தமிழ் மூவேந்தர்களின் கொடிக்கு மட்டுமின்றி பல்லவர், சாளுக்கியர், கொய்சலர், ராஷ்டிரகூடர், முகலாயர், நாயக்கர் என அத்தனை கொடிகளுக்கும் இடமளித்து வரவேற்ற ஊர் சேலம்.
பிற்காலத்தில் மதராஸ் மாகாண முதலமைச்சராக, வங்கதேச ஆளுநராக, பாரதத்தின் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த ராஜாஜி, முதன்முதலில் பொறுப்பேற்றது சேலம் நகராட்சித் தலைவர் பதவிதான். சேலம் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டு 151 வருடங்களாகிவிட்டன.
மலைகள் சூழ்ந்த சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நக்கீரன் மகளிரணியினரின் திண்ணைக் கச்சேரி தொடங்கியது.
மல்லிகை: கடமையில் ஆர்வம், சேவையில் தீவிரம், விளம்பர மோகம்னு யார், யார் எப்படி விமர்சனம் செய்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் உங்க கலெக்டர் ரோகிணி.
பவானி: ஆமாமுங்க. சேலம் கன்னங்குறிச்சி ஷஹானாஸ் பேகம், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக் காலேஜ்ல மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். வறுமைப்பாட்டால் படிப்பைத் தொடர முடியலை. கலெக்டர் ரோகிணியை நேர்ல பார்த்து விஷயத்தை தெரியப்படுத்தினாரு... மறுநாளே அந்த மாணவியை அழைத்துக்கொண்டு இந்தியன் பேங்குக்குப் போனாருங்க. பத்தே நிமிஷத்தில் கல்விக்கடன் கிடைச்சிடுச்சு.
மெரீனா: இன்னொரு உதவிûக்கூடக் கேள்விப்பட்டேன். பெற்றோரை இழந்த அண்ணன் தங்கைக்கு...
பவானி: ஆமாமுங்க. சேலம் பெரமனூரைச் சேர்ந்த ஷாலினி, தங்கச்சி உமாவோடும் அண்ணனோடும் வசிக்க சரியான இடமில்லாம கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தாராம். மறுநாள் ஞாயிற்றுக்கிழமைன்னுகூடப் பார்க்காமல் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளை அழைத்துப் பேசி, எருமாபாளையத்தில் ஒரு குடியிருப்பில் ஒரு வீட்டை ஒதுக்கி சாவியை வாங்கி ஷாலினிகிட்ட கொடுத்து ஆனந்தக் கண்ணீர்விட வைத்துவிட்டாராம்.
காமாட்சி: "ஒருநாள் முதல்வர்' அர்ஜுன் மாதிரி கலெக்டர் ரோகிணியும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார்னு சொல்லுங்க.
மல்லிகை: எங்க தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்கூட ரொம்ப அக்கறையா ஸ்பீடா வேலை வாங்குறாக.
மெரீனா: ஆமா அவுங்க பேரும் அடிக்கடி நியூஸ்ல அடிபடுதே... இப்ப என்ன செஞ்சிருக்கிறார்?
மல்லிகை: கம்பம் ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் இருக்குது சிக்காளிக்குளம். கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலையில் தண்ணீர் ஓடைகளின் வழியே ஆலமரத்து குளத்துக்கு வந்து அதிலிருந்து சிக்காளிக் குளத்துக்கு வரும். சிக்காளி குளத்தைச் சுற்றியும் ஆக்கிரமிப்புகள் அதிகமாயிருச்சு. குளத்துக்கு தண்ணி வர்ற ஓடைகளையும் திட்டமிட்டு ஆக்கிரமிச்சி தூர்த்துவிட்டார்கள். இந்தப் பகுதி விவசாயிகள், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் பசியில்லாமல் சாப்பிட வழி செய்யணும்னு 25 வருஷமா போராடினாங்க. எந்தக் கலெக்டரும் செய்யலை. பல்லவி மேடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தையும் ஓடைகளையும் மீட்டுக்கொடுத்திருக்கிறார்.
காமாட்சி: சேலம், தேனி போன்ற மாவட்டங்கள் கொடுத்துவச்ச மாவட்டங்கள்.
கோமுகி: சில அதிகாரிகள் இப்படி நேர்மையாக, கடமைகளைச் செய்வாங்க. சில அதிகாரிகள் நேர்மையா, நாணயமா இருப்பாங்க. இருக்கிறதா சொல்லுவாங்க. ஆனால் எந்த வேலையும் செய்யாமல் புடுச்சு வச்ச புள்ளையாரு மாதிரி சும்மாவே இருப்பாங்க சிலபேரு. எங்க கடலூர் மாவட்ட நல்லூர் ஒன்றிய ஆணையர் வசந்தா இந்த டைப்புதான்.
