தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவர் நக்கீரனின் திருமுருகாற்றுப் படையிலும் திருமுருக கிருபானந்த வாரியாரின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பான இடம்பெற்ற திருத்தலம் திருச்சீரலைவாய் எனப் போற்றப்பட்ட திருச்செந்தூர்.
அருள் மணக்கும் செந்தூர்க் கடலலையின் நுரைமலர்களைப் பார்வையால் வருடியபடி நக்கீரன் மகளிரணியினர் தங்கள் கச்சேரியைத் தொடங்கினர்.
பவானி: சொல்லுங்க பரணி. இப்ப உங்க ஏரியாவுல சூடான செய்தி என்னங்க?
பரணி: போலி சரக்கு அக்கா சகாய ஷீபாவோட அரெஸ்ட்தான், ஹாட் டாபிக்கா ஓடிக்கினு இருக்கு.
மெரீனா: அக்கா... சகாய ஷீபாவா?
பரணி: ஆமா... தமிழ் சினிமாவுக்கு சொர்ணாக்கா மாதிரி, குமரி மாவட்டத்துக்கு சகாய ஷீபா. எங்க குமரி மாவட்டத்துல 122 டாஸ்மாக் "பார்கள்' இருக்கு. அதுல 60 பார்களில் அக்காவோட சரக்குதான் ஓடுது. கான்ஸ்டபிள்ல இருந்து ஏ.டி.எஸ்.பி. வரைக்கும் "படி'யளக்கிற போலி ஒயின் தாதா.
மல்லிகை: படியளக்கிற புண்ணியவதியை எப்படி போலீஸ் பிடிக்குது? இது அவுங்க கொள்கைக்கு முரணாச்சே?
பரணி: குமரி மாவட்டத்துல டாஸ்மாக் சேல்ஸே பாதியா குறைஞ்சு போச்சு. அந்த அளவுக்கு அக்கா சரக்கு செம ஓட்டம். டாஸ்மாக் கடையில ஆகிற வியாபாரத்தைக் காட்டிலும் பார்ல அக்கா சரக்கு அதிகம் விற்பதைச் சுட்டிக்காட்டி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் புகார் கொடுத்துட்டாவ. பத்தாம் தேதியன்னிக்கு குழித்துறை மதுவிலக்கு இன்ஸ் ராதாவோட டீம், ஆரல்வாய்மொழி நெசவாளர் தெருவுல இருக்கிற அக்கா சகாய ஷீபா வீட்டுக்குள்ள நுழைஞ்சது. எங்கே பார்த்தாலும் குவார்ட்டர், ஆஃப், ஃபுல் பாட்டில்மயம். வாட்டர் டேங்க்கை, மிக்ஸ் பண்றதுக்கு பயன்படுத்தியிருக்கு அக்கா.
மெரீனா: யாரும் அக்காவுக்கு சிபாரிசுக்கு வரல்லியா?
பரணி: உள்ளே நுழைஞ்சதுமே அக்காட்ட இருந்த செல்போனை புடுங்கிட்டாவ இன்ஸ்பெக்டர் ராதா. அதுல இருந்த நம்பரெல்லாம் போலீஸ் அதிகாரிங்க மற்றும் லோக்கல் அரசியல்வாதிகளுடையதுதான். அக்கா இப்ப கம்பி எண்ணிக்கினு இருக்காவ.
பவானி: எங்க திருப்பூர் எம்.பி. சத்தியபாமா மாதங்களை எண்ணிக்கொண்டிருக்கிறாருங்க...
காவேரி: எம்.பி. பதவி இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்று எண்ணுகிறாரோ?
பவானி: அதுதானுங்க... எம்.பி. சத்தியபாமா டில்லியிலிருந்து சொந்த ஊரான கோபிக்கு போனவாரம் வந்தாங்க. கட்சி நிர்வாகி ஒருத்தர் அவங்கள பார்க்கப் போனாருங்க. நமக்கு ரொம்ப வேண்டிய நிர்வாகி அவர். அவர்ட்ட ரொம்பவே விரக்தியா பேசியிருக்காங்க எம்.பி.
