Skip to main content

திண்ணைக் கச்சேரி!

மாஜி அம்மணிக்கு உறுதி தந்த மாண்புமிகுக்கள்!

மண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில், நகரத் தெருக்களின் ஓரத்தில் வளர்ந்து செழித்து புதராகிக் கொண்டிருந்த சீமை விஷக் கருவைகளை வேரோடு வெட்டி அழித்த நக்கீரன் மகளிரணியினர் ஒரு வீட்டின் திண்ணையில் ஓய்வுக்காக உட்கார்ந்தனர்.

மெரினா: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நெஜம்மாலுமே நெத்தி வேர்வை நெலத்தில வழியப் பாடுபடுறது நாமதாம்மே. ஆனால் சுற்றுச் சூழல் விருதுகளை சம்பந்தமில்லாம யார் யாருக்கோ கொடுக்குதும்மே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

thinnaikatchery

பவானி: ஏனுங்க மெரினா. நம்ம முதலமைச்சர் மூணு கலெக்டர்களுக்கு பசுமை விருதுகளைக் கொடுத்திருக்கிறாரு. அதைத்தான் சொல்றீங்களா?

மெரினா: அதாம்மே... அந்த மூணு கலெக்டர்கள்ல திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியும் ஒருத்தரும்மே. இந்தம்மாவுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் என்னாம்மே ரிலேஷன்? இப்பிடி நான் கேக்கலை. கோட்டைல இருக்கிற அம்மாம் ஆபீசர்ஸ்சும் கேக்குறாங்கம்மே... திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிற அத்தனை கெமிக்கல் ஃபேக்டெரிகளும் செம்மரக் கட்டை அரவை மில்லுகளும் கார் லாரி உதிரிப்பாகத் தொழிற்சாலைகளும் சுற்றுச் சூழலுக்கே சவால் விடுதும்மே... அத்தனை கம்பெனிகளும் கலெக்டர் பாதுகாப்புலதான் காரியம் சாதிக்கிறதா... சொல்லுறாங்க. பாலை பாதுகாக்கிறதா பூனைக்கெல்லாம் விருது கொடுக்கிறாங்கம்மே.

நாச்சியார்: யாரு, எப்ப, எங்கே, யாருக்கு சப்போர்ட்டா இருப்பாங்கனு யாருக்குத்தா தெரியும்?

காவேரி: அதெல்லாம் மதில் மேல் பூனை மாதிரிதான்... ஆமா... நீங்க யாரைப் பத்திச் சொல்றீங்க நாச்சியார்?

நாச்சியார்: எங்க புதுக்கோட்டை சாருபாலா தொண்டைமான் இருக்காகளே... இந்தம்மா முதல்ல காங்கிரஸ் அப்புறம் த.மா.கா. அப்புறம் அ.தி.மு.க. அ.தி.மு.க.வில் இவர் இருக்கும்போது இவரோட அரண்மனை சுவத்தில டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவா யாரோ விளம்பரம் எழுதிப்பிட்டாக. டென்ஷனான இந்தம்மா பொழுது சாயுறதுக்குள்ள கூலிக்கு ஆள் வச்சு அந்த விளம்பரத்தையெல்லாம் அழிச்சுட்டுத்தான் மறுவேலை பாத்தாக.

பவானி: அதில என்னாங்க தப்பு?

நாச்சியார்: ஆனால், அழிச்ச மூணாம் நாளே தினகரன் கட்சியில சேர்ந்தாங்க. அதுகூட பரவாயில்ல. இப்ப அந்த அரண்மனைச் சுவர்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரொம்பப் பெரிய பேனர் வச்சிருக்காங்க. இதை எப்படி அனுமதிச்சாங்க. உண்மையிலேயே சாருபாலா தொண்டைமான் எந்தக் கட்சியில இருக்காக?

காவேரி: இவங்க எல்லாரும் எங்கே வேணும்னாலும் இருக்கலாம். ஆனால் ஏழை பாளைகள், அடுத்தவேளை சோத்துக்கு வழிதெரியாதவங்க கவர்மெண்ட் ஆபீஸ் வராண்டாவுல கூட இருக்க முடியலை.

