சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், அஷ்டலட்சுமி கோயிலின் முன் மணலில் விளையாடும் குழந்தைகளை ரசித்தபடி, நக்கீரன் மகளிரணியின் திண்ணைக் கச்சேரி தொடர்ந்தது.

மல்லிகை: இப்படி விளையாடவிட்டு, பாடவிட்டு, ஆடவிட்டு, படிக்க வைத்து, நடிக்க வைத்து ரசிக்க வேண்டிய குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் பொறுக்கிகளை நினைச்சாலே கோபம் பத்திக்கிட்டு வருதுடி.

thinaikatchery

Advertisment

மெரீனா: கடுமையான சட்டங்கள், ஈவு இரக்கமில்லாத தண்டனைகள்னு தெரிஞ்சும் அதில் ஈடுபடுகிற காமவெறியர்களை சுட்டுக் கொல்லணும்க்கா...

காமாட்சி: தமிழகத்தில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? பதில் தாக்கல் செய்யுங்கள்னு தேசிய மனித உரிமை ஆணையம் அரசுக்கும் டி.ஜி.பி.க்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த அளவுக்கு சிறார்கள் மீதான பாலியல் சீண்டல் இங்கே அதிகமாகியிருக்கு.

கங்கை: திடீர்னு எதுக்காக ஆணையம் இப்படி ஓலை அனுப்பியிருக்கு?

Advertisment

காமாட்சி: திருவண்ணாமலை ரமணா நகர் அருணா குழந்தைகள் விடுதியில் நடந்த அத்துமீறல்களை அறிந்து தன்னிச்சையாக இப்படியொரு உத்தரவை அனுப்பியிருக்கிறது ஆணையம்.

மல்லிகை: அங்கே என்ன நடந்தது. எனக்குத் தெரியாதே..!

kiranbediகாமாட்சி: அருணா விடுதியை வினோத்குமார் என்பவனும் அவன் மனைவியும்தான் நடத்தினாங்க. 11 வயதில் இருந்து 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் இங்கே தங்கி, ஸ்கூலுக்கு போயிட்டு வந்தாங்க. அந்த வினோத்குமார் என்ன பண்ணீருக்கான்னா தினமும் ராத்திரியில அந்தக் குழந்தைகளுக்கு ஆபாச படங்களைப் போட்டுப் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கான். அதுமட்டுமில்லாம அந்தக் குழந்தைகளை பயமுறுத்தி நிர்வாண டான்ஸ் ஆடச் சொல்லியிருக்கான்.

மெரீனா: அந்தப் பன்னியோட மனைவியும் அங்கேதானே இருந்திருப்பா?

காமாட்சி: அவளும் உடந்தைதானாம். ஜனவரி 29 அன்னைக்கி, குழந்தைகள் நல அலுவலர், திருவண்ணாமலை நகர காவல்நிலையத்துல புகார் கொடுத்திருக்கிறார். விசாரணைக்குப் பிறகு அந்த வினோத்குமாரை அரெஸ்ட்பண்ணி ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறது போலீஸ்.

மெரீனா: அந்த 15 சிறுமிகளின் கதி?

காமாட்சி: அந்தக் குழந்தைகளை அரசு விடுதிகளுக்கு மாற்றியிருக்காங்க. இந்தக் கொடுமையை அறிந்துதான் தேசிய மனித உரிமை ஆணையம் அரசுக்கும் டி.ஜி.பி.க்கும் கடிதம் அனுப்பியிருக்கிறது.

கங்கை: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மேல, சைபர் கிரைம் போலீஸ்ல புகார் செஞ்சிருக்காங்க தெரியுமா?

மெரீனா: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மேல சைபர்கிரைம்ல புகாரா? கொடுத்தது யாரு?

districtcollector

கங்கை: வேற யாரு? நம்ம கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள்தான்.

மல்லிகை: விஷயம் வித்தியாசமா இருக்கும்போல... சொல்லு... சொல்லு?

