விருதுநகரில் பரபரப்பான மையப்பகுதியில்தான் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜரின் இல்லம் அமைந்திருக்கிறது. அவர் சிறுவயது முதல் வளர்ந்து வாழ்ந்த பாட்டனாரின் வீடு இதுதான். உள்ளே சென்று காமராஜர் பயன்படுத்திய பொருட்களை, படித்த புத்தகங்களை அவரது உருவச்சிலையை பக்தியோடு பார்த்துவிட்டு வெளியே வந்து போர்டிகோ வாசலில் அமர்ந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர்.

நாச்சியார்: இங்கே வரணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். ஆசை இன்னிக்கித்தான் நிறைவேறுச்சு. கலைப் பொருட்களோ, விக்கிரகங்களோ, தொன்மை வரலாறோ இந்த நினைவில்லத்தில் இல்லை. ஆனாலும் நம்ம மனசுக்குப் பிடித்தமான, மரியாதையான இடமா இருக்கில்லையா?

thinaikatchery

Advertisment

காவேரி: இதுல என்ன சந்தேகம்? எளிமை, சிறப்பு, உழைப்பு இந்த நாட்டின் வளர்ச்சியில் அவருடைய நேர்மையான பங்கு எல்லாம் அடங்கிய விஷயமாச்சே... சரி... நாம இப்ப கச்சேரியை தொடங்கலாமா?

நாச்சியார்: கட்சியை வளர்ப்பதற்காக பதவியை துறந்தவர் காமராஜர். அவர் மாவட்டத்தில் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கட்சியைக் கவனிக்காமல் இருக்கிறாக...

மெரீனா: பொடி வைக்காம விஷயத்துக்கு வாங்க.

Advertisment

நாச்சியார்: ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் விருதுநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் கௌரிநாகராஜன் ரெண்டு வருஷத்துக்கு முந்தி கார் விபத்துல இறந்துவிட்டார். ரெண்டு வருஷமா அந்தப் பதவி காலியா இருக்கு. மகளிரணி மா.செ.வாக யாரையும் போடலை, ஏன் தெரியுமா?

மல்லிகை: சரியான ஆள் கிடைக்கலியோ?

நாச்சியார்: விருதுநகர் மகளிரணி ந.செ. தனலட்சுமி, ராசபாளையம் ஒ.செ. கலைச்செல்வி, விருதுநகர் சரஸ்வதி சந்திரசேகர் இவங்க எல்லாம் சரியான ஆட்கள் இல்லையா? இத்தனை எதுக்கு? திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபாவுக்குக்கூட மகளிரணி மா.செ. ஆகணும்ங்கிற கனவு தலைநிறைய இருக்கே?

காவேரி: அப்ப, காரணத்தை நீங்களே சொல்லுங்க.

நாச்சியார்: மகளிரணி மா.செ. ரேஸ்ல இத்தனை பேர் இருக்கிறதாலதான் யாரையும் போடலை. யாரை ஆக்கினாலும் புதுசா எதுவும் பிரச்சினை வருமோங்கிற பயம்தான் காரணம்.

thinaikatcheryபகவதி: செய்யவேண்டியதை சரியான நேரத்தில் சரியா செய்யாட்டியும் பிரச்சினைதானே? நேத்து, குமரி மாவட்ட மீனவர்கள் குறை தீர்ப்புக் கூட்டம் நடந்துச்சு.

மெரீனா: மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே விடுமுறையில் போயிருப்பதா கேள்விப்பட்டேனே?

பகவதி: கலெக்டர் பொறுப்பை கவனிச்சுக்கிற வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில்தான் இந்தக் கூட்டம் நடந்துச்சு.

மல்லிகை: என்ன பிரச்சினை?

பகவதி: குமரிக் கடலோர மீனவ கிராமங்களின் குடிநீர்த் தேவைக்காக "கடலோர கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை' செயல்படுத்திக்கொண்டிருக்கிறது அரசு. இதுவரை 22 கோடி செலவாகிவிட்டதாம். இன்னும் 19 கோடி ரூபாய் வந்தால்தான் திட்டம் முழுமையடையும் என்கிறார்கள் அதிகாரிகள். கலெக்டர் மீது வழக்குத் தொடுக்கப் போகிறோம் என்கிறார்கள் மீனவர்கள்.

மெரீனா: வழக்கா? அதுவும் பொறுப்பு கலெக்டர் ரேவதி மீதா? எதுக்காக

பகவதி: குமரிக் கடலோரம் உள்ள மீனவக் கிராமங்கள் 43தான். ஆனால் மற்ற மக்கள் வாழ்கின்ற 36 கிராமங்களையும் சேர்த்துப்பிட்டாங்க அதிகாரிகள். அப்புறம்... எந்தக் கிராமத்துக்கும் இன்னும் தண்ணி சரியா வரலை. கண்ட கண்ட மட்டமான குழாய்களைப் போட்டு எல்லாம் உடைச்சுக்கிட்டுப் போகுதாம். இதையெல்லாம் கலெக்டர் கவனிக்கலை. இந்த ஊழல்ல கலெக்டருக்கும் பங்கிருக்குனு, குமரி மாவட்ட மீனவர்கள் சொல்றாங்க.

காவேரி: பொறுப்பு கலெக்டர் ரேவதி என்ன சொல்றாங்க?

பகவதி: நான் விடுமுறைக்கால கலெக்டர்தானே... என்னை எதுக்கு இதுல இழுத்து விடுறிய? இதுல எனக்கு சம்பந்தமே இல்லியேனு பரிதாபமா கேட்டாங்க.

மெரீனா: மீனவர்கள் என்ன சொன்னாங்க?

பகவதி: நாங்க வழக்குத் தொடரும்போது யார் கலெக்டரா இருக்காங்களோ, அவங்க கோர்ட்டுக்கு அலையட்டும்னு சொல்றாங்க.

பவானி: அலைச்சல் இல்லாம எதுவும் நடக்காதுங்க. கனிமொழி எம்.பி.யின் கருணையால் நாமக்கல் எம்.பி. சீட்டை பெற்றுவிடும் அலைச்சலில் இருக்காருங்க கொண்டிசெட்டிப்பட்டி ராணி.

நாச்சியார்: யாரு தி.மு.க. நாமக்கல் மா.செ. பதவிக்காக காந்திசெல்வனோடு போட்டி போட்டாகளே, தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி அவுகதானே?

பவானி: ஆமாமுங்க அவங்களேதானுங்க. ராணிக்கு கனிமொழியோட அன்பான ஆதரவு எப்போதும் உண்டுங்க. இந்த தடவை நாமக்கல் எம்.பி. சீட்டா கனியும்னு ராணி நம்புறாங்கங்க.

-சி.என்.இராமகிருஷ்ணன், மணிகண்டன், இளையராஜா