மல்லிகை: தொகுதியில நல்ல பெயர்தானே? மறுபடியும் ஓட்டுக்கேட்டு போனால் விரட்டமாட்டாங்கள்ல?
பவானி: அதைப்பற்றிய கவலை அவங்களுக்கு இல்லீங்க. மறுபடி சீட் கேட்கிறவங்களுக்குத்தானே அந்தக் கவலை!
பரணி: ஏன் என்னாச்சு?
பவானி: நம்ம கட்சிக்கும் பி.ஜே.பி.க்கும் கூட்டணி உறுதியாகப் போகுது. அவங்களுக்கு 20 சீட்டுவரை கொடுக்கப் போறாங்க. கோவை, திருப்பூர் தொகுதிகள் பி.ஜே.பி.க்குத்தான். திருப்பூர் தொகுதியில வானதி சீனிவாசன் நிக்கப்போறதா சொல்றாங்க. இதையெல்லாம் மீறி சீட் தந்தாலும் இனிமே நான் நிக்கிறதா இல்லை. பனியன் கம்பெனி ஏற்றுமதி, இறக்குமதிய பார்த்துக்கிற வேண்டியதுதான்னு ரொம்ப சலிப்பா சொன்னாங்களாம்.
மல்லிகை: பதவியில இல்லைன்னாலும் மக்களோடு மக்களா நிக்கவேணாமா? அதுதானே அரசியல்வாதிக்கு அழகு. பாருங்க... நம்ம எக்ஸ் எம்.எல்.ஏ. பாலபாரதி, முந்தாநாள் திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்னாடி போராட்டத்துல கலந்துகொண்டார். அப்பிடி இருக்க வேணாமா?
மெரீனா: எதுக்காக பாலபாரதி போராடினாங்க?
மல்லிகை: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்துல ஒரே இடத்துல மூணு ரயில்வே கேட்டுகள். அந்தப் பகுதி மக்கள் ரொம்ப சிரமப்பட்டாக. சிரமத்தைக் குறைக்கிறதுக்காக மேம்பாலம் கட்டுற வேலை 4 வருஷத்துக்கு முந்தி ஆரம்பிச்சாக. ஒரு வருஷம் வேகவேகமா வேலை நடந்துச்சு. அப்புறம் அப்படியே விட்டுட்டாக. பக்கத்துல இருக்கிற ஏரியாவுக்கு ரெண்டு, மூணு கிலோமீட்டர் சுத்திக்கினு போகவேண்டியிருக்கு.
பவானி: அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல்தானே?
மல்லிகை: அவர்கிட்ட ஆயிரம்பேரு ரெண்டாயிரம் தடவை சொல்லிட்டாக. அவர் இன்னக்கி, நாளைக்கினு கடத்துறாரு. வேலை டிலே ஆகுறதுக்கு காரணம், பாலத்துக்கு நிலம் கொடுத்தவுகளுக்கு இன்னும் இழப்பீடு போய்ச் சேரலையாம். இழப்பீடு தொகை போகாததுக்கு காரணமே அமைச்சர்தானாம். இதையெல்லாம் கண்டிச்சுதான் மார்க்சிஸ்ட் பாலபாரதி, மக்களையும் தோழர்களையும் திரட்டி போராட்டம் நடத்துனாக.
மெரீனா: நாளைக்கே பாலத்தை கட்டி முடிச்சிடுவாங்களோ?!
மல்லிகை: இழப்பீட்டுத் தொகையை உடனே கொடுக்க ஏற்பாடு செய்றேன். சீக்கிரம் பாலம் வேலை முடியும்னு மாவட்ட ஆட்சியர் வினய் பிராமிஸ் பண்ணீருக்காருங்க. சும்மா வீட்டுக்குள்ள உக்காந்து புறணி பேசுனா எதுவும் நடக்காது மெரீனா.
பவானி: இதெல்லாம் புறணியில்லை. செய்திகள்... விமர்சனங்கள்... பேசியே ஆகணும். இன்னும் எத்தனையோ செய்திகள் இருக்கு... எந்திரிங்க, கடல்ல காலை நனைச்சிட்டுக் கிளம்பலாம்.
-ஜீவாதங்கவேல், சக்தி, மணிகண்டன்