ஜல்லிக்கட்டுக்காக அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டத்துக்கு மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அந்தப் போராட்டம் வீறுகொண்டு எழுச்சி பெற்றதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டவர் முகிலன்.
2017-ல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசிநாளன்று போலீஸார் இவரை மட்டும் குறிவைத்து வேனில் தூக்கிப்போட்டு உடல்ரீதியாக கடுமையான சித்திரவதை செய்தார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, போலீஸ் காவலை மீறி முகிலனை பேட்டியெடுத்து நக்கீரன் வெளியிட்டது…
ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிக்குப் பிறகு மக்கள் பிரச்சனைக்காக, இனம் மற்றும் மொழி உரிமைக்கான போராட்டங்கள் பரவலாக நடைபெறத் தொடங்கின. மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளின் பின்னணியில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பின்னப்படும் சதிகளை மக்களுக்கு விளக்குவதில் முகிலன் போன்றோர் முக்கியப் பங்காற்றினர். முகிலன் போலவே திருமுருகன் காந்தியும் மக்கள் போராட்டங்களில் முன்னிலை வகித்தார். பா.ஜ.க.வின் தமிழக மக்களுக்கு எதிரான, மொழிக்கு எதிரான நடவடிக்கைகளையும், நீட் போன்ற மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் பிரச்சனைகளில் மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் போராட்டங்கள் வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் பிரச்சாரம் செய்தவர்.
ஆனால் இவர்களைப் போன்றவர்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதை செய்யும் நோக்கில் தமிழக அரசு சமீபகாலமாக முயற்சி மேற்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் முகிலனை போலீஸார் கைது செய்தாலும், அவர் பிணையில் விடுதலையானார். அதைத்தொடர்ந்து மறுநாளே, முகிலனை ஆறுபேர் கொண்ட கும்பல் கடத்தியதாக தகவல் வந்தது. மீடியாவில் பரபரப்பு செய்தியானவுடன் அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீஸ் நடவடிக்கையை நீதிபதியே கடுமையாக கண்டித்தார்.
அதன்பின்னர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி முகிலன் மீது பல்வேறு வழக்குகளை போட்டு, பாளையங்கோட்டை சிறையிலும், மதுரைச் சிறையிலுமாக அடைக்கப்பட்டார். ஏராளமான சித்திரவதைகளை அனுபவித்த முகிலன், 374 நாட்களுக்குப் பிறகு... கடந்த 26-ஆம் தேதி மதுரை சிறையிலிருந்து விடுதலையானார்.
அவரிடம் நக்கீரனுக்காகப் பேசினோம்...…
""பல்வேறு பிரச்சினைகளில் மக்களுக்கான போராட்டங்களில் நான் பங்கெடுத்தாலும், தூத்துக்குடி போராட்டத்தில் என்னை கைதுசெய்து, பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் சாக்கடைக்கு அருகில் அடைத்ததுதான் கொடுமை. கொசுக்கடியில் தூங்க முடியாமல் செய்து, நான் போர்த்தியிருந்த போர்வையே ரத்தக்கறையாகும் அளவுக்கு சித்திரவதை அனுபவித்தேன். சிறையில் வந்து பார்த்த வைகோ எனது நிலையை நினைத்து வருத்தப்பட்டார். வள்ளியூர் நீதிமன்றத்தில் நீதிபதியிடமே எனது சட்டையைக் கழற்றிக்காட்டி சிறைக்கொடுமையை வெளிப்படுத்தினேன். ஒவ்வொருமுறையும் நீதிமன்றத்தில் புகார் செய்தாலும் போலீஸ் சித்திரவதை மட்டும் குறையவே இல்லை. இறுதியாக நீதிபதி கடுமையாகக் கண்டித்து, வேறு சிறைக்கு என்னை மாற்ற உத்தரவிட்டார். அதன் பிறகுதான் நள்ளிரவில் என்னை மதுரை சிறைக்கு மாற்றினர்.
ஆனால், மதுரை சிறைக்கு மாற்றப்பட்டபிறகு போலீஸ் சித்திரவதை வேறுவிதமாக மாறியது. யாரிடமும் பேசமுடியாதபடி தனிமைச் சிறைக்கு மாற்றினர். சாப்பிட்ட பிறகு வயிற்றுவலியால் அவதிப்படத் தொடங்கினேன். பதினோருமுறை என்னை கொல்ல முயற்சி செய்தார்கள். இதையெல்லாம் நீதிபதியிடம் சொல்லி மன்றாடினேன். அதைக்கேட்டு, நீதிபதிகளே சிறைக்கு வந்து ஆய்வுசெய்தது தமிழக சிறைத்துறை வரலாற்றிலேயே முதன்முறையாகும்.
இப்போதைய தமிழக அரசு அ.தி.மு.க. அரசு அல்ல; பா.ஜ.க. அரசுதான். என்னைப் போன்ற போராட்டக்காரர்களை கைதுசெய்து உடல்ரீதியாக துன்புறுத்தி, மனோபலத்தை இழக்கச் செய்வதே அவர்களுடைய வழிமுறை. இதன்மூலம் போராட்டக்காரர்களை முழுவதுமாக அச்சுறுத்தி முடக்குவதுதான் பா.ஜ.க.வினரின் அஜெண்டாவாக இருக்கிறது. நான் விடுதலையாகி வெளியே வந்த சமயத்தில்கூட சிறையில் திருமுருகன் காந்தி மூச்சுத்திணறல் மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டதாக கூறினார்கள். பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் திருமுருகன் காந்திக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் போராட்டக்காரர்களை, சாப்பாட்டில் உடலைப் பாதிக்கக்கூடிய சந்தேக மருந்துகளை கலந்து அவர்களை பலவீனப்படுத்தும் புதிய முறைகளை போலீஸார் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
இது ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தலின்பேரில் நடைபெறுகிறது. பாசிச ஆட்சியாளர்கள்தான் இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுவார்கள். மராட்டியம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இடதுசாரி அறிஞர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்கள் அல்லது நக்சலைட்டுகள் என்று குற்றம்சாட்டி சிறையில் தள்ளி சித்திரவதை செய்கிறார்கள். இத்தகைய பாசிச மனப்பாங்கை எடப்பாடி அரசு நடைமுறைப்படுத்துகிறது. மாணவி சோபியா "பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக' என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இன்னும் எத்தனை கொடுமைகள் நடக்கப்போகிறதோ''…என்று முடித்துக்கொண்டார் முகிலன்.
-அண்ணல்