காவேரியின் வெளிநாட்டுத் தோழியரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக, திருச்சி விமானநிலையத்தில் காத்திருக்கிறார்கள் நக்கீரன் மகளிரணியினர்.

Advertisment

மல்லிகை: ஓ.பி.எஸ். முதலமைச்சரா இருந்தப்ப, திருச்சி சட்டம்-ஒழுங்கு டி.சி.யா செல்வாக்கோட இருந்தாரு மயில்வாகனன். எடப்பாடி முதலமைச்சரானதும் மயில்வாகனனை மதுரைக்கு டிரான்ஸ்பர் செஞ்சாங்க. அவரால திருச்சியை விட்டுட்டு மதுரையில இருக்க முடியலை. மறுபடியும் முயற்சிபண்ணி, ஓ.பி.எஸ். கிருபையில் திருச்சிகே டி.சி.யா இப்ப வந்திருக்காரு அவரு. அப்படி என்னதான் அவருக்கு திருச்சி மேல காதல்?

காவேரி: முதல்ல இங்கே காவல்துறை சட்டம்-ஒழுங்கு டி.சி.யா இருந்தார் அவர். மாற்றப்பட்டதும் அந்த இடத்துக்கு நிஷா ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டாங்க. திருச்சில இப்பவும் சட்டம்-ஒழுங்கு டி.சி. நிஷாதான். மயில்வாகனன் போக்குவரத்து டி.சி.யாகத்தான் இப்ப வந்திருக்காரு. மயில்வாகனனின் மனைவி கூட்டுறவு சொஸைட்டி பதிவாளரா திருச்சியிலதான் வேலை பார்க்கிறாங்க. ரெண்டுபேரும் ஒரே ஊர்ல இருக்கலாம்னு மயில்வாகனனும் இங்கே வந்திருப்பாரு. இன்னொண்ணும் கேள்விப்பட்டேன். நிஷாவை இங்கேயிருந்து துரத்திட்டு, மயில்வாகனனை சட்டம்-ஒழுங்கு டி.சி. ஆக்கணும்ங்கிற முயற்சிகள் மறைமுகமா நடந்துக்கினு இருக்கு.

நாச்சியார்: நிஷா எப்படிப்பட்டவங்க?

காவேரி: கொஞ்ச வயசு. துறுதுறுனு இருக்காங்க. நல்லா வேலை செய்றாங்க. கை சுத்தமா இருக்காங்க. ஆனா நிஷாவை விட மயில்வாகனன் சூப்பர்ங்கிற மாதிரி உளவுத்துறை மூலமா மேலிடத்துக்கு சிபாரிசுகள் போயிட்டு இருக்கிறதா கேள்வி.

Advertisment

thinaikatchery

பவானி: ராஜீவ்காந்தி கொலை சிறைவாசி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறாராமே?

காமாட்சி: அவங்க ஏழுபேரையும் விடுதலை செய்யலாம்னு 9-9-18 அன்னிக்கு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பினாங்க. அஞ்சு மாசம் ஆச்சு. இன்னைக்கிவரை முடிவு எதுவும் எடுக்கலை. இதைக் கண்டித்து வேலூர் ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன் ரெண்டு வாரம் முன்னாடி உண்ணாவிரதம் இருந்தார். அதிகாரிகள் சமாதானப்படுத்தி உண்ணாவிரதத்தை கைவிட வச்சாங்க. மறுவாரம் மறுபடியும் முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

பவானி: ஓகோ... கணவருக்கு ஆதரவா மனைவி நளினியும் உண்ணாவிரதமோ?

Advertisment

காமாட்சி: சாதாரண உண்ணாவிரதமில்லை. சிறையிலிருந்து விடுதலையாகும்வரை அல்லது உடம்பிலிருந்து தன் உயிர் விடுதலையாகும்வரை உண்ணாவிரதம்னு நளினி உறுதியா இருக்காங்களாம்.