மல்லிகை: கொஞ்சம் வித்தியாசமான கேரக்டரோ?
கோமுகி: நல்லதண்ணீர்க்குளத்தில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்புகள் எக்கச்சக்கம்.
மெரீனா: குளத்துக்குள்ள ஒரு குளமா?
கோமுகி: குளத்துப்பெயரே ஊருக்கும் ஏற்பட்டால் இப்படிக் குழப்பம் வரத்தான் செய்யும். ஆக்கிரமிப்புகளை அகற்றணும்னு போராடத் தயாரானார் புரட்சிகர கம்யூனிஸ்ட் தலைவர் கோகுல். இதோ நாளைக்கே செய்றேன்னு சொன்னாங்க ஒன்றிய ஆணையர் வசந்தா. ஆனால் செய்யலை. எங்க ஊர்ல அடிப்படை வசதிகளே இல்லைனு மனு மேல மனுவா குடுத்தாங்க பெண்ணாடம் திடீர்குப்பம் ஜனங்கள்...
மல்லிகை: திடீர் திடீர்னு குப்பம் ஏற்பட்டால் வசதிகளைத் திடீர் திடீர்னு செய்ய முடியுமானு ஆணையர் கேட்டாங்களோ?
கோமுகி: ஒரே வாரத்துக்குள்ள உங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்னு பேப்பர்ல எழுதிக் கொடுத்தாங்க ஆணையர் வசந்தா. கொடிக்களம் கிராமத்துல வீடுகளுக்கு கூடுதல் குடிநீர் இணைப்புகள் கொடுக்கச்சொல்லி, பலமுறை சிபாரிசு செய்தார் கடலூர் எம்.பி. அருண்மொழித்தேவன். திட்டக்குடி எம்.எல்.ஏ. கணேசன், கொடிக்களத்துக்கு சிமென்ட் ரோடு போடச் சொல்லி நிதி ஒதுக்கினார், எதையுமே செய்யலை. எல்லாம் செவிடி காதுல ஊதுன சங்கு மாதிரி ஆயிடுச்சு.
மல்லிகை: தவறு செய்ற அதிகாரிகளைக் காட்டிலும் மோசமானவர்கள், தெண்டமாய் உக்காந்து நாற்காலியைத் தேய்க்கும் சோம்பேறிகள்.
காமாட்சி: திருவண்ணாமலையில் பெண் சிசுக் கருக்கலைப்புப் புகழ் ஆனந்தியை, மூன்றாவது முறையாக கைது செய்திருக்கிறது போலீஸ்.
மெனீô: மூன்றாவது முறையாகவா? அப்படின்னா... கருவில் இருப்பது ஆணா, பெண்ணா?னு அடையாளம் கண்டு பெண் சிசுவென்றால் அதைக் கலைப்பதையே கொள்கையா வச்சிருக்கிறாரோ அந்த ஆனந்தி?
காமாட்சி: ஆமா! 2012-இல் ஒரு முறை, 2016-இல் இரண்டாவது முறைனு ஏற்கனவே தமிழக அரசின் மருத்துவத்துறை ரெய்டு நடத்தி கைது செய்து சிறையில் அடைச்சாங்க. ஜாமீன்ல வந்து மறுபடியும் அதே தொழிலை இந்த லேப் டெக்னீஷியன் ஆனந்தி, தன் கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் சில ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியோடு செய்திருக்கிறாரு. இப்ப மூணாவது தடவையா அரெஸ்ட்.
பவானி: வருமானம் கொட்டோ கொட்டுனு கொட்டியிருக்கும்ங்க. அதான் தப்பைத் தொடர்ந்திருக்காங்க.
காமாட்சி: அதேதான். ஸ்கேன்ல ஆணா, பெண்ணானு பார்க்கிறதுக்கு 6000 ரூபாய். கருக்கலைக்கிறதுக்கு 15 ஆயிரம் ரூபாயாம். பத்து வருஷத்துல இதுவரை 5100 பெண் சிசு கருக்கலைப்புகளைச் செய்திருக்கிறாராம் இந்த ஆனந்தி.
நாச்சியார்: டென்ஷனாகாதீங்க... இப்பவாச்சும் சரியான நடவடிக்கை எடுத்து பெண் சிசுக் கருக்களை வாழ வைக்கட்டும்.
-எஸ்.பி.சேகர், சக்தி, து.ராஜா, இளையராஜா