நாமக்கல் நகரின் மணிமுடியாக திகழ்கிறது மலைக்கோட்டை. சங்க கால சான்றுகளையும், நீராழி மண்டபத்தையும் கொண்டு விளங்கும் இந்தக் கோட்டையில்தான் நக்கீரன் மகளிரணியின் இன்றைய கச்சேரி.
கோமுகி: கடலூர் மாவட்டத்திற்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கும் தமிழ்நாட்டார் கலைகளுக்கும் மகத்தான பெருமையை தேடிக்கொடுத்து, தானும் சாதனை மாணவியாகி இருக்கிறார் பதினெட்டே வயதான ஏஞ்சலின் ஷெரீன்.
மெரீனா: எந்த ஊர் பொண்ணு?
கோமுகி: கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி அமிர்தராஜ்-ஜீவா இணையரின் மகள்தான் ஏஞ்சலின். கும்பகோணத்தில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படிக்கிறார்.
மல்லிகை: சாதனைகள், கலைகள்னு சொன்னீயே?
கோமுகி: போன மாதம் சென்னையில "யூனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரிகார்ட்' சார்பில் பல நாட்டினர் கலந்துகொண்ட சாதனை நிகழ்ச்சி நடந்தது. அதில நம்ப ஏஞ்சலின், மயிலாட்டம், ஒயிலாட்டம், மான் கொம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், காவடியாட்டம்னு 20 வகை நாட்டாரியல் நடனங்களை ஒருமணி நேரத்தில் ஆடி, சாதனை படைத்திருக்கிறார்.
காவேரி: ஏய் அந்தப் பொண்ணா? அதுக்கு இதெல்லாம் சர்வசாதாரணமாச்சே. பதினெட்டு வயசுக்குள்ளேயே 800 மேடைகளில் நாட்டுப்புற கலைகளை நிகழ்த்திக் காட்டி 55 விருதுகளை, பட்டங்களை, பதக்கங்களைப் பெற்றவராச்சே.
கோமுகி: உண்மைதான். ஆனால் சாதனைகளைப் போலவே வேதனைகளுக்கும் உரியவர் ஏஞ்சலின் ஷெரீன். வாழ்நாள் முழுக்க தீர்க்கவே முடியாத அட்ரினால் என்ற நோயோடும் அதற்கான இடைவிடா மருந்து, மாத்திரைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் இந்த மாணவி.
காவேரி: வாட்டும் நோய் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வாழ்நாள் இலட்சியமாக இப்போது, "புழக்கத்தில் இல்லாத நாட்டுப்புறக் கலைகளை கண்டறிந்து மேடையேற்றுவேன்' என்று சபதமெடுத்திருக்கிறாராம்.
கோமுகி: ஆமா காவேரி, முன்பு 140 வகையான நாட்டாரியல் கலைகள் இருந்திருக்கு. இப்ப 50-க்கும் குறைவானவையே புழக்கத்தில் இருக்கு. மீதியுள்ள 90 கலைகளை கண்டறிந்து மேடையேற்றுவதையே லட்சியமாகக்கொண்டிருக்கிறார் இந்த மாணவி.
பவானி: புதுவருஷப் பிறப்பன்னிக்கு நூற்றுக்கு மேற்பட்ட குடிமகன்களை கேக்கில் அடித்து சத்தியம் செய்ய வைத்திருக்கிறார், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி.
மெரீனா: அது டாஸ்மாக் அமைச்சர் தங்கமணியின் சொந்தத் தொகுதியாச்சே.
பவானி: ஆமாமுங்க... அங்கேதான் தனது புதுவருஷ லட்சியத்தை அரங்கேற்றியிருக்கிறார் காவல் ஆய்வாளர் தேவி.
காமாட்சி: இன்ட்ரஸ்டிங்... சொல்லுங்க, சொல்லுங்க.