கங்கை: ஆளுநர் கிரண்பேடி அதிகார வரம்பு மீறுகிறார். போட்டி அரசாங்கம் நடத்துகிறார் என்று இந்த மூன்று கட்சிகளும் இணைந்து 28-01-19 அன்று பிரச்சாரம் செய்தன. மறுநாள் மாநில உரிமைக்காக கருத்தரங்கம் நடத்தினார்கள். இதைப்பற்றி விமர்சனம் செய்த ஒரு அதிகாரி ""இதைக் கேர்பண்ண வேண்டாம். கம்யூனிஸ்ட்டுகள் காசு வாங்கிக்கொண்டு ரோட்ல சுத்துவாங்க'' என்று கிரண்பேடிக்கு வாட்ஸ்ஆப்பில் செய்தி அனுப்பினார். அந்தச் செய்தியை அனைத்து வாட்ஸ்ஆப் குழுவிலும் கிரண்பேடி பகிர்ந்துவிட்டாராம்.

மெரீனா: இதற்குத்தானா?

கங்கை: அப்படிப் பகிர்ந்தது தவறு. இடதுசாரிகளைப் பற்றிய தவறான தகவல் அது. அதைப் பரப்பியதற்காக வருத்தம் தெரிவிக்கணும்னு கிரண்பேடிக்கு கடிதம் எழுதினார்கள். அவர் கேட்கவில்லை. பிறகு கிரண்பேடியை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். அதில் முதலமைச்சர் நாராயணசாமியும் கலந்துகொண்டார். அப்புறமும் வருத்தம் தெரிவிக்கவில்லை.

மல்லிகை: இடதுசாரிகள் உடனே சைபர் கிரைமில் புகார் செய்தார்களாக்கும். சரி... சைபர் கிரைம் என்ன செய்தது?

கங்கை: அது கையைப் பிசைந்தது. இப்ப கிரண்பேடி மீது வழக்குப் போடப்போறாங்களாம் இடதுசாரிகள்.

மல்லிகை: நான் தேனி நகரச் செய்தி ஒண்ணு சொல்றேன்.

காமாட்சி: தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பற்றியதா?

மல்லிகை: அவுகளும் வர்றாக. ஆனால் இது தேனி நகருக்குள் முப்பது, நாற்பது வருஷத்து முன்னாடிவரை தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருந்த ராஜவாய்க்கால் என்ற அழகிய சிற்றாறு பற்றிய தகவல்; அதை மீட்டெடுக்க வேண்டியது பற்றிய செய்தி.

மெரீனா: ராஜவாய்க்காலை கடத்தியது யாருங்க?

மல்லிகை: ரெண்டு கிலோமீட்டர் சுற்றளவில் ஓடிக்கொண்டிருந்த ராஜவாய்க்காலின் தடமில்லாமல் ஆக்கிரமிப்பு செய்து பெரிய பெரிய கட்டடங்களை எழுப்பிவிட்டார்கள். வீடுகள், கடைகள், ஜவுளிக்கடைகள் என பலநூறு கட்டடங்கள். வாய்க்காலை மீட்பதற்காக அத்தனைபேருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் ஆட்சியர் பல்லவி பல்தேவ்.

காமாட்சி: அவ்வளவு ஈஸியான விஷயமா இது.

மல்லிகை: நோட்டீஸைப் பார்த்ததும் கடைக்கார வி.ஐ.பி.கள் எல்லாரும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸை போய் பார்த்திருக்காங்க. ஓ.பி.எஸ்.ஸும் ஆட்சியரிடம் பேசியிருக்கிறார். ஆனால், ஆட்சியர் பல்லவி பல்தேவ் ""சாரி சார்... ராஜவாய்க்கால் மீட்பு எனது லட்சியம் சார்... ப்ளீஸ்...'' என்று சிபாரிசுகளை புறக்கணித்துவிட்டாராம்.

மெரீனா: பல்தேவ் மனதளவில் பலமானவராகத்தான் இருக்கிறார்.

-சக்தி, து.ராஜா, சுந்தரபாண்டியன்