சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவில்லத்தை கவிதை பக்தியோடு பார்வையிட்டது நக்கீரன் மகளிரணி.

மல்லிகை: பாரதியார் ரொம்ப கஷ்டப்பட்டார்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் பெரிய வசதியான வீட்லதானே குடியிருந்திருக்கிறாரு?

thinaikatchery

Advertisment

மெரீனா: அந்தக் காலத்தில் இந்த வீட்ல அஞ்சாறு குடித்தனம் இருந்திருக்கு. அதுல ஒண்ணுல பாரதியார் தன் குடும்பத்தோட வாழ்ந்திருக்காரு.

பரணி: பாரதியார்னாலே பணக்கஷ்டம்தான். அவர் உயிரோட இருந்தப்ப மட்டுமில்லை... இப்பவும்தான்.

காமாட்சி: அவருக்கு இப்ப என்ன கஷ்டம்?

Advertisment

பரணி: எட்டயபுரத்துல ஒவ்வொரு வருஷமும் பாரதியார் பிறந்தநாள் விழாவை டிசம்பர் 11 அன்னிக்கு அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் நடத்துது. பல வருஷமா இதுக்கான செலவை சசிகலா கணவர் "புதிய பார்வை' நடராஜன்தான் ஏத்துக்கினாரு.

காமாட்சி: இந்த வருஷம் நம்ம ஆளுநர்போய் கலந்துகொண்டாரில்லையா!

பரணி: ஆமா! இந்த வருஷம் மைக்செட்டு செலவை ஒருத்தர் ஏத்துக்கினாரு.

மெரீனா: மத்த செலவுகளை?

பரணி: மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன், தாசில்தார் வதனாளையும் கோட்டாட்சியர் விஜயாவையும் அழைச்சு "பாரதியாருக்காக இந்த வருஷம்தான் செலவு செய்து விழா நடத்துறோம். உங்க தரப்புல ஆளுக்கு கொஞ்சம் தாங்க'னு கேட்டிருக்கிறார். கொஞ்சம்தானே சரின்னு சொல்லிட்டாங்க.

மல்லிகை: எவ்வளவு செலவாம்?

பரணி: பந்தல், பேக்கரி, பாத்திர வாடகை, லொட்டு லொசுக்குனு ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்கு பில் கொடுத்திருக்காங்க. ஆளுக்கு அம்பத்தஞ்சாயிரமானு வட்டாட்சியர் வதனாளும் கோட்டாட்சியர் விஜயாவும் ஷாக் ஆயிட்டாங்க. "இன்னும் பட்டுவாடா ஆகலை. தர்றீங்களா, கலெக்டர்ட்ட கம்ப்ளைண்ட் பண்ணவா?'னு பந்தல்காரரும் பாத்திரக்காரரும் மிரட்டுறாங்களாம்.

thinaikatcheryகங்கை: பாரதியார் மட்டுமில்லை... பாரதியார் விழாவும் பஞ்சத்துலதான் ஓடுது. கலெக்டர் மட்டும் கையில இருந்தா கொடுக்க முடியும்? எங்க பெரம்பலூர் கலெக்டர் ஸ்வீட் கடைக்காரருக்கு 3500 ரூபாய் கொடுக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறாரு.

நாச்சியார்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாதானே? அவுகளுக்கு பணக்கஷ்டமா? மனக்கஷ்டமா?

கங்கை: பெரம்பலூர் நகராட்சியில் ஒரு காண்ட்ராக்டர் பைப்லைன் வேலை செய்திருக்கிறார். ஆறுலட்ச ரூபாய் டெண்டர் அது. வேலை செஞ்ச பணத்தை நாலஞ்சு தவணையில வாங்கிவிட்டார். 10 ஆயிரத்து ஐநூறு மட்டும் பாக்கி நின்னுப்போச்சாம். அதுக்காக நடையாய் நடந்த காண்ட்ராக்டர், ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார். ஆட்சியர் சிபாரிசில் அந்தப் பணமும் கிடைச்சிருச்சு. அதுக்காக காண்ட்ராக்டர் வந்து ஆட்சியருக்கு நன்றி சொன்னார். அதுக்கு ஆட்சியர் சாந்தா என்ன சொல்லியிருப்பார்? யோசிச்சுச் சொல்லுங்க பார்ப்போம்.

