க்டோபர் மாதத்தில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தாக்குதலை எதிர்பார்க்கலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் இம்முறை குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதால் தேவையான மருத்துவ ஆயத்தங்களை செய்துகொள்ளும்படியும் ஆலோசனை தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இவ்வமைப்பால் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், “குழந்தைகளும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படும்போது, மருத்துவர்கள், பணியாளர்கள், வென்டி லேட்டர் போன்ற மருத்துவ சாதனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்றவை அதிகளவில் தேவைப்படும். இந்தியாவில் கைவசமுள்ள மருத்துவர்கள், பணியாளர்கள், வென்டி லேட்டர்கள், ஆம்புலன்ஸுகளுக்கும், தேவைப்படும் எண்ணிக்கைக்குமான வித்தியாசம் பெரிய அளவில் உள்ளது. எனவே மிக விரைவாக மத்திய- மாநில அரசுகள் இதற்கு ஆயத்தமாக வேண்டும்” எனச் சொல்லப்பட்டுள்ளது.

tt

மூன்றாவது அலை குறித்து பல்வேறு மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன. எனினும் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. ஆயத்தமாக இருந்து மூன்றாவது அலை வராமல் போனால் நட்டமில்லை. ஆனால் ஆயத்தமாக இல்லாதபோது மூன்றாவது அலை தாக்கினால் அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்.

மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடும். அதிலும் ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுநோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளை கவனமாக அணுகவேண்டும். தேசமெங்கும் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவதே மூன்றாவது அலையை வலுவிழக்கச் செய்வதற்கான வழி.

ஆனால் இந்தியாவிலோ இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே. குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போட ஆரம்பிக்கவே இல்லை. இந்தியாவில் முதன்மை சுகாதார மையங்களில் 82 சதவிகிதமும், சமூக சுகாதார மையங்களில் 63 சதவிகிதமும் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதாவது நம்மிடம் போதுமான குழந்தைகள் நல மருத்துவர்கள் இல்லையென்பதை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது.

பொதுமக்கள், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர்வது, மாநிலங்கள் தளர்வுகளை அறிவிப்பதில் கவனம் செலுத்துவது, கூட்டம்சேரும் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதில் மத்திய- மாநில அரசுகள் கவனமாக இருப்பதன் மூலம் மூன்றாவது அலையை பேரிழப்பின்றிக் கடக்கலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

-மணி