கங்கை: கணவர் கதிர்வேலுவை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தனது வீட்டுக்கும் தீ வைத்துக் கொளுத்திவிட்டு நாடகமாடிய.... மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (எம்.எல்.) கட்சியின் விழுப்புரம் மாவட்ட மகளிரணிச் செயலாளர் செண்பகவள்ளியை போலீஸ் அரெஸ்ட் பண்ணீருச்சு.

மல்லிகை: அந்த செண்பகவள்ளியைப் பத்தி நானும் கேள்விப்பட்டேன். லெனின்ற மகன் காலேஜ்ல படிக்கிறான். ஸ்டாலின்ற மகள் ஹைஸ்கூல்ல படிக்கிறாள். புருஷன்-பொண்டாட்டி ரெண்டுபேரும் தோழர்கள். இந்த வயசுல புருஷனை வெட்டிக் கொலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏன்?

thinaikatchery

கங்கை: சென்னையில ஒரு கம்பெனியில் வேலை பார்த்த கணவர் வேலையை விட்டுவிட்டார். கம்பெனியில் கிடைச்ச ரெண்டு மூணு லட்சத்தை குடிச்சே அழிச்சிட்டாராம். ரெண்டுபேருக்கும் தினம் தினம் சண்டை. ஏதோ டென்ஷன்ல வெட்டிக் கொன்னு போட்டுட்டாங்க. அப்புறம்... "நாங்க புறம்போக்குல குடிசை போட்டு வாழ்ந்தோம். குடிசையை காலிபண்ணச் சொல்லி நாலஞ்சுபேரு தினம் தினம் ரவுடித்தனம் செஞ்சாங்க. அவங்கதான் என் கணவரையும் வெட்டிக் கொன்னுட்டு, குடிசைக்கும் தீவச்சு கொளுத்திட்டாங்க'னு போலீஸ்ல வாக்குமூலம் கொடுத்தாங்களாம். கடைசில உண்மை வெளில வந்திருச்சு.

நாச்சியார்: நாயுடு சமூகத்து தனமணி வெங்கடபதியை ம.தி.மு.க.வில் இருந்து நீக்கிவிட்டாராமே வைகோ?

வாணி: பின்னே என்னங்க. "தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நாங்கதான் "தமிழகத்தின் பூர்வகுடிகள்... தமிழர்கள்தான் வந்தேறிகள்'னு சாதிச் சங்க கூட்டத்துல பேசினால் வைகோ பொறுத்துக்கொள்வாரா? அடிப்படை உறுப்பினர் கார்டைக் கூட பிடுங்கிக்கொண்டுவிட்டாருங்க.

மல்லிகை: ஏய்... எனக்கு ஒண்ணும் வௌங்கல. யாரு தனமணி? என்ன நடந்துச்சு?

வாணி: வைகோ கட்சியில தலைமைக் கழகப் பேச்சாளராகவும் ஊடக விவாதக்குழு உறுப்பினராகவும் இருந்தவங்கதான் தனமணி வெங்கடபதி. கோயமுத்தூர் கொடீசியா ஹால்ல, "கம்மவார் நாயுடு சங்க'க் கூட்டம் நடந்துச்சுங்க. அந்தக் கூட்டத்துல மைக்பிடிச்ச தனமணி, கொஞ்சம் ஓவரா சாதிப் புராணம் பாடிட்டாங்க. அதனால்தான் கட்சியை விட்டு நீக்கம்.

மல்லிகை: "கன்னடமும் களிதெலுங்கும், கவின் மலையாளமும் துளுவும் தமிழின் உதிரத்திலிருந்து உதித்தவை'னு மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை சொல்லீருக்காக. தாய் தொன்மையினா வாரிசுகளும் தொன்மையானவங்கதானே! ஏதோ பேசிப்பிட்டாக... பேசுனது தப்புத்தான்னு வருத்தமும் தெரிவிச்சிருக்காக.

காவேரி: நாம எதிர்பார்த்துக் காத்திருந்த விமானம் லேண்ட் ஆயிருச்சாம்... கிளம்புங்க... போய் வரவேற்கலாம்!

-எஸ்.பி.சேகர், து.ராஜா, அருள்குமார், ஜெ.டி.ஆர்.