மெரினா: நீ எந்த நூற்றாண்டுல இருக்கே காவேரி?

thinnaikatcheryகாவேரி: கண்ட கனவைச் சொல்லலை. நான் நேர பாத்து அனுபவிச்சதைச் சொல்றேன். என் சொந்தக்காரப் பொண்ணு கல்யாணம். அதுக்காக தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கிறதுக்காக நாகை மாவட்டம் செம்பனார் கோயில் யூனியன் ஆபீசுக்கு போயிருந்தோம். வெய்யிலு எரிமலையா பொசுக்குது. எழுபது எம்பது பெண்கள்... எல்லாரும் கிராமத்துக்காரங்க. தாலிக்கு தங்கம், வீடு கட்டும் திட்டம், மகளிர் குழுக் கூட்டம்னு வந்திருந்தாங்க. வெயில் பொசுக்குதேன்னு எல்லாப் பெண்களும் வராண்டாவுல, போக வர எடஞ்சல் இல்லாம உக்காந்திருந்தாங்க. சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாங்க. அந்த நேரம் கமிஷனர் அருண் நாலஞ்சு காண்ட்ராக்டர்களோட வந்தாரு.

நாச்சியார்: யாரு... புதுசா வந்திருக்கிற ஒன்றிய ஆணையர் அருண்தானே... அவருக்கு ஏழைபாளைகளைக் கண்டா கொஞ்சம்கூட புடிக்காதுக்கா... பணம் புரளும் காண்ட்ராக்டர்களையும் பதவி புரளும் அரசியல்வாதிகளையும்தான் அவருக்குப் புடிக்கும்.

காவேரி: அதேதான். ஊழியர்களைக் கூப்பிட்டாரு. "யோவ் இதென்ன சத்திரமா சாவடியா வரப்பா, வாய்க்காலா? கவுச்சி நாத்தம் தாங்க முடியலை. முதல்ல இவங்களைத் துரத்துங்கய்யா'னு கொடூரமா சத்தம் போட்டாரு. ஊழியர்கள் வந்தாங்க. சீக்கிரமா கிளம்புங்கனு எல்லாப் பெண்களையும் விரட்டினாங்க. உழைக்கும் மக்களைப் பார்த்தாலே அந்த கமிஷனருக்கு கவுச்சி அடிக்குதாம். அத்தனை பெண்களும் அந்த ஆளை நெனைச்சுக் காறித் துப்பிட்டு வெளியில வந்தாங்க. நாச்சியார்: எங்க ஊரு அக்கா ஒருத்தர் அமைச்சரவைக்கு உள்ளே போக முடியாம பொங்கிப் பொருமிக்கினு இருக்காக.

பவானி: யாரைச் சொல்றீங்க? கோகுல இந்திராவையா?

நாச்சியார்: அவுகளைத்தான். 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வரட்டும். ஏதாச்சும் இடைத்தேர்தல் வரட்டும். சீட்டும் கொடுத்து ஜெயிக்கவும் வச்சு மந்திரி சபையை மாத்த வச்சு, இப்ப அமைச்சர் சரோஜாகிட்ட இருக்கிற சமூகநலத்துறையை வாங்கித் தர்றம்னு செங்கோட்டையனும் சி.வி.சண்முகமும் பிராமிஸ் பண்ணுறாகளாம். நம்பிக்கைதானே அரசியல்.

மெரினா: எதையும் நம்பியிருக்க முடியாது. எந்திரிங்க இன்னும் ஏழெட்டுப் புதர்கள்தான் இருக்கு. அதையும் வெட்டி வேர் பறித்துவிடலாம். இல்லைனா சீமை விஷக்கருவையை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை வேணும்னு கோர்ட்டுக்கு போயிடப் போறாங்க.

-இளையர், ஜெ.டி.ஆர்., செல்வகுமார், அருண்பாண்டியன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்