தடை உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இன்னும் அந்த விவகாரம் முடிந்தபாடில்லை.

Advertisment

இந்நிலையில் திருப்பரங் குன்றம் பகுதி மக்களிடமும் வியாபாரிகளிடமும் தீபமேற்றும் விவகாரத்தில் அவர்களது மனநிலையை அறியப் பேசினோம். 

tpk1

வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன், "எங்களுக்குத் தெரிந்து இக்கோயிலின் மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் இடத்தில்தான் காலங்காலமாக தீபமேற்றுகிறார்கள். எனக்கு 70 வயது ஆகிறது. 50 வருஷமா நான் பார்த்திருக்கிறேன். இந்த போராட்டத்திற்கும் இங்கிருக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை. இப்பகூட இந்த இந்து அமைப்புகள் கடையடைக்கச் சொன்னார்கள். வியாபாரிகள் யாரும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று நாங்கள் சொல்லிவிட்டோம். மக்கள் எப்பொழுதும்போல் முருகனைத் தரிசித்துவிட்டு அமைதியாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்தவர்கள்தான் இங்கு பிரச்சினை செய்கிறார்கள்''’என்றார்.

 அடுத்து பேசிய மணி தேவரோ, “"பிரிட்டிஷ் காரனுக்கு எதிர்ப்பைக் காட்ட தர்கா இருக்கும் தூணில் தேசியக் கொடியை ஏற்றி எங்க அப்பா ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பைக் காட்டினார். அதுதான் எனக்குத் தெரியும். இப்பகூட முருகன் கோவிலில் சந்தனம் கொடுப்பது முஸ்லிம் மக்கள்தான். நாங்கள் தாயா, பிள்ளையாதான் வாழ்கிறோம். இது தேவையில்லாத பிரச்சினை''’என்று முடித்துக்கொண்டார் 

முருகன் கோயில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் நபர் பெயர் சொல்ல மறுத்துவிட்டார். “"எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பிள்ளையார் கோயில் மலை உச்சியில்தான் தீபமேற்றுகிறார்கள். அதேசமயம் இந்த மலை திருப்பரங்குன்றம் முருகனுக்குச் சொந்தமானது. அதனால்  தர்கா அருகிலுள்ள தூணில் தீபமேற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்து அமைப்பினர். எந்தவித ஆதாரமும் இல்லாமலா நீதிபதி அப்படி ஒரு உத்தரவு போடுவார். இந்து சமய அறநிலையத்துறையே முன்னின்று தீபமேற்றி இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இவ்வளவு போராட்டம் தேவையில்லை. எங்களுக்கும் வியாபாரம் நல்லபடியா நடந்திருக்கும். மற்றபடி தர்காவைச் சேர்ந்தவர்களும் என்னிடம்தான் பூ, சந்தனம் வாங்கு கிறார்கள். எல்லோரும் ஒற்றுமையா இருந்தா போதுங்க''”என்றார்.

இவ்வளவு பிரச்சினைக்கும் நடுவே மலையடிவாரத்தில் இருந்த ஒரு சாமி யாரைச் சந்தித்தோம். “"தம்பி, எம்பெருமான் முருகன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். முருகனுக்கு முதலில் தமிழில் அர்ச்சனை செய்யுங்க. முருகன் ஆரியர்கள் சொல்லும் ஆகம விதிகளுக்கு அடங்கமாட்டான். இதற்கு விரைவில் தீர்வு வரும்''’என்றார். 

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் அருகில் ஜாதகம் பார்க்கும் ஜோசியர் ஒருவர் பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார். "காலங்காலமா இருந்து வருகிறேன். எந்தக் காலத்திலும் இப்படி கிடையாது. இங்கிருக்கும் மக்கள்  மாமன், மச்சானா பழகு றாங்க. இது தேவையில்லாத பிரச்சினை. ஒவ்வொருநாளும் என்ன நடக்குமோ, எப்படி இருக்குமோனு கொஞ்சம் பயத்தில்தான் இருக் கிறோம் தம்பி''’என்றார். 

கோயிலுக்கு அருகிலுள்ள தியாகராஜனோ, "இவ்வளவு பிரச் சினைக்கும் மூலகாரணம் ஆய்வாளர் மதுரை வீரன்தான். அவரை இன்னும் பணி மாறுதல் செய்யவில்லை. அது ஏனென்று தெரியவில்லை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வடிவேலு படத்தில் சொல்றமாதிரி பா.ஜ.க., இந்து அமைப்புகள் தேவையில்லாத ஆணி. இவங்க கிளப்புகிற ஒவ்வொரு பிரச்சினையையும் பார்த்தா திருப்பரங்குன்ற மக்களை நிம்மதியா வாழ விடமாட்டாங்க''’என்றார் அதிருப்தியாக.