போலீசின் திருட்டு கேங்க்!

சென்னை -உஸ்மான் சாலையில், பிரபல நகைக்கடையில், மெரினாவின் பழைய செயினைக் கொடுத்துவிட்டு, புதுமாடல் செயினை வாங்கிக் கொண்டு, அருகில் உள்ள பனகல் பூங்காவிற்குள் நுழைந்தது நக்கீரன் மகளிரணி. நகைகள் பற்றியும் அதன் பாதுகாப்பு பற்றியும் பூங்காவில் உட்கார்ந்தபடி அலசினர்.

பரணி: ம.தி.மு.க. மகளிரணி மாநில து.செ. ராணிசெல்வினைத் தெரியுமா?

காமாட்சி: நாகர்கோயில்ல எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட்டு 5,800 ஓட்டு வாங்கினாங்களே அவங்களா?

Advertisment

thinai-katchery

பரணி: அவியதான். போனவாரம் நாகர்கோயில்ல இருந்து அழகியமண்டபத்துக்கு அரசு பஸ்ல போயிருக்காவ. அங்கபோயி இறங்கிப் பார்த்தாக்க... கழுத்தில போட்டிருந்த 15 பவுன் தாலிச் செயினைக் காணலை. போலீஸ்ல புகார் கொடுத்திட்டு ஒருமாசமா அலையிறாவளாம். மலேசியாவில் இருந்த வைகோ ஆறுதல் சொன்னாவளாம்.

மல்லிகை: மத்தவுக திருடுனா போலீஸார் தேடிப் புடிச்சு வாங்கிக் கொடுத்திருவாக. போலீசோட கேங்க் திருடினா கெடைக்கவே கெடைக்காது.

Advertisment

காமாட்சி: நகை திருடுறதுக்கு போலீசே கேங்க் வச்சிருக்குமா?

thinai-katcheryமல்லிகை: பின்னே போலீசுனா சும்மாவா? போன மாதம், பெரியகுளம் பாலசுப்பிரமணி கோயிலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். குடமுழுக்கு நடத்துனாரு. ஆயிரம் வருஷத்துக் கோயில். பயங்கர கூட்டம். குடமுழுக்கு முடிஞ்சதும் "உன் தாலியைக் காணோம்... என் தாலியக் காணோம்'னு 9 பேரு அலறுனாக. மொத்தம் 70 பவுன் தாலிச் செயின்களை அறுத்துகினு பொயித்தாக. ஓ.பி.எஸ்.சுக்கும் அதிர்ச்சிதான். ஸ்பாட்லயே எஸ்.பி. பாஸ்கரனை கூப்பிட்டு "என்னய்யா அநியாயமா இருக்கு... இத்தனை போலீஸ் இருக்கும்போதே ஒன்பது பெண்களின் தாலிக்கொடிகள்... அசிங்கமா இல்லையா'னு சத்தம் போட்டுருக்காரு. களவாணியளைப் புடிக்க தனிப்படையும் போட்டாக.

மெரீனா: தனிப்படை ராஜஸ்தான் போச்சோ?

மல்லிகை: இன்ஸ்பெக்டரம்மா மதனகலா மதுரைக்குப் போயி மல்லிகா, விஜயா, சரஸ்வதினு மூணு பேரை புடிச்சிக்கினு வந்து தென்கரை போலீஸ் லாக்கப்ல போட்டாக.

மெரீனா: ஜெயலலிதாவோட பாதுகாப்புப் பிரிவுல வேலை செஞ்ச மதனகலாவா? க்ளீன் அண்ட் ஸ்ட்ராங்குனு சொல்வாங்களே?

மல்லிகா: லாக்கப்ல வச்சு செமத்தியா விசாரிச்சப்ப அந்த மூணுபேரும் கதறிக்கிட்டே, "தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த், தேனி க்ரைம் எஸ்.ஐ. பாலமுருகன் இவுகள்லாம் எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தர்றவுக. அவுக வரச் சொல்லித்தான் பெரியகுளம் குடமுழுக்குக்கு வந்தோம். அறுத்த தாலிச் செயினையெல்லாம் அவுககிட்ட கொடுத்திட்டோம். இன்னும் எங்க பங்கு வரலை. எங்க மாதிரி ஏழெட்டு கேங்குகள் அவுக கண்ட்ரோல்லதான் இருக்குதுக'னு சொன்னாகளாம்.