மெரீனா: அதையும் நீங்களே சொல்லிருங்க?

கங்கை: "வெறும் நன்றியோட போயிடாதீங்க. பெரம்பலூர் அஸ்வின் ஸ்வீட் கடையில 3,500 ரூபாய் பெண்டிங் ஆகிப்போச்சு. அதை செட்டில் பண்ணிட்டுப் போங்க'னு சொன்னாங்களாம்.

நாச்சியார்: இப்படியெல்லாமா சொல்லுவாக. யாராச்சும் கௌப்பி விட்டிருப்பாக!

கங்கை: ஆட்சியருக்கு நன்றி சொல்றதுக்கு காண்ட்ராக்டர் தனியா போகலை. ரெண்டுபேரோட போயிருக்கிறார். அவுக சொல்லித்தான் பலருக்குத் தெரிஞ்சது... எனக்கும் தெரிஞ்சது.

காமாட்சி: திருவண்ணாமலைல லேப் டெக்னீஷியன் ஆனந்தி, 5100 பெண் சிசுக்களை கருக்கலைப்பு செஞ்சு மூணாவது தடவையா அரெஸ்ட்டானதை சொன்னேனே... ஞாபகம் இருக்கா? இப்ப அதே திருவண்ணாமலைல அதே மாதிரி கருக்கலைப்புகளை செய்துகொண்டிருந்த சுகந்திங்கிற டாக்டரை அரெஸ்ட் பண்ணீருக்கு போலீஸ்.

மல்லிகை: டாக்டர்கள் சரியான காரணங்களோடு அபார்ஷன் செய்யக்கூடாதா?

காமாட்சி: கடலாடி கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ், தன் காதலி கர்த்தவ்யாவை மூணு, நாலு தடவை கூட்டிவந்து டாக்டர் சுகந்தியோட அன்பு கிளினிக்ல கருச்சிதைவு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் காதலி கர்த்தவ்யாவை கழட்டி விட்டுட்டு வேறு ஒருவரை மணக்க தயாரானார் ராமராஜ். அந்த கர்த்தவ்யா கடலாடி காவல்நிலையத்திலயும் மாவட்ட நீதிபதி மகிழேந்தியிடமும் புகார் தந்திருச்சு.

மெரீனா: நீதிபதி மகிழேந்தி போளூர்ல இருக்கிற அன்பு கிளினிக்குக்கு போய் விசாரிச்சிருப்பாரு?

காமாட்சி: ஆமா! அவருமட்டும் தனியா போகாம பயிற்சி கலெக்டர் பிரதாப் குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர், சார்புநீதிபதி ராஜ்மோகன்னு நீதிபதிகள் பட்டாளத்தோட போயிட்டாரு. டாக்டர் சுகந்தியோட கிளினிக்ல அபார்ஷனுக்காக ஒரு கூட்டமே காத்திருந்துச்சாம். அதோட அந்த டாக்டரம்மா, எம்.பி.பி.எஸ். மட்டும் படிச்சிட்டு, மகப்பேறு மருத்துவம் பார்த்தாங்களாம். நர்ஸிங் படிக்காத பொண்ணுங்கதான் அங்கே நர்ஸாக இருந்திருக்காங்க. சுகந்தி செஞ்சது சட்டவிரோத கருக்கலைப்பு என்பதால் அவரை கைது செஞ்சிருக்காங்க.

பரணி: இப்ப பாரதியார் இருந்திருந்தால் என்ன பாட்டு பாடியிருப்பார்?

நாச்சியார்: ம்... பெண்சிசுப் பாட்டு பாடியிருப்பார்!

-து.ராஜா, ஜெ.டி.ஆர்., நாகேந்திரன்