பவானி: குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு என்னும் இடத்தில் தலைகால் புரியாத சரக்கை ஏற்றிக்கொண்டு கோஷம் போட்டுக்கொண்டிருந்தார்கள் குடிமகன்கள். நடுராத்திரி பன்னிரெண்டுமணியைப் போல் அங்கே வந்தாங்க இன்ஸ் தேவி.
மல்லிகை: இன்னக்கி அபராதத்தை போட்டு தீட்டப்போறாங்கனு நினைச்சிருப்பாங்க குடிமகன்கள்.
பவானி: ஆனால் இன்ஸ்பெக்டரம்மா அப்படிச் செய்யலை. டிசம்பர் 31 ராத்திரி பனிரெண்டு மணி ஒரு நிமிஷம்... கோஷம் போட்டு ஆடிக்கொண்டிருந்த அத்தனைபேரையும் ஒரே இடத்துக்கு வரவச்சாருங்க. தண்ணியடிச்சிட்டு அந்த வழியாப் போன, வந்த டூவீலர்களையும் நிறுத்தினாங்க. ஒரு பெரிய கேக்கை கொண்டுவரச் செஞ்சாங்க. நூற்றுக்கும் மேற்பட்ட "குடிமகன்களோடு' ஹேப்பி நியூஇயரை கொண்டாடினாங்க இன்ஸ் தேவி.
மெரீனா: இதுதான் புரட்சிகர லட்சியமா?
பவானி: இதுக்குப் பிறகுதான் அந்த லட்சிய உறுதிமொழி எடுப்பு விழா அரங்கேறியது.
காவேரி: லட்சிய உறுதிமொழியா?
பவானி: ஆமா புத்தாண்டு உறுதிமொழி. குடிமகன்கள் அத்தனைபேரையும் இனிமேல் குடிக்கமாட்டேன்னு சத்தியம் செய்து உறுதிமொழி எடுக்கச் சொன்னாங்க. பாதிக்கு மேற்பட்டோர் சத்தியம் செஞ்சாங்க. தங்களால் குடிக்காம இருக்க முடியாதுனு சொன்னவங்ககிட்ட, "இனிமேல் குடித்துவிட்டு வண்டி ஓட்டமாட்டேன்'னு சத்தியம் வாங்கினாங்க. வித்தியாசமான ஆய்வாளர்னு பெயரெடுத்திட்டாங்க.
மல்லிகை: நாமக்கல் மாவட்டத்தில பார்வை இழப்புத் தடுப்புச் சங்கத்தில் பணியாற்றும் இளவரசி, தன்னோட உயிருக்கு ஆபத்துனு சொல்லி மாநிலத் திட்ட இயக்குநர் மருத்துவர் சந்திரகுமார், திட்ட மேலாளர் மருத்துவர் ரங்கநாதன் ஆகியோர் மீது எஸ்.பி.யிடமும், மகளிர் ஆணையத்திடமும் புகார் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் கேள்விப்பட்டேனே?
பவானி: உண்மைதானுங்க. மாவட்ட திட்ட மேலாளர் ரங்கநாதன், கொள்முதல் செய்த உபகரணங்களுக்கும், மருந்துகளுக்கும் ரசீது இல்லாம இருப்பதை கண்டுபிடித்துக் கேட்டிருக்கிறார். பிரச்சினை பெரிதாகிவிட்டது. இளவரசியின் போராட்டங்களும் புகார்களும் அதிகமானதும், தொகுப்பூதியம் பெற்றுக் கொண்டிருந்த அவரை பணிநீக்கம் செய்துவிட்டார் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம். இப்ப கலெக்டரை எதிர்த்துப் போராடத் துவங்கி இருக்கிறார் இளவரசி.
கோமுகி: போராட்டங்கள், புகார்கள், மூலம் நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் இளவரசி? நான் சொல்றது சரியா?
மெரீனா: சரிதான். இதுவும் ஒரு சாதனைதான். எந்திரிங்க கிளம்பலாம்.
-ஜீவா தங்கவேல், சுந்தர பாண்டியன், இளையராஜா