காமாட்சி: அடப்பாவியளா? இந்த மூணு மாதத்துக்குள்ள தேனி மாவட்டத்தில 30 இடத்தில 400 பவுன் நகை திருட்டுனு சொன்னாகளே... எல்லாம் போலீஸ் கேங்க் கைவரிசைதானா... அடத்தூ...!

thinai-katcheryமல்லிகை: அந்த இன்ஸ்பெக்டரும் எஸ்.ஐ.யும் குடமுழுக்குல அறுத்த 70 பவுன் தாலிச் செயின்களையும் இன்ஸ்பெக்டரம்மா மதனகலாகிட்ட கொடுத்திட்டு, களவாணி பேர்வழிகளை வெளிய விடச் சொன்னாகளாம். இந்தம்மா விடலை. கேஸ் போட்டு உள்ளே தள்ளிப்பிட்டாக. சம்பந்தப்பட்ட போலீசார்மேல கேஸ் வராம உயரதிகாரிகள் தடுத்துட்டாகளாம். ஆனாலும் களவாணிகளின் கூட்டாளிகளான காக்கிகள் மீது தேனி சரக டி.ஐ.ஜி. ஜோஷிநிர்மல் நடவடிக்கை எடுக்கிறதா சொன்னாராம். தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள்ல கால்வாசி காக்கிகள் களவாணியோட கூட்டாளிகள்தானாம்.

காமாட்சி: பொதுமக்கள் நகையை களவாணிகளும் போலீசும் திருடுதுங்கிறீங்க. நம்ம கோயில்கள்ல உள்ள சாமிகளின் நகையை யார் திருடுவா? சொல்லுங்க பார்ப்போம்.

மெரீனா: அறநிலையத்துறை அதிகாரிகளா?

காமாட்சி: கரெக்ட்டா சொல்றாய்டீ... ஆரணி கயிலாயநாதர் கோயில்ல உண்டியல் பணம் எண்ணியிருக்காக. பணத்தோட அட்டிகை, கம்மல், மோதிரம், பிரேஸ்லெட்னு எட்டு பவுன் நகை இருந்திருக்கு. அதை கோயில் செயல் அலுவலர் சசிகலா எடுத்துக்கிட்டு போயிட்டாகளாம். எல்லா அதிகாரிகளுக்கும் இது தெரியுமாம். ஐம்பொன் சிலைகளே போகுதாம். இந்த எட்டு பவுனெல்லாம் ஒரு திருட்டா? விட்டுட்டுப் போங்கடானு சொல்லிட்டாங்களாம்.

மெரீனா: சென்னையில ஒரு பன்னெண்டு வயசு சிறுமிக்கு நடந்த கொடுமையைப் பத்திக் கேள்விப்பட்டியா?

பரணி: அதுத் தனிச்சேதியா வருது. அதைவிடக் கொடுமை திருவண்ணாமலை தென்றல் நகர்ல உள்ள ரெயின்போ லைப் காப்பகத்தில் நடந்திருக்கு. வெளிய தெரியாம அமுக்கிப்பிட்டாவ.

மல்லிகை: பாலியல் கொடூரமா?

பரணி: அட ஆமாங்கிறேன். அது அனாதைப் பெண் குழந்தைகளுக்கான காப்பகமாம். 11 சிறுமிகள் இருந்திருக்குங்க. அங்கே ஆய்வுக்காகப் போன மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரேணுகாதேவி, அந்தப் பசங்க ரத்தச் சோகையில கஷ்டப்படுறதா நெனைச்சு 11 சிறுமிகளையும் மருத்துவ சோதனைக்காக அனுப்பியிருக்காவ. அங்கே செக் பண்ணப்ப... அத்தனை சிறுமிகளும் பாலியல் கொடுமையால் கொடூரமா பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துச்சாம்.

மெரீனா: கெடுத்த மிருகங்களை கைது பண்ணலையா?

பரணி: மெடிக்கல் ரிசல்ட் வந்து மூணு மாசமாச்சாம். இனிமேயா நடவடிக்கை? ஒரே அமுக்கா அமுக்கிப்பிட்டாவ.

-சக்தி

-து.ராஜா

-மணிகண்டன்